உலகக் கோப்பை கால்பந்துத் தொடர் முடிவுக்கு வந்து விட்டது. ஸ்பெயின் கோப்பையை வென்று தாய்நாடு திரும்பியுள்ளது. தலைநகர் மாட்ரிட்டில் ஸ்பெயின் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கிடையே, கால்பந்து உலகில் இரு சம்பவங்கள் மிகுந்த விவாதத்துக்குள்ளாகியுள்ளது.
2026ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் அர்ஜெண்டினா அணிக்கு ஃபிஃபாவும் நடுவர்களும் ஆதரவாக இருந்ததாகப் பரவலாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இறுதி ஆட்டத்தில் கோல் கம்பத்தை நோக்கி ஒரு ஷாட் கூட அடிக்க முடியாமல் அர்ஜெண்டினா பரிதாபமாகத் தோற்றுப் போனது.
உலகக் கோப்பைத் தொடரின் இறுதி ஆட்டத்துக்கு முன்னதாக, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த Español Público என்ற தொலைக்காட்சியில் பிரபல பத்திரிகையாளர் Pilar Rodríguez என்பவர் ஃபிஃபா மெஸ்ஸி அணிக்கு உதவியாக இருந்தது பற்றி ஒரு வீடியோ தயாரித்து வெளியிட்டிருந்தார். அதில்,'' ஃபிஃபா மட்டும் மெஸ்ஸி அணிக்கு உதவவில்லையென்றால், 5 ஆட்டங்களுக்கு முன்னதாகவே அர்ஜெண்டினா தோற்று போயிருக்கும். ஃபிஃபா தங்களால் முடிந்த அளவுக்கு மெஸ்ஸி அணிக்கு உதவியது'' என்றும் விமர்சித்திருந்தார். இந்த வீடியோவை அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தது.
இந்த வீடியோவை போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோவின் அதிகாரப்பூர்வமான இன்ஸ்டா பக்கமான cristiano லைக் செய்துள்ளது. இதையடுத்து, லட்சக்கணக்கான ரசிகர்கள் எக்ஸ் பக்கத்திலும் இதனை பரப்பி வந்தனர். சர்ச்சையானதையடுத்து, ரொனால்டோ பக்கம், அந்த வீடியோவை unlike செய்து விட்டதாகத் தெரிகிறது.
அதேபோல, பிரேசிலில் மைதானத்திலேயே அநாகரீகமாக நடந்து கொண்ட அந்த நாட்டைச் சேர்ந்த கிளப் கால்பந்து வீரர் ரெட்கார்டு காட்டப்பட்டு வெளியேற்றிய சம்பவமும் இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பிரேசிலின் கோபா பாலிஸ்டா (Brazil's Copa Paulista) கால்பந்துத் தொடரில் இவ்வாரம், கால்பந்து வரலாற்றிலேயே மிகவும் விசித்திரமான சம்பவத்துக்காக வீரர் ஒருவருக்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டது. சாவோ ஜோஸ் ( Sao Jose) அணியின் முன்கள வீரர் மைக்கேல்,அணியின் மாற்று வீரர்களுக்கான இருக்கைக்கு அருகில் சிறுநீர் கழித்ததால், ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே அவருக்கு நேரடியாக சிவப்பு அட்டை காட்டப்பட்டது. சாவோ கெய்தானோ( Sao Caetano) அணிக்கு எதிராக சாவோ ஜோஸ் அணி மோதுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு இந்தச் சம்பவம் நடந்தது. மைக்கேல் சிறுநீர் கழிப்பதைக் கண்ட நடுவர் குஸ்டாவோ ஹோலாண்டா சௌசா (Gustavo Holanda Souza) உடனடியாக இந்த நடவடிக்கை எடுத்தார்.
இதையடுத்து, சாவோ ஜோஸ் அணி வீரர்கள் நடுவரை சுற்றி நின்று, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும், நடுவர் தனது முடிவை உறுதியாக நின்று விட்டார். எனினும், ஆட்டம் தொடங்குவதற்கு முன்னரே, மைக்கேல் வெளியேற்றப்பட்டதால், ஸ்டார்ட்டிங் லெவன் பட்டியலில் அவருக்குப் பதிலாக வேறொரு வீரரைச் சேர்த்துக் கொள்ள சாவோ ஜோஸ் அணிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.'கால்பந்து உலகில் மிகவும் அநாகரீகமான நடத்தை' என்றும் நடுவர் போட்டி முடிந்ததும் விமர்சித்தார்.
நடுவரின் முடிவுக்கு சமூக ஊடகங்களில் பலரும் ஆதரவளித்தனர். சாவோ ஜோஸ் அணியும், தங்கள் வீரரின் நடத்தைக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது. "எங்கள் வீரரின் நடத்தையை ஏற்றுக் கொள்ள முடியாதது. நடந்த சம்பவத்திற்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம். இதனை ஒரு படிப்பினையாக எடுத்துக்கொள்கிறோம். மைதானம் என்பது ஒரு பொது இடம், சிறுநீர் கழிக்கும் இடம் அல்ல'' என்று தெரிவித்துள்ளது.
கால்பந்து வரலாற்றில் இத்தகைய அநாகரீக நடத்தைக்காக, போட்டி தொடங்கும் முன்னரே, களத்தை விட்டு வெளியேற்றப்பட்ட முதல் வீரர் மைக்கேல் ஆவார்.