லயோனல் மெஸ்ஸி, கிலியான் எம்பாப்பே, எர்லிங் ஹாலன்ட், ஆகிய மூன்று கால்பந்து கொடுங்காலர்களுமே தங்களது கால்கள் தங்களுக்கு இரட்டை கோல்களை காணிக்கையாகத் தரும் என்று நேற்று எண்ணியிருக்க மாட்டார்கள். இவர்களோடு செனகல் அணியின் இஸ்மைலா சார் என்ற வீர்ருக்கும் இரட்டிக்கோல் கிட்டியிருக்கிறது.
முதல் ஆட்டத்தில் மூன்று கோல் போட்டு அல்ஜீரியவை மூச்சுத்திணற வைத்த மெஸ்ஸி, ஆஸ்டிரியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் கோல் இட வேண்டிய வாய்ப்பு வந்தது.
தொடக்கத்தில் தண்டக்கோல் வாய்ப்பு மெஸ்ஸிக்கு கிடைத்தபோது, அணி தனது முதல் கணக்கை உறுதிப்படுத்தியதில் திளைத்தது. ஆனால் மெஸ்ஸியின் டிரேட் மார்க் இடது கால் வைத்த குறி சற்று இடற வலைப்பெட்டியைத் தாண்டி நழுவிச்சென்றது பந்து.
கோட்டை விட்டுட்டியே GOAT என்பது போன்ற வாய்பிளப்பு பார்வையாளர் மாடத்தில் மட்டுமில்லாது உலகளாவிய மெஸ்ஸியிச விரும்பிகளுக்கும் ஏற்பட்டது என்றே சொல்லவேண்டும்.
ஆனாலும் 38- ம் நிமிடத்தில் முத்திரை கோலை பதிவுசெய்து தனது நாட்டை பெருமூச்சிட வைத்தார் 38 வயது நிரம்பிய மெஸ்ஸி. எதிராளிகளை போக்குக் காட்டி கால் நகர்த்தும் அனுபவத்தொடரின் தொடர்ச்சியாக அமைந்தது அந்த அழகு கோல்.
பந்தை இடமூலைமார்க்கமாக நகர்த்தி எதிராளிகளின் கவனத்தை திருப்ப, பந்தைப் பெற்ற மெடினா வலைப்பெட்டியின் நடுமுற்றத்தில் இருந்த மெஸ்ஸியின் காலடிக்குக் கடத்த மெஸ்ஸியின் இடக்காலுக்கு முதல் தீனி கிடைத்தது.
அடுத்தடுத்த கோலுக்கான வாய்ப்புகள் வந்தும் கோல் கூடிவரவில்லை. ஆனால் ஆட்டம் முடிவதற்கான கூடுதல் நேரத்தில் நடுகளத்தின் வலக்கோட்டுக்கருகிலிருந்து காலுக்குக் கிடைத்த பந்தை அதிவேகமாக கடத்திவந்து உதைக்க, அதை வலையாளர் தடுத்தாட... தெறித்து ஓடிய பந்தை அசுர வேகத்தில் வலைக்குள் புதைத்துத் தனது தனித்தடத்தைப் பதித்தார்.
பிரான்சுக்கும் ஈராக்குக்கும் நடந்த மற்றொரு போட்டியில் எம்பாப்பே இரண்டு கோல்கள் போட்டு கோலோச்சினார். இது இரண்டாவது கோல் இலவச இணைப்புபோல அமைந்தது.
ஈராக் அணிவீரர் நகர்த்திய பந்தை ஈராக் வலையாளர் கால்பற்றாமல் போக அது எம்பாப்பேயின் காலண்டைக்கு சென்றது. வாராது வந்த மாமணிபோல வந்தது அந்த அல்வா கோல்.
இந்த ஆண்டு போட்டியில் மெஸ்ஸி, எம்பாப்பே போன்று களத்தைக் கலக்கிய மற்றொரு வீரன் நார்வேயின் எர்லிங் ஹாலன்ட். சக வீரர்களின் தலைக்கு இணையாக தனது தோளைக் கொண்ட இந்த உயர்ந்த மனிதன், தன்காலை கருக்குமட்டையாக்கிக் குறிபார்த்து கோல் போடுகிறார்.
இருபெத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நார்வேயின் இருப்பை உலகுக்கு உணர்த்தியிருக்கிறார் ஹாலன்ட். நார்வே, செனகலை மூன்றுக்கு இரண்டு என்ற கோல்கணக்கில் வென்று நாக்அவுட் களத்திற்குச் சென்றுள்ளது.
நார்வேயிடம் செனகல் தோல்வியுற்றாலும் செனகலும் நார்வேக்கு எதிராக இரண்டு கோல்களைப் பதிவுசெய்திருக்கிறது. இஸ்மைலா சார் என்ற வீரன்தான் அந்த இரண்டு கோல்களுக்கமான சொந்தக்காலன்.
இந்த ஆண்டுக்கான தங்கக்காலணியை தட்டிப்பறிக்கும் போட்டியில் முதல் மூவர் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
உலக கால்பந்துப் கோப்பை வரலாற்றில் 18 கோல்களைப்போட்டு முதல் நிலையில் மெஸ்ஸி நிற்கிறார். 16 கோல்களைப் போட்டு அடுத்த வரிசையில் எம்பாப்பே.
இந்த உலக கோப்பைக்கான போட்டியில் மெஸ்ஸி 5 எம்பாப்பே 4 ஹாலன்ட் 4 என்று கோல்கணக்குடன் தங்க காலணிக்கான போட்டிவரிசையில் நிற்கின்றனர்.
சில சாதனைகளுக்கு, காலம் மட்டுமல்ல.. களமும் பதில் சொல்லும். இவர்களுக்கு.. நாக் அவுட் களம் பதில் சொல்லும்.