Celeste Amarilla and Kylian Mbappé 
விளையாட்டு

'எம்பாப்பே காலனித்துவ கேமரூனியன்' - பாரகுவே எம்.பி சர்ச்சை விமர்சனம்!

பாரகுவே எம்.பி செலஸ்டி அமாரில்லா பிரான்ஸ் கேப்டனை இனரீதியாக பேசி விமர்சித்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குரங்கு, படிப்பற்றவர், மிருகம் என்றெல்லாம் வசைபாடியுள்ளார்.

எம். குமரேசன்

உலகக் கோப்பை தொடரில் பராகுவே அணியுடனான ரவுண்ட் - 16 சுற்றுப் போட்டியில், கிலியன் எம்பாப்பே அடித்த பெனால்டி கோலால் பிரான்ஸ் அணி வெற்றி பெற்று, ரவுண்ட் 16க்கு தகுதி பெற்றது. பிலடெல்பியாவில் நடந்த இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணி வீரர்கள் பராகுவே கோல் பகுதியை முற்றுகையிட்டுத் தொடர் தாக்குதல் நடத்தினாலும்… எதிரணியின் தற்காப்பு அரணைத் தகர்க்க முடியவில்லை. குறிப்பாக, கோல் கீப்பர் பராகுவே ஆர்லாண்டோ கில்லை தாண்டி கோல் அடிப்பது முடியாத, சவால் மிகுந்த காரியமாக இருந்தது.

அதோடு, பராகுவே வீரர்கள் முரட்டு ஆட்டத்திலும் ‘ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதனால், களத்தில் வீரர்கள் அவ்வப்போது, மோதிக் கொண்டனர். எனினும், 70வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட கிலியன் எம்பாப்பே கோல் அடித்ததால், பிரான்ஸ் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

போட்டி முடிந்ததும் கிலியன் எம்பாப்பேவுடன் கை குலுக்குவதற்காகத் தனது கையை நீட்டினார் பராகுவே கோல் கீப்பர் ஆர்லாண்டோ கில் (Orlando Gill) ஆனால், எம்பாப்பே அதைக் கண்டுகொள்ளவில்லை. இதனால்,கோபமடைந்த கில், பந்தை எம்பாப்பே முதுகில் தூக்கியடித்துவிட்டு, களத்தை விட்டு வெளியேறினார். ஆட்டம் முடிந்ததும் பேசிய கில், ‘நான் எம்பாப்பேவுடன் கை குலுக்கவே விரும்பினேன். ஆனால், அவரது கவனம் என் மீது திரும்பவே இல்லை. அதனால் எனது கட்டுப்பாட்டை இழந்துவிட்டேன்' என்று தெரிவித்திருந்தார். போட்டி முடிந்ததும், எம்பாப்பே ''எங்களாலும் அடிதடி முரட்டு ஆட்டங்களில் ஈடுபட முடியும் ''என்றும் பேசியிருந்தார். தற்போது, ஆடுகளத்தைத் தாண்டி அரசியல்ரீதியாக பிரான்ஸ், பாரகுவே நாடுகளுக்கிடையே மோதல் வலுத்துள்ளது. இதற்கு வாய்த் துடுக்கு நிறைந்த பெண் அரசியல்வாதி ஒருவர்தான் காரணமாக அமைந்துள்ளார்.

பாரகுவே எம்.பி செலஸ்டி அமாரில்லா (Celeste Amarilla) பிரான்ஸ் கேப்டனை இனரீதியாக பேசி விமர்சித்திருப்பது சர்வதேச அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 61 வயதான அமாரில்லா, தனது சோசியல் மீடியா பக்கத்தில் கூறியிருப்பதாவது;

Kylian Mbappé with his father

''எம்பாப்பே காலனித்துவத்தால் பாதிக்கப்பட்ட கேமரூனியர். ஆனால், தன்னை ஒரு பிரெஞ்சுக்காரராகக் காட்டிக்கொள்ளத் தீவிரமாக முயல்பவர். ஆணவக்காரர், அசிங்கமானவர். எம்பாப்பே எழுதக்கூடக் கற்றுக்கொள்ளாத ஒரு மிருகம். தாய்ப்பாலுக்குப் பதிலாகத் தேங்காய்த் தண்ணீர் குடித்து வளர்ந்தவர். சிம்பன்சிகளைப் பின்பற்றி வளர்ந்தவர். போட்டி முடிந்ததும் பராகுவே வீரர்கள் அவருக்குக் கையால் ஒரு அறை கொடுத்திருக்க வேண்டும்'' என்று கோபமாகக் கூறியிருந்தார்.

அமாரில்லாவின் இந்தக் கருத்துக்குப் பல தரப்பிலிருந்தும் கண்டனம் வலுத்தது. பிரான்ஸ் கால்பந்து சங்கத் தலைவர் பிலிப் டியாலோ (Philippe Diallo) "கால்பந்தாட்டத்தின் அடிப்படை விழுமியங்களைச் சிதைக்கும் வகையிலான இந்தக் கருத்து அவமானகரமானது. எங்கள் வீரரை அவமதிப்பது எங்கள் நாட்டை அவமதிப்பதற்குச் சமம். அமாரில்லா மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது '' என்று தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் கேப்டன் எம்பாப்பேயும் நேரடியாக அமாரில்லாவை கடுமையாகச் சாடியுள்ளார். அவர் ஆற்றிய எதிர்வினையில், ''திருமதி செலஸ்டே அமாரில்லா, நீங்கள் ஒரு இழிவான பெண்; உங்கள் பதவிக்குத் தகுதியற்றவர். உங்களின் வெளிப்படையான இனவெறி மற்றும் பொறுப்பற்ற கருத்தால், உங்கள் சொந்த அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளையே மங்கச் செய்துவிட்டீர்கள். உங்களைப் போன்றவர்கள் வெறுப்புணர்வையும் இனவெறியையும் பரப்ப ஒருபோதும் நான் அனுமதிக்கமாட்டேன்" என்று பதிலடி கொடுத்துள்ளார்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், எம்பாப்பே கொடுத்த பதிலடியை இனவெறிக்கு எதிராக அடிக்கப்பட்ட மற்றொரு கோல் என்று குறிப்பிட்டுள்ளார் . சர்வதேச அளவில் எழுந்த கடும் விமர்சனங்களையடுத்து, அமாரில்லாவின் கருத்துக்கு பராகுவே அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பராகுவே வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிகையில், 'அமாரில்லாவின் கருத்துக்கும் பராகுவே அரசுக்கும் நாட்டு மக்களுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிலியன் எம்பாப்பே-யின் தந்தை வில்ஃபர்ட் எம்பாப்பே ( Wilfrid Mbappé) கேமரூனைச் சேர்ந்தவர். தாயார் அல்ஜீரியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். கிலியன் பாரீசில் பிறந்து வளர்ந்தவர். கடந்த 2023ம் ஆண்டு முதன்முறையாகத் தந்தையின் சொந்த நாடான கேமரூனுக்கு விசிட் அடித்தார். அப்போது, கேமரூன் அரசு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தது. கேமரூன் நாட்டில் பல்வேறு மக்கள் நலப்பணிகளையும் கிலியன் மேற்கொண்டுள்ளார்.