keralam's lamine yamal 
விளையாட்டு

கேரளத்தில் ஒரு லமைன் யமால்! #Lamineyamal

யமாலின் தந்தை மொராக்கோ நாட்டைச் சேர்ந்தவர். தாயார் கினியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். வறுமை காரணமாக, குடும்பம் ஸ்பெயினுக்கு குடிபெயர்ந்தது.

எம். குமரேசன்

ஸ்பெயின் அணியின் நட்சத்திர வீரர் லமைன் யமால் (Lamine Yamal). சமீபத்தில், முடிவடைந்த உலகக் கோப்பை தொடரில் ஸ்பெயின் அணி கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர். கடந்த ஐரோப்பிய கால்பந்து தொடரில் 16 வயது சிறுவனாக ஸ்பெயின் அணிக்காக யமால் களமிறங்கியபோது, உலகமே உற்று நோக்கியது. இந்தத் தொடரில், அரையிறுதியில் கோல் அடித்தும் அசத்தினார் யமால். 16 வயதில் கோலடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

மெஸ்ஸி போன்றே துல்லியமான பாஸிங், வேகமான டிரிபிலிங், நேர்த்தியான ஷூட் அடிப்பதில் யமால் வல்லவர். இதனால், ஐரோப்பிய ஜாம்பவான்களாக இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற பலம் வாய்ந்த அணிகள் கூட யமாலைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்தன.

யமாலின் தந்தை மொராக்கோ நாட்டைச் சேர்ந்தவர். தாயார் கினியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். வறுமை காரணமாக, குடும்பம் ஸ்பெயினுக்கு குடிபெயர்ந்தது. புகழ்பெற்ற பார்சிலோனாவின் கால்பந்து அகாடமியில் ஆறு வயதிலிருந்து யமால் பயிற்சி பெறத் தொடங்கினார். பள்ளிச்சிறுவனாக இருந்தபோதே, பார்சிலோனாவின் சீனியர் அணிக்கு யமால் விளையாடத் தொடங்கி விட்டார். அப்படியே தேசிய அணிக்குள்ளும் நுழைந்து, பங்கேற்ற முதல் உலகக் கோப்பை தொடரில் கோப்பையையும் வென்று சாதனை படைத்து விட்டார்.

உலகக் கோப்பை நடந்த சமயத்தில் தமிழகத்திலும் யமால் பாப்புலரனார். பாண்டிச்சேரியில் கால்பந்து வீரர்களின் ஜெர்சி விற்கும் பெண்மணி ஒருவர், லமைன் யமாலை 'லட்சுமி அம்மாள்' என்று கூறி, ஜெர்சி விற்பனை செய்த வீடியோ வைரல் ஆனது. தற்போது, யமாலைப் பற்றிப் பேசுவதற்கு மற்றொரு காரணம் ஏற்பட்டுள்ளது. அதாவது, யமாலைப் போன்றே முகத்தோற்றமும், உடல் அமைப்பும் கொண்ட கால்பந்து வீரர் ஒருவர் கேரளாவைக் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவரது பெயர் ஆலன் ஜேம்ஸ் (Alan james). கொல்லத்தைச் சேர்ந்தவர்.

Alan james

பெரும்புழா அரசுப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் ஆலன் ஜேம்ஸ் பள்ளி கால்பந்து அணிக்காக விளையாடி வருகிறார். யமால் அட்டாக்கிங் கால்பந்து விளையாடுகிறார். ஆலன் ஜேம்ஸ் தடுப்பாட்ட வீரர். இவருக்கு மிகவும் பிடித்த வீரர் லயனல் மெஸ்ஸிதான். எனினும், யமால் போன்ற தோற்றத்தைப் பயன்படுத்தி வீடியோ வெளியிடத் தொடங்கியுள்ளார். இந்த வீடியோக்கள் வைரலாகிவிட, கேரளாவில் பாப்புலராகத் தொடங்கினார். இவரது இன்ஸ்டா கணக்கில் 200 ஆக இருந்த ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை 20 ஆயிரமாக உயரந்துள்ளது. பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும், ஆலன் ஜேம்ஸை விருந்தினராகவும் அழைக்கத் தொடங்கியுள்ளனர்.

இது குறித்து ஆலன் ஜேம்ஸ் கூறுகையில், ''முதலில் பலரும் என்னை யமால் மாதிரியே இருப்பதாகக் கூறியபோது, நான் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், உலகக் கோப்பை நடந்துக் கொண்டிருந்த போது, நான் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலானது. இதனால், மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். சிறு வயதிலிருந்தே நானும் கால்பந்து விளையாடுகிறேன். ஆனால், எனக்கு தடுப்பாட்டத்தில்தான் ஆர்வம். மெஸ்ஸி எனக்கு பிடித்த வீரர். பிடித்த அணி அர்ஜெண்டினா. நான் வீடியோ வெளியிடுவதற்காக சிலர் என்னை விமர்சனம் செய்கின்றனர். அதைப்பற்றி நான் கவலை கொள்ளவில்லை. பலரும் என்னை நிகழ்ச்சிகளுக்கு அழைக்கின்றனர். நான் யாருக்கும் எந்தத் தொந்தரவும் செய்வதில்லை. என்றாவது ஒருநாள் லமைன் யமாலிடம் இருந்து எனக்கு வாழ்த்துச் செய்தி வரும். அந்த நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்'' என்கிறார்.