FIFA 2026  Gemini AI Image
விளையாட்டு

கால்பந்து நிகழ்த்துக் கலையின் ஏழாம் எண் அதிசயம் ரொனால்டோ!

உலகக் கோப்பைக் கால்பந்துத் தொடர் முக்கியமான கட்டத்தை எட்டிக்கொண்டிருக்கிறது...

கார்மல்

ஆட்டம் முடியும் தறுவாயில் ஸ்பெயினுக்குக் கிடைத்த அந்த கோல் போர்ச்சுக்கலுக்கான எதிரான போரை முடித்து வைத்தது.

கால் கிழிய நடந்த ஆட்டம் 90 நிமிட முழுமைக்காக ஒதுக்கப்பட்டக் கூடுதல் நேரத்தில்தான் மெரினோவின் காலுக்கு அந்தப் பந்து கூடிவந்தது. சிக்கிய பந்து கம்பத்தின் இடமூலையில் ஊடறுத்துச்செல்ல, காலிறுதிக்குச் செல்வதற்கான ஸ்பெயினுக்கான கடவுச்சீட்டாக அமைந்தது அந்த கோல்!

ஸ்பெயினின் டிக்கா டாக்கா பாணி கால் நகர்வும் போர்ச்சுக்கல்லின் கட்டளைத் தளபதி ரொனால்டோவின் கிளர்ச்சிக் கால்களும் பார்வையாளர்களுக்கான பெருந்தீனியாய் அமைய இன்றைய பந்தாட்டம் பரபரப்புடன் தொடங்கியது.

கால்களுக்கிடையிலான ஒரு சங்கிலித் தொடர்பை அறுபடாமல் பார்த்துக்கொள்வதுதான் ஸ்பெயினின் கூடுதல் பலமாக இருக்கும். நட்சத்திரக் கால்களாக அடையாளம் காணப்பட்டு, அந்தக் கால்களுக்கு மட்டுமே கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அணியாக எப்போதும் இருந்ததில்லை. அதனால்தான் அணி வீரர்கள் அனைவரும் புற அழுத்தம் ஏதுமில்லாமல் தங்களுக்குள் இணக்கமாகப் பந்துகளை நகர்த்தி இலக்கை எட்ட முனைவார்கள்..

ஸ்பெயின் நாட்டின் கக்கத்திற்குள் குடியிருப்பதைப்போன்ற புவியியல் பரப்பைக் கொண்ட அண்டை நாடான போர்ச்சுகல் மீதும் ஸ்பெயினின் கால்பந்து பிம்பம் போர்வை போலப் படிந்து கிடப்பதையும் பார்க்கலாம்.

ஆனால் பலருடைய கண்களும் கிறிஸ்டியானா ரொனால்டோவின் காலசைவைச் சுற்றியே வட்டமிடுவதால் ரொனால்டோவின் அதிசயக் கால்கள் வெற்றியை மீட்டுத்தரும் என்று நம்புகின்றனர். அந்த நம்பிக்கை சக வீரர்கள் மனதிலும் தொற்றுவதால் மொத்தக்களமும் அந்த ஏழாம் எண் வீரனின் பொறுப்புகள் வரையறுக்கப்படாத வலைக்குள் சிக்கிவிடுகிறது.

இன்றைய இரு அணிகளுக்கான போரில் இலக்குகள் யாருக்கும் கால் கூடாமல் போயிற்று. பந்தை எப்போதும் தனது காலுக்குள் வைத்திருந்த ஸ்பெயின் ஆறுமுறை வைத்த குறி பிசகியது.

அதேபோல போர்ச்சுக்கலுக்குக் கிடைத்த மூன்று கோல் வாய்ப்புகளும் முட்டையாயின.

இப்படியான கொக்குச் சிக்கலுக்குள் நடந்த போர்ச்சுக்கல் ஸ்பெயின் போரில் பதிலி வீரனாய் களமிறங்கிய மைக்கெல் மெரினோ ஆட்ட நேர முடிவில் கால்பந்து பாந்தவனாக கோலிட்டு ஸ்பெயினைக் கரைசேர்த்தான்.

தொடர்ந்து ஆறு முறை உலகக் களத்தில் கால்வைக்கும் வாய்ப்பைப் பெற்று 11 கோல்களைப் பதிவுசெய்திருக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ என்ற ஏழாம் எண் வீரனுக்கு உலகக் கோப்பை எட்டாக் கனியாகவே போய்விட்டது.

ஆனாலும் உலகக் களத்தில் அவனது ஆட்டம் ஒரு நிகழ்த்துக் கலையாகவே இருந்தது என்பதை மறுக்க இயலாது. கடைசிவரைக்கும் என் கடமையைச் சரியாகவே செய்தேன் என்றுரைத்தது உண்மைதான்.

களத்தில் வருங்காலங்களில் பயணிக்க இருக்கும் பல கால்களுக்கு ரொனால்டோவின் காலடியும் பந்தடித் தடமும் ஒரு பாடமாக இருக்கும்.