FIFA 2026 Chat GPT AI Image
விளையாட்டு

ஓய்ந்தது நெய்மார் என்ற உதையப்பனின் கால்கள்!

மற்றோரு போட்டியில் இங்கிலாந்து, மெக்சிகோவின் கனவை சிதைத்தது!

கார்மல்

கால்பந்துக் களத்தில் மைல் கல்லை அமைத்து ஆண்டாண்டு காலம் அதன் எல்லையை விரிவுபடுத்தியும் புதுப்பித்துக் கொண்டும் இருக்கும் பிரேசிலின் கால்கள் எங்கே என்று கேட்கும் விதமாக அமைந்தது பிரேசில் நார்வே அணிகளுக்கிடையே நடந்த போட்டி.

கால்பந்து என்ற விளையாட்டு ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்றாலும் அந்த விளையாட்டை அழகுணர்ச்சி பொங்கும் ஆட்டமாக மாற்றியவர்கள் தென் அமெரிக்கர்கள்.

ஐரோப்பியா காலனித்துவ நாடுகள் அறிமுகப்படுத்திய கால்பந்து நாளடைவில் தென் அமெரிக்கர்களின் ஊனோடும் குருதியோடும் கலந்த விளையாட்டாக மாறியது.

தென் அமெரிக்க நாடுகளின் வீதிகள் கால்பந்துக் களங்களாகின. ஒழுங்குபடுத்தாத சாலைகளிலும் தெருக்களிலும் ஆடும்போது கால்பந்து கிளப்பிய புளுதித் துகள்களிருந்துதான் மின்னும் நட்சத்திர ஆட்டக்காரர்கள் பலர் இந்த உலகத்திற்கு அறிமுகமானார்கள்.

கால்பந்து ஆட்டத்தில் நகரும் கால்கள் ஒரு சேர்ந்திசைப் பாடலுடன் கூடிய நடனம் போல்தான் இருந்தன. முன் பின் நடு என்று களம் பிரிந்து கிடந்தாலும் அவற்றில் நிலையெடுத்து ஆடும் ஒரு கூட்டாட்டத்தின் தொகுப்பாக இருக்கும் என்பதே தென் அமெரிக்கர்களின் ஆட்டத்தின் சிறப்பு ஆகும்..

அப்படியான ஒரு கால்பந்து கலாச்சாரத்தைப் பேணி பாதுகாத்த நாடுகளில் ஒன்றான பிரேசில் அதன் பொலிவைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருவதைப் போன்ற உணர்வை இன்றைய ஆட்டம் ஏற்படுத்தியது.

ஆட்டத்தின் சிறப்பான கூறுகளை இழந்த நாலாந்திர ஆட்டமாகவே நார்வேக்கு எதிராக அமைந்தன.

நார்வே அணியினர் தொடக்கம் முதலே ஆட்டக் களத்தைத் தங்கள் காலடிக்குள் கொண்டுவந்துவிட்டனர்.

அவர்களிடமிருந்து பந்துகளை மீட்பதே பிரேசிலுக்குப் பெரிய சவாலாக மாறிவிட்டது. இருந்தாலும் கிடைத்த பல வாய்ப்புகளை கோலாக மாற்றுவதற்காகக் கால்கள் சரியான தாளகதிக்குள் அடங்காமல் போனதால் முன்களம் பிசுபிசுத்துக் காட்சியளித்தது. .

இப்படியான பறிப்புகளுக்கிடேயே நல்வாய்ப்பாக வாய்த்த தண்டக்கோலும் இரண்டகம் செய்ய பிரேசிலின் பின்னடைவு அந்தப் புள்ளியிலிருந்து தொடங்கியது.

பின்பாதி ஆட்டத்தில் என்டிரிக்கின் வருகையை அடுத்து சுணங்கிக்கிடந்த களம் சற்று சுறுசுறுப்பானது. ஆனாலும் மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை. வினி என்டிரிக்குக்கு வசமாகத் தொடுத்துக் கொடுத்த பந்தும் பழமாகாமல் போயிற்று.

நெய்மரின் வருகை பலமளிக்கலாம் என்று பார்வையாளர் மாடத்தில் ஆரவாரம் எழுந்தாலும் அந்த எதிர்பார்ப்புக்கு எதிராக நார்வேயின் ஹாலன்ட் அடுத்தடுத்த போட்ட இரண்டு கோல்கள் பிரேசிலின் காலின் கீழே வெற்றி நழுவிச் செல்வதை எடுத்துக்காட்டின.

பிரேசில் மக்களின் நெஞ்சத்துடிப்பான நெய்மருக்காகக் களம் கடைசியாகக் கொடுத்த கோலோடு ஆட்டம் இரண்டுக்கு ஒன்று என்ற நிலையில் நார்வே பக்கமாகச் சாய்ந்தது.

பிரேசில் அணிக்குக் கால்பந்துக் களம் பல கோப்பைகளையும் புகழையும் அள்ளிக்கொடுத்திருக்கிறது. களத்தை இழக்கும்போதெல்லாம் அவர்கள் சிந்தும் கண்ணீருக்குப் பிறிதொரு களம் விடையளிக்கக் காத்திருக்கிறது.

நெய்மர் என்ற உதையப்பனின் கால்கள் ஓயலாம். ஆனால் அதன் ஓட்டம் தலைமுறை தாண்டியும் தொடரும் என்பது பிரேசிலின் சிறப்பு. அதேசமயத்தில் நட்சத்திர வீரர்கள் மேல் மட்டுமே நம்பிக்கையைக் குவித்து வெற்றி பெற்றுவிடலாம் என்று அணியும் அந்த நாடும் நினைப்பது கூட்டு முயற்சிக்கு எதிரானதாகும்.

பிரேசிலின் பாரம்பரியக் கால் களியை எதிர்காலம் தூசு தட்டி எடுத்துவிடும் என்று நம்பலாம்.

இன்றைய மற்றொரு போட்டியில் காலிறுதிக்கான வாய்ப்பை மெக்சிகோவும் இழந்து நிற்கிறது.

பிரேசில் மற்றும் மெக்சிகோ ஆகிய இரு நாடுகளின் ஆட்டத்தை ஒப்பிடுகையில் ஆட்டம் முடியும் வரைக்கும் மெக்சிகோ களத்தை உயிர்ப்புடன் வைத்திருந்தது உண்மை.

மெக்சிகோ தனது சொந்த மண்ணில் சுமார் 80000 இரசிகர்களின் முன்னிலையில் மிகுந்த நம்பிக்கையுடன் ஆடியது.

ஆனாலும் முன்பாதியில் முப்பது நிமிடங்களில் பெல்லிங்கம் அடுத்தடுத்து போட்ட இரண்டு கோல்கள் இங்கிலாந்துக்கு பலமான அடித்தளத்தை போட்டுக்கொடுத்துவிட்டன.

இந்த இரண்டு கோலுக்கும் சடுதியில் விடையளிக்கும் விதமாக குய்னோனசின் பதிலுதை இருந்தாலும் கெய்னுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பு இறுதியாக மெக்சிகோவுக்குக் கிடைத்த மற்றொரு பெனால்டி வாய்ப்பைப் பற்றிய கவலையை அளிக்கவில்லை.

இறுதியாக மெக்சிகோவின் காலிறுதிக் கனவு கரைந்து போயிற்று!