Cape Verde VS Uruguay FIFA 2026 ChatGPT AI
விளையாட்டு

உலக கால்பந்து சாம்பியன்களை உளுக்கெடுக்கும் கேபோ வெர்தே!

FIFA 2026 உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டியின் நேற்றைய துளிகள்!

கார்மல்

உலகக் கோப்பையின் H பிரிவில் நேற்று நடைபெற்ற போட்டியில் உருகுவே அணிக்கும் கேபோ வெர்தே அணிக்குமான ஆட்டம் மீண்டும் கவனத்தைப் பெற்றது.

முதலாம் ஆட்டத்தில் கேபோ வெர்தேவின் கால்களால் பட்ட வடுவைப் போக்க மற்றொரு போட்டியில் செளதி அணிக்கு எதிராக நான்கு கோல்களைப் போட்டு பெருமூச்சுவிட்டது ஸ்பெயின் அணி.

ஆனால் மியாமி மைதானத்தில் ஸ்பெயினைப் போன்ற மற்றொரு பலமான அணியான உருகுவேயை உளுக்கெடுத்துக்கொண்டிருந்தது கேபோ வெர்தே.

ஸ்பெயின் மற்றும் உருகுவே ஆகிய இருநாட்டு அணிகளும் உலக கால்பந்துத் தர வரிசைகளில் இரண்டு மற்றும் ஐந்தாம் இடத்தில் இருக்கும் அணிகளாகும்.

உருகுவே உலகக் கோப்பை கால்பந்து கோப்பையை இருமுறை பெற்றது. ஸ்பெயின் 2010ல் சாம்பியன் .

ஆனால் வெறும் ஐந்தரை லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஒரு சுண்டைக்காய் நாட்டு அணி இந்த உலகச் சாம்பியர்களுக்கு எதிராக நடத்திய சாமியாட்டம் உலக கால்பந்து இரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. .

முதல் ஆட்டத்தில் ஸ்பெயினின் ஊடறுப்பைத் தடுத்து கோல் எதுவும் விழாமல் காத்தவராயனாக மாறினார் வலையாளன் வாசினா.

அடுத்து உருகுவே அணிக்கெதிரான ஆட்டத்தில் காத்தல் கடமையிலிருந்து பந்துகடத்தல் உத்தியை முடுக்கிய கேபோ வெர்தே அணிக்கு இலவச உதை வாய்ப்பு தொடக்கத்தில் கிடைத்தது.

பந்துக்கும் கம்பத்திற்குமான இடைவெளி சுமார் 24 யார்ட் தூரம். அதாவது சுமார் 72 அடிதூர தூரத்தில் நிலைகொண்ட பந்தை வலைக்குள் ஆக்குவதற்கான வாய்ப்பு கேபோ வெர்தே அணியின் நடுகள நாயகன் கெவின் பினாவுக்கு கிடைத்தது.

பினா தொடுத்த பந்து உருகுவே அணியின் தடுப்புக்கால்களைக் ஊடறுத்து நேரடியாக வலைக்குள் நுழைய உலகக் கோப்பைக்கான முதல் கணக்கைத் தொடங்கியது கேபோ வர்தே.

உருகுவே அணி உறைநிலைக்குச் சென்றாலும் களத்தை மீட்டெடுக்க நடந்த போரில் இரண்டு கோல்களை போட்டு வெற்றி மிதப்புக்குச் சென்றது உருகுவே. ஆனால் 61 வது நிமிடத்தில் கேபோ வெர்தே இட்ட கடைசி கோலால் களம் இரண்டுக்கு இரண்டு என்ற சமநிலைக்கு வந்தது.

எஞ்சிய நேரம் இழுத்துப் பிடிக்கப்பட வெற்றி தோல்வி இல்லாமல் போட்டி முடிவடைந்தது.

மலையை வென்றது மடு!