FIFA 2026 - Representation Image ChatGPT AI Image
விளையாட்டு

பந்தின் கால் பந்தறியும்! பிரான்சை ஆட்டம் காட்டிய பராகுவேயின் பம்பரக்கால்கள்!

70 ஆம் நிமிடத்தில் எ்ம்பாப்பேவுக்கு அந்த தண்டக்கோல் வாய்ப்பு கிட்டாவிட்டால் களம் யார் பக்கமெனக் கணித்திருக்க இயலாது.

கார்மல்

கால் பந்தாட்டத்தில் எம்மாம் பெரிய கில்லாடித்துவக் கால்களைப் பெற்ற வீரனாக இருந்தாலும் இலக்குக்குக் கால் கூடும் தருணம்தான் அதி முக்கியமானது .

காலுக்கு வந்த பந்து கம்பத்துக்கு எளிதாகத் திருப்பும் திசையில் வீரன் நிலையெடுக்க வேண்டும். துரிதமாக இயங்க வேண்டிய அந்த நிலையிலிருந்தவாறு அடிப்பதற்கு ஏற்றவாறு காலுக்கும் பந்துக்குமான சுதந்திரமான இடைவெளி வேண்டும். அத்தோடு காலுக்கும் கோல் பெட்டிக்குமான ஒற்றையடிப்பாதை தெளிவான கோட்டில் அமைய வேண்டும்.

இவை யாவும் கூடிவரும் கால்களுக்கே கோல்கள் வசமாகும். பராகுவே அணிக்கு எதிராகக் களமாடிய எம்பாப்பே தலைமையிலான பிரான்ஸ் அணியின் கால்களுக்கு ஆட்டமுடிவுவரைக்கும் கெடுவாய்ப்புகளே இன்றைக்கு ஏற்பட்டன.

70 ஆம் நிமிடத்தில் எ்ம்பாப்பேவுக்கு அந்த தண்டக்கோல் வாய்ப்பு கிட்டாவிட்டால் களம் யார் பக்கமெனக் கணித்திருக்க இயலாது.

பராகுவேயின் முழுக்கவனமும் தடுப்பாட்டத்தில் குவிய டிம்பெல்லே ,எம்பாம்பே , பார்கோலா மற்றும் ஒலிசே கூட்டணியின் பாய்ச்சல்களை பராகுவே தடுப்பணை போட்டுத் தவிக்கவிட்டது.

பாரகுவே தென் அமெரிக்காவின் பாரம்பரியக் கால்பந்து வழிவந்தாலும் 9 முறைதான் உலகக் களத்திற்கு வந்துள்ளது. 2010 ல் மட்டும்தான் காலிறுதியைக் கண்டது.

இன்றைய ஆட்டத்தில் பிரான்சின் கோல்குவிப்புக் கனவைச் சிதைத்து ஒரு கோலுக்குள் முடக்கியது என்றாலும் பந்தை எதிர்முனையில் செலுத்துவதற்கான முனைப்பு இல்லாதவரை பராகுவே பாடு திண்டாட்டம்தான்.

இன்றைய வெற்றி மூலம் காலிறுதிக் களத்திற்கான துண்டைப் போட்டுள்ள பிரான்ஸ் இன்றைய போட்டியில் கனடாவை வென்ற மொரோக்கோவோடு கால்கலப்புச் செய்ய காத்திருக்கிறது.

கனடாவுக்கும் மொரோக்கோவுக்கான களமுனை முன்பாதிவரை கோலில்லாமல் மந்தமாய்க் கடந்தது.

வேகமாக முன்னோக்கிய கனடாவின் நகர்வையும் குறிவைப்பையும் மொரோக்கோவின் வலைஞன் யாசின் பூனவ் தன் பம்பரக்கண்ணுக்குள் வைத்துக் காத்துநின்றான்.

ஆனால் களத்தின் பின்பாதி மொரோக்கோ வசமானது. அதுவும் சைபாரிக்குப் பதிலியாக வந்த அவ்னாகியின் கோலாக்கம் இரண்டு்ம் கண்ணால் ஒத்திக்கொள்ளும்படியானவை.

அணித்தலைவன் ஹக்கிமிக்குக் கிடைத்த இலவச உதையை கோல்பெட்டியின் நடுவாக்கிலிருந்துப் பெற்று வலைப்பெட்டியின் வல மூலையில் செலுத்திய விதம் அழகு.

அதேபோல நடகளத்திலிருந்து டயஸ் முரட்டுவேகத்தில் முன்னோக்கி வர கனடா பின்கள வீர்ர்கள் சுற்றிவளைக்க பந்தை லாகவமாக அவ்னாகியின் காலுக்குத் திருப்ப இரண்டாம் கோலும் அழகு 2.0!

ஆட்ட முடிவில் பின்னரண் இல்லாத களத்துக்குள் நுழைந்து மூன்றாம் கோலோடு ஆட்டம் முடிய கனடாவின் கதை அத்தோடு முடிக்கப்பட்டு நடையைக் கட்டியது

மொரோக்கோவும் பிரான்சும் முட்டிக்கொள்ளும் காலிறுதிக்களம் எப்படியிருக்கும்?

பந்தின் கால் பந்து மட்டுமே அறியும்!