FIFA 2026 Representing Image ChatGPT AI
விளையாட்டு

ரொனால்டோ VS மோட்ரிச்: நாற்பதைத் தொட்ட நட்சத்திர ஆட்டக்கார்களின் பலமும் பலவீனமும்!

களத்தில் அவர்களது இருத்தலும் கள அனுபவமும் இளம் படையினருக்குக் கூடுதல் சத்து மாத்திரையாக இருக்கும் என்பதை மறுக்க இயலாது. .

கார்மல்

குரோசியாவின் லூக்கா மோட்ரிச்சும் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் மோதிக்கொண்ட ஆட்டம் நொடிக்கு நொடி இடிமின்னலைக் கிளப்பிக் கொண்டிருந்தன. ரியல் மேட்ரிட் சங்கத்தில் இந்த இணையர் கலக்கிய காலங்கள் உண்டு. நாற்பது வயதைத் தொட்ட மூத்த நட்சத்திரங்கள் இருவரும் நேரெதிராகk களம் காணும்போது இருவருடைய கால்களும் சொந்த நாட்டுக்கு சிந்தாபாத் சொல்வதுதானே இயல்பு.

எல்லா ஆட்டக்களங்களும் நட்சத்திர ஆட்டக்காரர்களை மையப்படுத்துவதாகவே அமைகிறது. அனைவருடைய கண்களும் அவர்களின் கால்களையே பின்தொடர்கின்றன. பந்து அவர்கள் காலுக்குச் செல்லும் போதெல்லாம் வர்ணனைகளும் சிலாகிப்புகளும் அந்தக் கால்களைத் தொற்றிக் கொள்கின்றன.

நட்சத்திர வீரர்களின் மனம் கூடுதல் அழுத்தங்களுடனேயே அலைபாய்வதற்கு இதுவே காரணப் புள்ளிகளாகும். அவர்களது கால்களைச் சுற்றும் ஒளிவட்டமே அணிக்கு பலமாகவும் பலவீனமாகவும் அமைந்துவிடுகின்றன.

என்னதான் நட்சத்திர நாயகர்களாக இருந்தாலும் நாற்பதைத் தொடும்போது எதிரிகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் முற்றிய எலும்புகள் அதிவேகம் எடுப்பதில்லை.

ஆனாலும் களத்தில் அவர்களது இருத்தலும் கள அனுபவமும் இளம் படையினருக்குக் கூடுதல் சத்து மாத்திரையாக இருக்கும் என்பதை மறுக்க இயலாது. .

அதுபோலத்தான் குரேசியா போர்ச்சிக்கலுக்கு இடையே நடந்த போரில் இந்த நட்சத்திரக் கால்களைத் தாண்டியும் அடுத்தக் கட்ட இளங்கால்கள் அடவு கட்டின.

முதல் பாதி கோல் ஏதுமில்லாமல் சுழியத்தில் முடிய 53 வது நிமிடம் வரைக்கும் பந்து கம்பத்திற்குள் செல்லாமல் இருதரப்பும் காப்பரணை பலப்படுத்திக் கொண்டாலும் முதல் முதலாகக் கதவை உடைத்தது குரேசியா.

போர்ச்சுகல்லின் முற்றத்திற்கு வந்த பந்தை குரேசிய வீரர் பெரிசீட்ச்சின் இடது கால் உள்வாங்கி வசமாக வலைக்குள்ளாக்க, போர்சுக்கலுக்கு சிக்கல் ஏற்பட்டது.

அதன்பின்னர் வேகமெடுத்த களம் ரொனால்டோவின் கால்களுக்குப் பழம்போல ஒரு பந்தை பரிசாக்க ரொனால்டோ அதைக் கோலாக்கிக் கொண்டாடியபோது ஆப் சைட் கொடி மேலெழும்பி கடுப்பேற்றியது.

ஆனாலும் 68-ஆம் நிமிடத்தில் போர்ச்சுலுக்கு கிடைத்த தண்டக்கோல் வாய்ப்பை ரொனால்டா சரியாகப் பயன்படுத்திக் கோலாக்க, போர்ச்சுகல் தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டது.

எஞ்சியிருக்கும் இருபது நிமிடப்போர் உக்கிரத்திற்குச் சென்றாலும் ஆட்டம் சமநிலையிலேயே தொடர ஆட்ட நேர முடிவில் ஒரு நாடகம் நடந்தேறியது.

நாடகத்தின் உச்சத்தில் போர்ச்சுகல்லின் ராமோஸ் ஒரு கோல் போட போர்ச்சுகல்லின் 16-ஆம் களம் உறுதிசெய்யப்பட்டது.

ஆனாலும் ஆட்டம் முடியும் நேரம் இறங்கு வரிசையில் துடித்தது. அந்நேரத்தில் போர்ச்சுகலுக்கு மீண்டும் சிக்கல் ஏற்படுத்தும் வகையில் குரேசியா மறுகோல் போட, களம் மீண்டும் குழம்பிய குட்டையானது.

குரேசியா குசியானது. ஆனால் காணொளி கங்காணி நடுவர் (VAR) அந்த கோலை ஆப் சைட் என்று செல்லாததாக்கிவிட்டது.

இறுதியாக போர்ச்சுகல் இரண்டுக்கு ஒன்று என்ற நிலையில் அடுத்த களத்திற்குச் சென்றது.

இந்தத் தோல்வியை குரேசியா மட்டுமல்லாது மற்றவர்களும் ஏற்காத வகையில் சிறப்பாக அமைந்திருந்தது ஆட்டம்.

ஐந்து முறை உலகக் களத்தைக் கண்டு தங்கக் காலணியை வாங்கிய மோட்ரிச்சின் இந்தப் பயணம் தொடருமா என்று தெரியாது.

அடுத்து ஸ்பெயினுக்கும் ஆஸ்திரியாவுக்கும் நடந்த ஆட்டம் ஸ்பெயினுக்கு மூன்று கோல்களையும் சுவிஸ் அல்ஜீரிய ஆட்டம் சுவிசுக்கு இரண்டு கோல்களையும் அளிக்க இரு ஐரோப்பிய அணிகளும் அடுத்த நிலைக்குச் சென்றுவிட்டது.