32 அணிகள் கொண்ட நாக் அவுட் ஆட்டத்தின் இறுதிநாள் ஆட்டம் வையக் கால்பந்து உலக வரலாற்றின் பக்கங்களில் மறக்கமுடியாத கால்தடங்களைப் பதித்திருக்கிறது.
சுமார் ஐந்து லட்சம் மக்கள் தொகையை மட்டுமே கொண்ட கேபோ வெர்தே என்ற குட்டிநாடு அர்ஜென்டினா என்ற அரக்க பலம் கொண்ட அணியைப் புரட்டிப்போட்ட ஆட்டத்தைக் கால்பந்து உலகம் காலம் கடந்தும் பேசும்.
120 மணி நேரம் நீடித்த போரில் கேபோ வெர்தே, மெஸ்ஸி தலைமையிலான அணிக்குக் கடைசிவரைக்கும் தலைவலியைக் கொடுத்துக் கொண்டேயிருந்தது.
அர்ஜெண்டினாவின் கோல்களுக்கு கேபோ வெர்தே பதில் கோல் போடப்போட ஆட்டம் முடியும் வரைக்கும் திகில் படத்தை விஞ்சும் அளவுக்குக் களம் கொழுந்துவிட்டு எரிந்தது.
மெஸ்ஸி போட்ட முதல் கோல் செவ்வியல் தரமென்றால் கேபோ வெர்தே அணியினரின் இரண்டு கோல்களும் அதற்கு இணையான தரம்தான்.
H பிரிவில் இவர்களோடு ஆடிய ஸ்பெயின், உருகுவே மற்றும் செளதி அரேபிய அணிகள் தொடுத்த பந்துகள் கேபோ வெர்தே அணியினர் தங்கள் கால்களாலேயே வெட்டிய அகழிக்குள் மாட்டி வீணாயின. வெற்றி பெற விடாமல் ஒன்றுக்கு ஒன்று என்று வெற்றியைப் பப்பாதியாகப் பிரித்துக்கொண்டதிலிருந்து தொடங்கியது கேபோ வெர்தேயின் தனியாவர்த்தனம்.
வலைக்காப்பாளன் வாசின்ஹா அனைத்து ஆட்டத்திலும் கம்பத்தின் மத்தியில் கேடயமாக நின்று காத்து தனது அணியை இந்த அளவுக்கு கொண்டு வந்து நிறுத்தியதே பாரிய வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
இன்றைய ஆட்டத்தில் கடைசி நிமிடத்தில் தனது அணியினரின் தலைபட்டு சொந்தக் கோலாக ஆகியிருக்காவிட்டால் அர்ஜென்டினா அணிக்கு வாசின்யாவினால் பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கக் கூடும்.
அர்ஜென்டினா மூன்றுக்கு இரண்டு என்று கோல் கணக்கில் வெற்றி பெற்றாலும் கோபோ வெர்தேயின் எதிராட்டமும் அர்ஜென்டினாவின் வெற்றிக்கு இணையாகத் தலையில் வைத்துக் கொண்டாடப்படுகிறது.
தற்போது 16 பேர் கொண்ட இரண்டாம் நாக் அவுட் களம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு மல்லுகட்டுவதற்காக 16 அணிகளும் தங்கள் கால்களை மராமத்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
வழக்கம்போல இறுதியாகக் களமுனை அமெரிக்க ஐரோப்பிய நாட்டுக் கால்களையே தாங்கி நிற்கின்றன.
எகிப்து, மொரோக்கோ ஆகிய இரு நாடுகளைத் தவிர்த்து ஆசிய, ஆப்ரிக்க அணிகளும் ஐரோப்பிய நாடுகளின் சவலை அணிகளும் நாக் அவுட் தளத்தில் வடிகட்டப்பட்டுள்ளன.
இனி நடக்கும் போர் எவருக்கும் எளிதாக இருக்காது என்பதால் களத்தில் எல் நினோ தாக்கம் கூடுதலாகவே இருக்கும்.