merlin the duck 
விளையாட்டு

இணையத்தை கலக்கும் மெர்லின்! #FIFA

உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெறும் போதெல்லாம், ஏதாவது விலங்குகள் பாப்புலராகும். இந்த முறை மெர்லின் என்ற 2 வயது வாத்து இணையத்தில் வைரலாக வலம் வருகிறது. மெர்லின் இன்னும் பிரெஸ்மீட் மட்டும்தான் கொடுக்கவில்லை.

எம். குமரேசன்

உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் மெக்ஸிகோ அணி முதல் அணியாக நாக்- அவுட் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள அந்த அணி வெள்ளிக்கிழமை (ஜூன் 19) நடந்த ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவைத் தோற்கடித்தது. இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஐந்தாவது நிமிடத்தில் அந்த அணிக்கான வெற்றி கோலை அடித்தார், லூயிஸ் ரோமோ. மெக்ஸிகோ அணி முதல் ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் தென்ஆப்ரிக்காவை வீழ்த்தியிருந்தது. இதையடுத்து, ஆறு புள்ளிகளுடன் பிரிவில் முதலிடத்தில் இருக்கும் மெக்சிகோ, அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது.

இதனால், மெக்ஸிகோ மக்கள் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கையில், 2 வயது நிரம்பிய மெர்லின் என்ற வாத்தும் உலகம் முழுக்க பாப்புலராகியுள்ளது. மெக்ஸிகோ சிட்டியிலுள்ள அஸ்டகா (Azteca ) மைதானத்தில்தான் நடப்பு உலகக் கோப்பை தொடரின் முதல் ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் மெக்ஸிகோ அணி தென்னாப்ரிக்க அணியை வீழ்த்தியது. இந்த போட்டியைக் காண மெக்சிகோ அணியின் பச்சை நிற ஜெர்சி அணிந்து தனது உரிமையாளருடன் மெர்லின் (Merlin) என்ற ஆண் வாத்து வந்திருந்தது. அப்போது முதல் இணையத்தில் மெர்லின் வைரலானது. ரசிகர்கள், போட்டோ, புகைப்படம், செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

இதையடுத்து, ஃபிபா மெர்லினை கவுரவிக்கும் வகையில் கால்பந்து ஆட்டத்தின் அம்பாசிடராக அறிவித்துள்ளது. இதனால், டி.வி. ஷோ நிகழ்ச்சிகளிலும் மெர்லின் உரிமையாளருடன் பங்கேற்கிறது. அதேபோல, எந்த அணி வெற்றி பெறும் என்கிற கணிப்பிலும் மெர்லின் ஈடுபட்டு வருகிறது.

கார்லே இவாட்டே கோமஸ் (Karla Ivette Gomez) என்ற 48 வயது வியாபாரி மெர்லினை வளர்த்து வருகிறார். தற்போது, தினமும் மெர்லினைச் சுற்றி பத்திரிகையாளர்கள், கேமராமேன்கள் வலம் வருகின்றனர். ரசிகர்கள் பகுதியில் மெர்லினை பார்க்கும் ஒவ்வொரு மெக்ஸிகோகாரர்களும் இனம் புரியாத மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். இதுதான், மெர்லினுக்கு கிடைத்த பெரிய மரியாதையாக பார்க்கப்படுகிறது. 'அதற்கு, ஆஃப்சைட் ரூல்ஸ் தெரிகிறதோ... இல்லையோ, எங்களுக்கு மெர்லினைப் பார்த்தாலே உற்சாகம் தொற்றிக் கொள்கிறது ' என்று மெக்சிகோ ரசிகர்கள் சிலாகித்து கூறுகின்றனர்.

இது குறித்து, கோமஸ் கூறுகையில்,'' நான் எப்போதும் மெர்லினுக்கு மெக்ஸிகோ அணியின் ஜெர்சி அணிந்து வாக்கிங் அழைத்துச் செல்வேன். அப்படிச் செல்லும் போது, பெண் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டார். அப்போதிருந்து, மெர்லின் பாப்புலராகி விட்டது. எங்கள் குடும்பத்தில் மெர்லினும் ஒருவன். அவனில்லாமல் எங்களுக்கு வேறு எதுவும் இல்லை. எங்கு சென்றாலும், அவனுக்கு தேவையான உணவான காய்கறிகள் , மீன், பழங்கள் போன்றவற்றை எடுத்துச்செல்வோம். தண்ணீர் வைத்திருப்போம். அவ்வப்போது, ஜெர்சியை கழற்றி இறக்கைகளை நீவி விடுவோம். ஃபிபா அமைப்பு கால்பந்து அம்பாசிடராக மெர்லினை அறிவித்துள்ளது . இது, எங்களுக்குப் பெருமையாக உள்ளது '' என்கிறார்.

இந்த வாத்தை, கோமஸ் குடும்பத்துக்கு நண்பர் ஒருவர், பரிசாக கொடுத்துள்ளார். கோமஸ் குடும்பத்தினர் வளர்க்கும் மூன்றாவது வாத்து இதுவாகும். தற்போது, மெர்லினுக்கு 2 வயது ஆகிறது.

உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெறும் போதெல்லாம், ஏதாவது விலங்குகள் சும்மா ஜாலியாக பாப்புலராகும். கடந்த 2010ம் ஆண்டு பால் என்ற ஆக்டோபஸ் ஆரூடம் பார்த்து உலகம் முழுக்க பாப்புலரானது. அதே போல, நெல்லி என்ற யானை, ஆச்சிலிஸ் என்ற பூனை,டையோ என்ற ஒட்டர், ஸ்விம்பேப் என்ற கோல்ட்ஃபிஷ் மீன், ஜூனியர் என்ற நாய் போன்ற விலங்குகளும் ஆரூடத்தில் ஈடுபட்டு, வைரலாகியிருந்தன. அந்த வகையில், நடப்பு உலகக் கோப்பைத் தொடரை முன்னிட்டு, மெர்லின் இணையத்தை கலக்கி வருகிறது.