Hand of goad goal  
விளையாட்டு

அஸ்டெகா மைதானமும்... வயாகராவும்..! #FIFA2026

1986ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் மரடோனா இரண்டு புகழ்பெற்ற கோல்களை அடித்தார். அந்த இரு கோல்களுமே இங்கிலாந்து அணிக்கு எதிராக அஸ்டெகா மைதானத்தில்தான் அடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எம். குமரேசன்

உலகக் கோப்பைத் தொடரில் போட்டியை நடத்தும் மெக்ஸிகோ அணி காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. 1986ம் ஆண்டுக்குப் பிறகு, மெக்ஸிகோ அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது; காலிறுதியில் மெக்ஸிகோ அணி வலுவான இங்கிலாந்து அணியை மெக்ஸிகோ சிட்டியுள்ள அஸ்டெகா (Azteca Stadium) மைதானத்தில் எதிர்கொள்கிறது. அஸ்டெகா மைதானம்தான் உலகிலேயே அதிக உயரத்திலுள்ள கால்பந்து மைதானம் ஆகும். கடல் மட்டத்திலிருந்து 2,440 மீட்டர் உயரத்தில் (7,350 அடி) இந்த மைதானம் அமைந்துள்ளது. பிரேசிலின் 'மரக்கானா' மைதானம் போல அஸ்டெகா மைதானமும் கால்பந்து உலகில் புகழ்பெற்றது. 1986ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் இந்த மைதானத்தில்தான் அர்ஜெண்டினா அணி மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி உலகக் கோப்பையை இரண்டாவது முறையாகக் கைப்பற்றியது. அப்போது, ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் இந்த மைதானத்தில் அமர்ந்து போட்டியைக் காண முடியும்.

2026ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடருக்கு 87 ஆயிரம் ரசிகர்கள் மட்டுமே அமர்ந்து போட்டியைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 1968ம் ஆண்டு பிரேசில் - மெக்ஸிகோ அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டத்தைக் காண இந்த மைதானத்துக்கு 1,19,853 ரசிகர்கள் வந்திருந்தது வரலாற்றுச் சாதனையாகும். கடந்த 1970ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரின் இறுதி ஆட்டம் மற்றும் 1986ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரின் இறுதி ஆட்டம் இந்த மைதானத்தில் நடந்துள்ளது. இரு உலகக் கோப்பைத் தொடர்களின் இறுதி ஆட்டத்தை நடத்திய பெருமையும் இந்த மைதானத்துக்கு உண்டு.

1986ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில், இங்கிலாந்து அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் மரடோனா 'hand of god goal ' இந்த மைதானத்தில்தான் அடித்தார். இதே ஆட்டத்தில் கால்பந்து உலகின் மிகச்சிறந்த கோலாக கருதப்படும் மற்றொரு கோலையும் மரடோனா அடித்திருந்தார். இதனால், அஸ்டெகா மைதானம் என்றால், இங்கிலாந்துக்குக் கொஞ்சம் ஒவ்வாமைதான்.

அத்தகைய மோசமான தோல்விக்குப் பிறகு, இங்கிலாந்து அணி இந்த மைதானத்தில் விளையாடியதே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே, மெக்ஸிகோ- இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது.

Azteca Stadium

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த மைதானத்துக்கு இங்கிலாந்து மீண்டும் வந்துள்ளது. உயரமான மலைப்பகுதியில் மைதானம் உள்ளதால், இங்கு விளையாடுவதற்குத் தனித் திறமையும், உடல் திறனும் வேண்டும். திடீரென்று 7 ஆயிரம் அடிக்கும் உயரமாக பகுதியில் விளையாடுவது வீரர்களுக்குக் கடினமாக இருக்கும். காற்றில் குறைந்தளவு ஆக்ஸிஜன் மட்டுமே இருப்பதால், உடல் வலிமை குறைந்து அதிக சோர்வை ஏற்படுத்தக்கூடும்.

இதன் காரணமாக, இங்கிலாந்து வீரர்கள் வயாகராவை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வயாகராவிலுள்ள மூலப்பொருளான சில்டெனாஃபில் (sildenafil) நுரையீரலில் உள்ள இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, ஆக்சிஜனை உடலுக்கு அதிகளவில் கொடுக்க உதவும். உலக ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (WADA) தடை செய்யப்பட்ட பொருட்கள் பட்டியலில் வயாகரா சேர்க்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதைப் பயன்படுத்துவது ஊக்கமருந்து பயன்பாட்டு விதிமீறலாகக் கருதப்படமாட்டாது.

இது போன்ற மிகக் கடுமையான சூழல்களில் மருத்துவக் குழுவினர் வயாகராவை பரிந்துரைக்க வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையில், இந்த மருந்தைப் பயன்படுத்துவது குறித்து அணியின் மருத்துவ நிபுணர்களே முடிவெடுப்பார்கள்.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் மெக்ஸிகோ ஆடிய நான்கு ஆட்டங்களில் மூன்று அஸ்டெகா மைதானத்தில்தான் நடந்துள்ளது. இந்த ஆட்டங்களில் மெக்ஸிகோ அணி ஒரு கோல் கூட வாங்காமல் வெற்றி பெற்றுள்ளது. உள்நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது மெக்ஸிகோ அணிக்குக் கூடுதல் பலமாக இருக்கலாம். உலகக் கோப்பை தொடர்களில் (1970, 1986,2026) இந்த மைதானத்தில் 10 ஆட்டங்களில் மெக்ஸிகோ விளையாடி, 8 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. இரு ஆட்டங்களை சமன் செய்துள்ளது. தோல்வி கண்டதே இல்லை.