FIFA 2026 Representing Image Chat GPT AI
விளையாட்டு

உதிரக்கொதிப்பை ஏற்படுத்தும் உள்ளே வெளியே போட்டி! #FIFA2026

சூடுபிடிக்கும் களம்.. சுற்றிச்சுழலும் கால்கள்..!

கார்மல்

 நேற்று இரவு நடந்த முதல் போட்டியில்  பிரேசில் ஜப்பான் ஆகிய இரு அணிகளும் வரிந்துகட்டிக் கொண்டு களமிறங்கின.

ஆசியகண்டத்தின் பிரதிநிதியாக களம் கண்ட ஜப்பானின் கால்களுக்கு கடிவாளம் போடும் விதத்தில் களத்தில் பாத்தி கட்டி ஆடியது பிரேசில். 

அரங்கம் சாம்பா தேச மஞ்சள் நிறம் மற்றும் சாமுராய் தேச நீல நிறத்தால் நிரம்பி வழிந்தது.

தொடக்க நேரத்தில் பிரேசில்  பந்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்தவாறு பலமுறை இலக்கைக்  குறிவைத்தும் பந்து பழமாகவில்லை.

பந்து இப்படியாக  பிரேசிலின் காலடிக்குள் செல்லங் கொஞ்சிக் கொண்டிருந்த நேரத்தில் ஜப்பான் வீரன் சனோ சடுதியாக குறுக்குச்சால் ஓட்டி பந்தைத் தட்டிப்பறித்து  பாய்ச்சல் எடுத்த போதுதான்  ஆபத்தை உணர்ந்தது பிரேசில். 

தடுத்தாட  முற்படுவதற்குள்   சனோ வைத்த குறி வலைஞன் ஆலிசனின் கைக்குத்தப்பி வலைப்பெட்டியின் வடமூலையில் ஒதுங்கிவிட்டது. 

மஞ்சள் பூத்துக்கிடந்த சாம்பா இரசிகர்களின் முகத்தில் சாம்பல் பூக்க ஜப்பானின் வானத்தில் நீலம் பாய்ந்தது. 

அதுவரைக்கும் மந்தமாய் காணப்பட்ட பிரேசிலின் கால்கள் கொதிநிலைக்குச் சென்றன. கால்களில் வெந்நீரை ஊற்றிக்கொண்டு ஆட பின்பாதியில் களம் பரபரப்பானது.

பந்தைக் தங்களது கட்டுக்குள் கொண்டு வந்த பிரேசில் இலக்கைப் பல முறை குறிவைத்தாலும்  ஜப்பான் வலைஞன் சுசுகி இயன்றவரை காவல்பணியைக் கச்சிதமாகவே செய்துவந்தான்.

ஆனாலும் காஸ்மேரா தலையில் வாங்கி வலைக்குள் தள்ளிய பந்தை தடுக்க முடியாமல் போக ஆட்டம் சம நிலைக்கு வந்தது.  

இரண்டு பக்கமும் மேல் மூச்சு கீழ் மூச்சு ஏறியிறங்க ஆட்டம் முடியும் வேளையில் பதிலியாக களமிறங்கிய மார்ட்டி நெல்லி பிரேசிலை மீட்கும் வகையில் இட்ட கோலால் தப்பியது பிரேசில்.

எட்டாவது முறையாக உலகக் களம் கண்ட ஜப்பானுக்கு இந்த முறையும் நாக் அவுட் மேடை எட்டாமல் போனதின் வலியை வீரர்களின் கண்ணீர் உணர்த்தியது .  

இரண்டுக்கு ஒன்று என்று ஆட்டம் முடிய அடுத்து நடந்த  ஜெர்மனி பராகுவே மற்றும் நெதர்லாந்து மொரோக்கா ஆகிய இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டிகளுமே சமநிலையைப் பெற்றதால்  வெற்றி தோல்வியை பெனால்டி சூட் அவுட் முறை தீர்மானித்தது.

நான்குமுறை வையக் கோப்பையை வசமாக்கிய ஜெர்மனிக்கு கெடுவாய்ப்பாக அமைந்தது இந்த முறை. ஒரே ஒரு  முறை மட்டுமே காலிறுதிக் கட்டத்திற்குச் சென்ற பராகுவே அணிக்கு நல்வாய்ப்பாக அமைய பராகுவே அடுத்த மேடைக்கு பறந்து சென்றது. 

பரபரப்புக்கும் பற்கடிப்புக்கும் பஞ்சமில்லாத அளவில் இருந்த இந்த ஆட்டத்தின் மறுபதிப்பாய் இருந்தது நெதர்லாந்துக்கும் மொரோக்கோவுக்குமிடையிலான மற்றொரு  போட்டி.

தொடக்கத்திலிருந்தே வேகம் அதிவேகம் எடுத்து இருதரப்புக் கால்களும் நெருப்பைக் கட்டிக்கொண்டு களமாடின.

பின்னறண்கள் இரண்டுமே உருக்குக்கால்களால் எழுப்பப்பட்ட சுவர்கள் போல எழுப்பப்பட்டிருந்ததால் கோல் முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன. 

72 - ஆம் நிமிடம் வரை இந்த இழுத்தடிப்பு தொடர  நெதர்லாந்து வீரன்  காக்போவின் காலுக்கு வசமாக கிடைத்த பந்து  வலைக்குள்ளாக நெதர்லாந்து வெற்றிக் களிப்பில் மிதந்தது. 

ஆனாலும் கடைசிவரை தங்களது காலின் மேல்  முரட்டு நம்பிக்கை வைத்து களமாடியது மொரோக்கோ. 

வெற்றித்திலகம்  சூடும் வரை காலைக் கடத்தலாம் என்று நெதர்லாந்து எண்ணிக்கொண்டிருந்த வேளையில் ஆட்டநேரம் முடிந்து  இழப்பீட்டு நேரத்திற்கான ஒதுக்கலில், மொரோக்கோவின் பின்கள வீரன் இஸ்ஸா டியோப்க்கு  கிடைத்த மண்டைமுட்டி வாய்ப்பு கச்சிதமான கோலாக மாறியது. 

விரக்தியின் உச்சத்துக்குச் சென்றனர்  டச்சு அணியினர். 

அதன் பிறகான கூடுதல் நேரத்திலும்  கோல் முயற்சிகள் பலிக்காமல் களம் சமநிலையில் நீடிக்க பெனால்டி சூட் அவுட் விதி கோல் கீப்பர்களின் நெற்றியில் எழுதப்பட்டது. 

வெற்றி தோல்விக்கான இந்த கடைசி வாய்ப்பு கோல் கீப்பர்களை மட்டுமல்லாது கோல் அடிக்க வாய்ப்புள்ள வீரர்களின் தலையிலும் கோல் அழுத்தத் தாழி உருவாகி விடும். 

நல்வாய்ப்பும் கெடுவாய்ப்புமாக அமையும் இந்த 11 மீட்டர் இடைவெளியிலான பந்தாட்டம் குறிதப்பாத வீரனுக்கோ அல்லது வலைஞனுக்கோ வசமாகும்.  

இன்று அந்த வாய்ப்பு நான்கு முறை கோப்பையைக் கைப்பற்றிய ஜெர்மனிக்கும்  மூன்று முறை இரண்டாம் இடத்திற்கு வந்த நெதர்லாந்துக்கும் கிட்டாமல் போயிற்று.  

இறுதியாக களத்தின் உள்ளே பிரேசில், பராகுவே மற்றும் மொரோக்கோ.வெளியே ஜப்பான், ஜெர்மனி, மற்றும் நெதர்லாந்து என்ற நிலைக்கு வந்தது.