நடப்பு உலகக் கோப்பை தொடரில் காங்கோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெரிதும் பேசப்பட்ட விஷயம் 'போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோவின் (Ronaldo) கோல் அடிக்கும் திறன் குறைந்து விட்டதா'என்பதுதான். 41 வயதான ரொனால்டோ இந்த ஆட்டத்தில் தனக்குக் கிடைத்த பொன்னான இரு வாய்ப்புகளை வீணடித்தார். 90 நிமிட நேரமும் களத்தில் நின்ற ரொனால்டோ, 25 முறைதான் பந்தை தனது காலில் தொட்டிருக்கிறார். அதோடு, போர்ச்சுகல் மீட்ஃபீல்டரான ப்ரூனோ ஃபெர்னான்டசுக்கு (Bruno Fernandes) அனுப்பப்பட்ட பாஸ்களையும் இடை மறித்து ரொனால்டோ தடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அணிக்காக விளையாடாமல் செல்ஃபிஷ்ஷாக ரொனால்டோ களத்தில் நடந்துக் கொண்டதாகவும் சிலர் குறை கூறி வருகின்றனர்.
இது குறித்து பிரான்ஸ் அணியின் முன்னாள் வீரர் தியேரி ஹென்றி (Thierry henry) கூறுகையில், ''அணி கோல் அடிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். நீங்கள் கோல் அடிப்பது அல்ல.ரொனால்டோ தனது சொந்த கோல் அடிக்கும் ஆசையால், சக வீரர் ப்ரூனோ பெர்னாண்டசுக்கு இடையூறாக நின்று கொண்டிருந்தது தவறு. அனுபவமிக்க ரொனால்டோ தற்காப்பு வீரர்களை தன்னை நோக்கி ஓடி வரச் செய்திருந்தால் மற்றவர்களுக்கு கோல் அடிக்கும் வழி எளிதாக மாறியிருக்கும். ஆனால் , அதற்குப் பதிலாக அவர் பந்தை நோக்கி ஓடிக் கொண்டே இருந்தது தவறான விஷயம்'' என்று விமர்சித்துள்ளார்.
மேலும், கோல் அடிப்பதில் ரொனால்டோ கடந்த 4 ஆண்டுகளாக திணறிக் கொண்டிருக்கிறார். கடைசியாக 2022ம் ஆண்டு கத்தார் உலகக் கோப்பை தொடரில், கானா அணிக்கு எதிராக ஒரு கோல் அடித்திருந்தார். இது, ஒரு பெனால்டி கோல். அதற்குப் பிறகு, கிட்டத்தட்ட 10 சர்வதேச ஆட்டங்கள் விளையாடியுள்ள ரொனால்டோவால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
மேலும் , சமீப காலங்களில் ரொனால்டோ முதல் 11 வீரர்களில் களமிறங்கினால், போர்ச்சுகல்1.9 கோல் அடித்திருக்கிறது. ஆனால், ரொனால்டோ இல்லாமல் ஸ்டார்டிங் லெவன் ஆடினால், போர்ச்சுகல் 2.8 கோல் அடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. எது, எப்படியாகினும், ரொனால்டோ ஒரு ஆகச்சிறந்த வீரர் என்பதை மறுப்பதற்கில்லை. 41 வயதில் ஆடுவதுதான், அவரது கோல் அடிக்கும் திறமை குன்றக் காரணமாக இருக்கலாம் என்பது கால்பந்து நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
அதேவேளையில், காங்கோ நாட்டைப் பொறுத்தவரை, போர்ச்சுக்கல் அணியை சமன் செய்ததே வெற்றி பெற்றது போலத்தான். 52 ஆண்டுகளுக்குப் பிறகு , மீண்டும் உலகக் கோப்பையில் விளையாடியுள்ள காங்கோ அணி போர்ச்சுகல் அணியை கட்டுப்படுத்தி, தனது முதல் புள்ளியையும் ஈட்டியுள்ளது. இந்த அணிக்காக மிகச்சிறந்த தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியவர் சாமுவேல் முத்துசாமி (Samuel Moutoussamy) என்ற தமிழ்வம்சாவளி வீரர்.களத்தில், ரொனால்டோவை முற்றிலும் கட்டுப்படுத்திய டிஃபென்சிவ் மிட்பீல்டர் (defensive midfielder) ஆவார். பிரான்சில் பிறந்த சாமுவேலின் தாயார் காங்கோ நாட்டைச் சேர்ந்தவர். தந்தை முத்துசாமி தமிழ் வம்சாவளி ஆவார்.
தற்போது , 29 வயதான இவர் கிரீஸ் நாட்டு கால்பந்து கிளப் அட்ராமிடோஸ்க்காக (Atromitos) விளையாடி வருகிறார். போர்ச்சுகல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 84 சதவிகிதம் துல்லியமாக பாஸ் செய்து அசத்தியுள்ளார். காங்கோவின் பின்களத்தில் தூண் போன்று நின்று, ரொனால்டோவை சோர்வடையச் செய்து விட்டார். இவரது, சிறப்பான தடுப்பாட்டமும் ரொனால்டோவை திணறச் செய்து விட்டது என்றால், மிகையல்ல.
தற்போது, போர்ச்சுகல் அணியின் புதிய தலைமுறை வீரர்கள் களத்தில் ஆக்ரோஷம் காட்டத் தயாராகியுள்ளனர். ரொனால்டோ பெஞ்சில் அமர்த்தப்பட்டால், அவர்களில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. எனினும், போர்ச்சுகல் பயிற்சியாளர் ராபர்ட்டோ மார்டினஸ் (Roberto Martínez) ரொனால்டோ மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். எனவே, இப்போதைக்கும், ரொனாடல்டோ மாற்று ஆட்டக்காரராக களமிறங்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.