இங்கிலாந்து டி ஆர் காங்கோ அணிகளுக்கிடையிலான ஆட்டம் தொடங்கிய ஏழாம் நிமிடத்திலேயே காங்கோவின் முன்கள வீரன் பிரையன் சிபேங்கா இங்கிலாந்தின் அடி மடியிலேயே கால் வைத்தாற்போல ஒரு கோலைப் போட இங்கிலாந்து அணியின் முகம் சுண்டிப் போனது.
சுதாரித்துக்கொண்டு அணியை மீட்பதற்காக இங்கிலாந்து எடுத்த அத்தனை முயற்சிகளும் டி ஆர் காங்கோ அணியால் முறியடிக்கப்பட்டது.
குறிப்பாக காங்கோ வலை காப்பாளன் எம்பாசி இங்கிலாந்து தொடுத்த அனைத்துச் செப்படி வித்தைகளுக்கும் கிடுக்குப்பிடி போட்டு காங்கோவைக் காப்பாற்றினான்.
ஆனால் இங்கிலாந்தின் முயற்சி 75 ஆம் நிமிடத்தில் திருவினையாக்கியது. இங்கிலாந்தின் முன்கள வீரன் ஹாரி கேனின் தொடர் முயற்சிக்குப் பலன் கிடைக்கும் வகையில் எம்பாசியின் தடுப்பரணை ஏமாற்றி, பந்தை வலைக்குள்ளாக்கினான். கேனின் கணைக்கால் தொடுத்த கோலால் இங்கிலாந்து விட்ட பெருமூச்சு டி ஆர் காங்கோ அணியின் நம்பிக்கையைப் பொசுக்கியது.
அடுத்த பதினைந்து நிமிடங்களுக்குள் முந்தும் கால்களுக்கே அடுத்த வாய்ப்பு என்ற நிலையில் களத்தின் இறுக்க நிலை இரட்டிப்பானது. இரு அணிகளின் கால்களும் வேகமாய்ப் படபடக்க 86 ஆம் நிமிடத்தில் கேனின் காலுக்கு வசதியாகக் கிடைத்த பந்து கோலாக மாறியது.
கனவுகளைக் கால்களில் கட்டிக்கொண்டு 52 ஆண்டுகளுக்குப் பின்னர் உலகக் களத்திற்கு வந்த டி ஆர் காங்கோ தாங்கொணா ஏமாற்றத்துடன் தனது பயணத்தை முடித்துக் கொண்டது.
ஹாரிகேனின் கால்கள் பெற்ற கள அனுபவம் மீண்டும் அவர்களது கால்களை அடுத்த களத்திற்குக் கடத்தியுள்ளது.
இந்திய வம்சாவளித் தமிழரான முத்துசாமி உள்ளிட்ட காங்கோவினர் அனைவரும் இந்த நிலையை அடைவதற்குக் களம் கற்றுக் கொடுத்த அனுபவம் அடுத்தடுத்த உலக மேடைகளின் வாசலைத் தட்டும் .
பெல்ஜியத்திற்கும் செனகலுக்கும் நடந்த இரண்டாம் போட்டியும் ஏட்டிக்குப் போட்டியாக ஆளுக்கு இரண்டு கோல்கள் என்ற கணக்குடன் பதற்றத்தின் உச்சத்திற்குச் சென்றது.
ஆட்ட நேர இறுதியில் வீணடிக்கப்பட்ட நேரத்திற்கு ஈடாகக் கொடுக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் செனகலுக்கு எதிரான விபத்தாக வந்தமைந்தது அந்தத் தண்டக்கோல் .
சர்ச்சைகளுக்கு நடுவே நடுவரின் ஊதலுக்குக் கட்டுப்பட்டுத் தண்டக்கோல் உதைக்கப்பட பெல்ஜியம் உள்ளே செனகல் வெளியே என்றாகிவிட்டது.
மூன்றாவது ஆட்டமான ஐக்கிய அமெரிக்க நாட்டுக்கும் போஸ்னியா ஹெர்சகோவினாவுக்கும் இடையிலான ஆட்டம் அமெரிக்காவுக்கு ஆதரவாக அமைந்துவிட்டது.
போஸ்னியோ ஹெர்சகோவினாக்கு எதிராக அமெரிக்க வீரரான பாலகன் போட்ட முதல் கோல் பால்கன் நாடுகளில் ஒன்றான போஸ்னியே ஹெர்சகோவினாவின் அடுத்த கட்ட நகர்வுக்கான முட்டுக்கட்டையாக அமைந்துவிட்டது.
போஸ்னியா தொடர் முயற்சிகளில் ஈடுபட்டாலும் முன்களம் வரைக்கும் வரைக்கும் ஆவேசம் காட்டும் பந்துகள் வலையகம் வரும்போது படுத்துக்கொள்கிறது.
இந்த த் திறன் குறைபாடு குழுப் போட்டியிலிருந்து தொடர்வதால் அதை சரிபார்க்க வேண்டியுள்ளது..
எண்ணித்துணிந்த கருமத்தின் கால்களுக்கு கோல்கள் கனியாத நிலையில் கால்கள் நடத்திய களியாட்டம் ஓயும் நேரத்தில் அமெரிக்காவுக்கு இலவச உதை வாய்ப்பு ஒன்றும் கிட்டியது. இதை மிகச்சரியாகப் பயன்படுத்தி கோலாக மாற்றினான் அமெரிக்காவின் தில்மான்.
1930 ஆம் ஆண்டு முதன் முதலாக உலகக் கோப்பைத் தொடங்கியபோது அரையிறுதிவரைக்கும் செல்லும் வாய்ப்பைப் பெற்றது அமெரிக்கா. அதன்பிறகு 5 முறை மட்டுமே தேர்ச்சிபெற்று குழு ஆட்டத்தையே தாண்டாமல் பின்னர் 2002 ல் காலிறுதி வரைக்கும் காலுக்கு வேலை கிடைத்தது.
தற்போதுதான் அவர்களின் கால்களுக்கு மேலே தென் அமெரிக்கக் கால்கள் நிழலாடத் தொடங்கியுள்ளது. சொந்தக்களம் அடுத்த நாக் அவுட்டில் துணை நிற்குமா...
பார்க்கலாம்!