Ronaldo and Georgina Rodriguez  
விளையாட்டு

முதல் மகனுக்கு 16 வயது... ஐந்து குழந்தைகளுக்குப் பின் திருமணம் செய்து கொண்ட ரொனால்டோ ஜோடி!

ஐந்து குழந்தைகளையும் ரொனால்டோவும் ஜார்ஜினாவும் வளர்த்து வருகின்றனர்.இந்த நிலையில், இந்த தம்பதிகள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

எம். குமரேசன்

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் அவரது நீண்ட நாள் காதலி ஜார்ஜினா ரோட்ரிகஸும் (Georgina Rodriguez ) திருமணம் செய்து கொண்டுள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு இருவரும் சந்தித்தனர். கண்டவுடன் காதல் கொண்டனர். சுமார் 10 ஆண்டு காலம் காதலித்து, 5 குழந்தைகள் பிறந்த பிறகு, தம்பதியாக இருவரும் மாறியுள்ளனர்.

இந்த தம்பதியின் முதல் மகன் ரொனால்டோ ஜூனியருக்கு 16 வயதாகிறது. வாடகைத் தாய் மூலம் பிறந்த இரட்டைக் குழந்தைகளான மேட்டியோ (Mateo) ஈவா மரியா (Eva Maria) ஆகியோரும் ரொனால்டோவின் வாரிசுகள். பின்னர், 2017ஆம் ஆண்டு அலானா (Alana) 2022ஆம் ஆண்டு பெல்லா (Bella) என இரு மகள்கள் பிறந்தனர்.

தற்போது ஐந்து குழந்தைகளையும் ரொனால்டோவும் ஜார்ஜினாவும் வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆகஸ்ட் 11ம் தேதி போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பன் அருகேயுள்ள ரொனால்டோவின் ஆடம்பர பங்களாவில் திருமணம் நடந்தது. இந்தத் தம்பதியின் ஐந்து குழந்தைகளும் திருமண நிகழ்வில் பங்கேற்றனர். ரொனால்டோவின் நெருங்கிய நண்பர்கள் நான்கு பேர் திருமணத்துக்கு சாட்சிக் கையெழுத்து போட்டுள்ளனர். இந்தத் திருமணத்தில் பங்கேற்க இந்த நான்கு பேரை மட்டுமே ரொனால்டோ வெளியில் இருந்து அழைத்திருந்தார்.

இந்தத் தனிப்பட்ட திருமண நிகழ்ச்சியில் ரொனால்டோவின் தாயார் டோலோரஸ் அவெய்ரோ (Dolores Aveiro) மற்றும் உடன்பிறந்தவர்களான ஹியூகோ (Hugo) எல்மா (Elma) மற்றும் கேட்டியா (Katia) ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. ஜார்ஜினாவின் சகோதரி இவானா (Ivana) ரெனால்டோவின் நீண்டகால நண்பர் மிகுவல் பைக்ஸாவ் (Miguel Paixao) மற்றும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நகை வியாபாரியான ஜோஸ் ரோட்ரிக்ஸ் சாங்கில் (Jose Rodriguez Sangil ) இவரது மனைவி மோனிகா கோன்சலஸ் ( Monica Goncalez) ஆகியோர் மட்டுமே திருமணத்தில் பங்கேற்று சாட்சிக் கையெழுத்துமிட்டனர்.

ronaldo and his mother

ரொனால்டோ தனது தாயார் மீது மிகுந்த பாசம் கொண்டவர். இளம் வயதிலேயே தந்தையை இழந்த ரொனால்டோவை தாயார்தான் கஷ்டப்பட்டு வளர்த்தார். ஆனாலும், தனது திருமணத்துக்கு ரொனால்டோ தாயாரை அழைக்காதது கேள்வியை எழுப்பியுள்ளது. போர்ச்சுகல் டி.வி நிகழ்ச்சிகளிலும் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது.

அவ்விவாதங்களில் ரொனால்டோ தனது திருமணம் குறித்து தாயார் மற்றும் உடன் பிறந்தவர்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றும் கடைசி நேரத்தில் மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டதால் தாயார் பங்கேற்கவில்லை என்றும் தகவல்கள் பரிமாறப்பட்டன.

எனினும், ரொனால்டோ தனது இன்ஸ்டா பக்கத்தில் திருமணப் புகைப்படத்தை பதிவிட்ட போது, அவரது தாயார் 'இதய' எமோஜியை பதிவிட்டு, திருமணத்துக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். ஜார்ஜினாவால்தான் ரொனால்டோவின் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திருமணத்துக்குப் பிறகு ரொனால்டோ புதிய கால்பந்து சீசனுக்காக அல்-நஸ்ர் அணியுடன் இணைந்துள்ளார். மறுபுறம், ஜார்ஜினா தனது மாடலிங் பணிகளுடன் குடும்பத்தையும் கவனித்து கொள்கிறார். இதற்கிடையே, ரொனால்டோ' இந்த ஆண்டில் தனது கால்பந்து வாழ்க்கை முடிவுக்கு வரலாம் 'என்றும் தெரிவித்துள்ளார். 'அல் நஸ்ர்' (Al Nassr) அணியுடனான ரொனால்டோவின் ஒப்பந்தம் 2027ம் ஆண்டு ஜூன் வரை உள்ளது. இந்த ஒப்பந்தம் நிறைவுற்றதும், ரொனால்டோ முற்றிலும் கால்பந்துக்கு விடை கொடுக்க வாய்ப்புள்ளது.