FIFA 2026 ChatGPT AI Image
விளையாட்டு

நீண்ட இடைவெளிக்குப் பின் களத்தில் கால் நனைத்த நெய்மர்!

ஏழாம் நிமிடத்தில் நடந்த சாம்பா சேனையின் கால்கூத்து வினியின் தலையிடி கோல் மூலம் தொடர மேத்யூ குன்யாவின் மூன்றாம் கோலில் முடிந்து 7 புள்ளிகளுடன் நாக் அவுட் தளத்திற்கு சென்றுள்ளது.

கார்மல்

முன்களத்தில் பிரேசிலின் ராயன் தொடுத்தப் பந்தைத் தடுத்த ஸ்காட்லாந்த் வலைக்காப்பாளன் பந்தை தனது அணி வீரன் அங்குஸ் கன்னின் காலுக்கு நகர்த்தும் போது அந்த விபத்து நடந்தது.

காப்பரண் ஏதுமின்றி முன்களம் திறந்துகிடக்க அங்குஸ் கன்னின் காலைச்சுற்றிய பந்தைக் கன்னக்கோல் வைத்து அபகரித்துச் சென்றான் பிரேசிலின் வினி.

ஆபத்தை உணர்ந்த வலைகாப்பாளன் வினியை தடுக்கப் பாய்ந்துவருவதற்குள் வினியின் கால் சடுதியில் வினையாற்ற பிரேசில் கணக்கில் முதல் கோல் வரவு வைக்கப்பட்டது .

ஏழாம் நிமிடத்தில் நடந்த சாம்பா சேனையின் கால்கூத்து வினியின் தலையிடி கோல் மூலம் தொடர மேத்யூ குன்யாவின் மூன்றாம் கோலில் முடிந்து 7 புள்ளிகளுடன் நாக் அவுட் தளத்திற்கு சென்றுள்ளது.

பிரேசிலின் நட்சத்திர ஆட்டக்காரன் நெய்மர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு களத்தில் கால் நனைத்திருக்கிறார் .

காயம் காரணமாக நீண்ட நாள்கள் ஆடாமலிருந்த நெய்மர் ஆட்டத்தின் பின்பாதியில் குன்யாவின் பதிலியாய் களமிறங்க பார்வையாளர் மாடம் கொண்டாடித் தீர்த்தது.

C குழுவின் இரண்டு முரட்டு அணிகளான மொரோக்கோவும் பிரேசிலும் தலா 7 புள்ளிகளோடு அடுத்த நிலைக்குச் சென்றுள்ளது.

ஆப்பிரிக்க மண்ணிலிருந்து வந்து களத்தில் கலக்கிய கேமரூண் அணி இல்லாத குறையை இந்த முறை மொரோக்கோ தீர்த்துவருகிறது .

பிரேசிலையே பீதி கிளப்பும் வகையில் மிரட்டிய மொரோக்கோவின் ஆட்டத்தை நாக் அவுட் தளத்திலும் காணலாம்.

ஆனால் இந்தக்குழுவில் எல்லோராலும் அடித்துத் துவைக்கப்பட்ட ஹைத்தி நேற்றைய ஆட்டத்தில் மொரோக்கோவையே மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க வைத்துவிட்டது .

அணையப்போகிற கால்களில் தீயைக் கொளுத்திப்போட்டு ஆடிய ஹைத்தி முதல் கோலைப் போட்டதோடு முன்பாதிவரை இரண்டுக்கு இரண்டு என்று மொரோக்கோவுக்கு மரண பீதியைக் காட்டியது .

பின்பாதியில் மொரோக்காவின் ஆதிக்கக்கால்கள் கூடுதல் இரண்டு கோல்களைப் போட்டு ஹைத்தியை பாத்தி கட்டி அடக்க 4 -2 என்ற நிலையில் மொரோக்கோ வென்றது.

தென் ஆப்ரிக்க அணிக்கும் தென் கொரிய அணிக்குமிடையிலான மற்றொரு போட்டியில் 63வது நிமிடத்தில் தென் ஆப்ரிக்காவின் மாசேக்கோ அடித்த கோல் அந்த அணியை நாக் அவுட் தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது .

நான்காவது முறையாக களம் காணும் தென் ஆப்ரிக்கா முதல் முறையாக நாக் அவுட் மேடைக்கு நகர காரணமாக இருந்த மாசேக்கோ

ஆட்ட நாயகனானான்.

அடுத்து நாக் அவுட் மேடை வாழை கட்டி வரவேற்கிறது.

கால்கூத்து பார்க்லாம் வாருங்கள்