நேபாளத்தில் பிறந்த பழங்குடியினப் பெண் ஒருவர் 29 ஆயிரம் அடிகள் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தை 11 முறை ஏறி சாதனை படைத்துள்ளார். இந்தச் சாதனையைப் படைக்க அவர் பல வீடுகளில் தட்டு, பாத்திரம் கழுவிச் சம்பாதித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எவரெஸ்ட் சிகரம் ஏற வேண்டுமென்பதே பல மலையேற்ற வீரர்களின் கனவாக இருக்கும். ஆனால், இந்தச் சாதனையை நிகழ்த்த, பல தடைகளைத் தாண்ட வேண்டியது இருக்கும். பனிப்புயல், அபாயகரமான பனிமலைகள் ஆகியவற்றைக் கடந்துதான் இந்த சாதனையை நிகழ்த்த முடியும். திடகாத்திரமான உடலும், திடமனமும் இருந்தால்தான், இந்தச் சாதனையை நிகழ்த்த முடியும். இத்தகைய தடைகளைக் கடந்து எவரெஸ்ட் சிகரத்தை நேபாளத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் 11 முறை ஏறியிருக்கிறார் என்பதுதான் பலரையும் வியக்க வைத்துள்ளது.
கிழக்கு நேபாளத்தில் மகாலு (Makalu) பகுதியில் பிறந்தவர் லக்பா ஷெர்பா (Lhakpa Sherpa). மகாலு பகுதியே இமயமலையில் 13 ஆயிரம் அடி உயரத்தில்தான் உள்ளது. பனிக்குகையில்தான் இந்தப் பெண் பிறந்துள்ளார். லக்பாவுக்கு தனது பிறந்த தேதியே தெரியாது. பெண் என்பதால், பள்ளிக்கும் அனுப்பப்படவில்லை. வீட்டில் தம்பிகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். படிப்புதான் கிடைக்கவில்லையே தவிர, சிறந்த மலையேற்ற வீராங்கனைக்கான உடல் திறன் அவரிடத்தில் இருந்தது. இதையே, தனக்கு பாசிடிவான விஷயமாக மாற்றிக் கொண்டார் லக்பா.
கடந்த 2000ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் முதன்முறையாக ஏறி சாதித்தார். எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப் பிடித்த முதல் நேபாள மலையேற்ற வீராங்கனை லக்பா என்பது குறிப்பிடத்தக்கது. 2003ம் ஆண்டுக்குள் தொடர்ந்து மூன்று முறை எவரெஸ்ட்டை அடைந்து விட்டார் . உலகிலேயே எவரெஸ்ட் சிகரத்தை மூன்று முறை ஏறிய வீராங்கனை என்ற புகழையும் பெற்றார். தொடர்ந்து எவரெஸ்ட் சிகரத்தை ஏறுவதை அவர் வாடிக்கையாக வைத்திருந்தார். தற்போது, 2026ம் ஆண்டில் மே மாதத்தில் 11 -வது முறையாக எவரெஸ்ட சிகரத்தை எட்டி லக்பா சாதனை படைத்துள்ளார். மலையேற்றத்தில் சாதனைகளைப் படைத்தாலும், லக்பா பல வீடுகளின் பணிப்பெண் வேலை பார்த்துத்தான், தனக்குத் தேவையான பணத்தைத் திரட்டினார் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
தற்போது , அமெரிக்காவிலுள்ள கனெக்டிகட் (Connecticut) நகரில் லக்பா வசித்து வருகிறார். அங்குள்ள வீடுகளில் பணிப்பெண் வேலை பார்த்துக்கொண்டேதான், இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதுகுறித்து லக்பா கூறுகையில்,''எனக்கு எந்த வேலை கிடைத்தாலும் செய்வேன். பெரும்பாலும், தட்டுப்பாத்திரம் கழுவுவது, வீடுகளைச் சுத்தம் செய்வது போன்ற வேலைகள்தான் கிடைக்கும். இத்தகையை, வேலைகளைச் செய்வதில் எனக்கு எந்தக் கஷ்டமும் இல்லை. அதில், கிடைக்கும் வருவாயைக் கொண்டுதான் எனது குடும்பத்துக்கு உதவியாக இருக்கிறேன். ஒருவேளை, இந்த வேலையை நான் செய்யவில்லையென்றால், என்னால் ஓரிருமுறைதான் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியிருக்க முடியும்.
நான் கர்ப்ப காலத்தில் கூட எவரெஸ்ட் சிகரம் ஏறியுள்ளேன். எனது வாழ்நாளில் 30 முறையாவது எவரெஸ்ட் சிகரம் ஏற வேண்டுமென்பது லட்சியம். எனது, உடல் நிலை அனுமதித்தால் 80வது வயதிலும் இந்த சிகரத்தை அடைய வேண்டும். தற்போது, எனது தொழில்முனைவோர் கனவைப் பூர்த்தி செய்யும் முனைப்பில் கிளவுட்ஸ்கேப் கிளைம்பிங் (cloudscape climbing) என்ற பெயரில் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.
எவரெஸ்ட் சிகரத்தில் அதிக முறை ஏறிய பெண் என்ற சாதனையைப் படைத்துள்ள லக்பாவின் வாழ்க்கை வரலாறு நெட்பிளிக்ஸில் ஆவணப் படமாக்கப்பட்டுள்ளது. Mountain Queen: The Summits of Lhakpa Sherpa என்ற பெயர் கொண்ட இந்தப் படத்தை ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இயக்குநர் லக்கி வால்கர் (Lucy Walker) இயக்கியுள்ளார்.