இந்தியாவில் மந்திரவாதிகள் கண்டதையும் கூறி வைப்பது போல ஆப்ரிக்க நாடுகளிலும் மந்திரவாதிகள் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துவது உண்டு. கானா மக்களிடத்தில் புகழ்பெற்ற ஒரு மந்திரவாதி இருக்கிறார். அவரது பெயர், நானா க்வாகு போன்சம் (Nana Kwaku Bonsam). இந்தப் பெயருக்கு 'புதன்கிழமை பேய் ' என்று பொருளாம். போன்சம் ஒரு சாதாரண மந்திரவாதி அல்ல. நியூயார்க்கின் பிராங்ஸ் (Bronx) பகுதியில் கானா நாட்டு மக்களிடத்தில்தான் இவரும் வசித்தார். அங்கு, தனக்கென ஒரு ஆதரவுக் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார். பின்னர், கானாவுக்கு திரும்பியபோது, குமாசி விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று அந்த மந்திரவாதிக்கு வரவேற்பு அளித்தனர் .
இவருக்கு, சொந்தமாக காடிலாக் (Cadillac) கார் உள்ளது. விலையுயர்ந்த ஆடைகளை மட்டுமே அணிவார். மிகப் பெரியகால்நடைப் பண்ணைக்கு அதிபதி. பல மந்திர, தந்திர பள்ளிகளையும் நடத்தி வருகிறார். இந்த மத்திரவாதிக்கு 14 குழந்தைகளும் உண்டு. நியூயார்க், ஆம்ஸ்டர்டாம், பெர்லின் போன்ற நகரங்களில் சொத்துகள் உண்டு. புகழ்பெற்ற 'நியுயார்க் டைம்ஸ்' பத்திரிகையே இவரைப்பற்றி கட்டுரை எழுதியுள்ளது.
இப்போது, இந்த மந்திரவாதியை பற்றி பேச வேண்டிய அவசியம் மீண்டும் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி கானா அணியுடன் மோதியது. இந்த ஆட்டம் 0-0 என்று டிரா ஆனது. இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் (Harry Kane) பல கோல் வாய்ப்புகளை வீணடிந்தார். இந்தச் சூழலில், கானா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேனை கட்டுக்குள் வைத்து, தங்கள் அணிக்கு எதிராக கோல் அடிக்க விடாமல் செய்ததாக மந்திரவாதி போன்சம் கூறியுள்ளார். இது குறித்து 'டெய்லி ஸ்டார்' பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் , ''கானாவுக்கு எதிராக இங்கிலாந்து மோதிய போது, ஹாரி கேனை கட்டுப்படுத்தி கோல் அடிக்க விடாமல் செய்தேன். இதற்காக, மந்திரங்கள் செய்தேன். அவருக்கு சீரியசாக காயம் ஏற்பட நான் எந்த மந்திரமும் செய்யவில்லை. ஆனால், அவரால் கோல் அடிக்க முடியாமல் மட்டும் செய்தேன்'' என்று தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து, கானா மக்கள் அந்த மந்திரவாதியை வெகுவாக கொண்டாடி வருகின்றனர். ஏனென்றால், கானா மக்கள் மந்திர தந்திரத்தில் மிகுந்த நம்பிக்கைக் கொண்டவர்கள். ஆப்ரிக்கக் கோப்பை கால்பந்துத் தொடரின் போது, மந்திர, தந்திரங்கள் கதை கதையாக பேசப்படும். கடந்த 2025 ம் ஆண்டு மொராக்கோவில் ஆப்ரிக்கக் கோப்பைத் தொடர் நடந்தது. இறுதி ஆட்டத்தில் மொராக்கோ அணி செனகல் அணியுடன் மோதியது. போட்டியின் போது, செனகல் கோல்கீப்பர் எடுவார்ட் மெண்டி (Édouard Mendy) பந்தின் ஈரப்பதத்தை துடைப்பதற்காக சிறிய துண்டை பயன்படுத்தி வந்தார். பந்து தன்னிடத்தில் வரும் போதெல்லாம், துண்டைக் கொண்டு பந்தைத் துடைத்தார். இந்தத் துண்டில் ஏதோ மந்திரம் இருப்பதாக கருதிய மெராக்கோ நாட்டு பால் பாய்ஸ், மென்டி பயன்படுத்திய துண்டை எடுத்து தூர வீச முயன்றனர். மொராக்கோ அணி வீரர்களும் அந்தத் துண்டைக் கைப்பற்ற முயன்றனர். இதற்காக, மொராக்கோ வீரர் ஒருவர் ஆப்ரிக்கக் கால்பந்து சங்கத்தால் சஸ்பெண்ட்டும் செய்யப்பட்டார். இந்த ஆட்டத்தில் களத்தில் செனகல் வென்றது. ஆனால், நடுவரின் மோசமான முடிவை எதிர்த்து செனகல் வீரர்கள் 15 நிமிடங்கள் களத்தை விட்டு வெளியேறியிருந்தனர். இந்தக் காரணத்துக்காக செனகல் அணியிடம் இருந்து கோப்பை பறிக்கப்பட்டு, மொராக்கோ சாம்பியனாக அறிவிக்கப்பட்டது.
கால்பந்துக் களத்தில் நடக்கும் மந்திர தந்திர நடவடிக்கைகளுக்கு முடிவு கட்ட ஆப்ரிக்க கால்பந்து சம்மேளனம் நடவடிக்கை எடுத்ததும் உண்டு. மைதானங்களில் தாயத்துக்கள், பொடிகள் மற்றும் மந்திரவாதிகளுக்கு முற்றிலும் தடை விதித்தது. கடந்த 2008ம் ஆண்டு ஆப்ரிக்க கால்பந்து சம்மேளனம் வெளியிட்டிருந்த அறிக்கையில், ''உணவு விற்பனைக் கடைகளில் நரமாமிசத்தை பார்க்க நாம் விரும்ப மாட்டோம். அதே போலவே, ஆடுகளத்தில் மந்திரவாதிகளைப் பார்க்கவும் நாங்கள் விரும்பவில்லை" என்று குறிப்பிட்டிருந்தது.
ஆப்ரிக்காவில் மந்திர, தந்திர நடவடிக்கைகளை கட்டுப்படுத்த எவ்வளவுதான் நடவடிக்கை எடுத்தாலும், முற்றிலும் அகற்ற முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாக உள்ளது.
முன்னதாக, இதே போன்சம் கடந்த 2014ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரின் போது, போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோவுக்கு மூட்டு பகுதியில் சிறிய காயம் ஏற்பட சூனியம் வைத்ததாக கூறியிருந்தார். ஆனால், அந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி 2- 1 என்ற கோல் கணக்கில் வென்றது. 80வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணிக்கான வெற்றி கோலை ரொனால்டோ அடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.