அர்ஜெண்டினா கேப்டன் லயனல் மெஸ்ஸியின் இந்த அசாத்தியமான நீண்டகால ஆட்டத்திறனை (Longevity) வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. கால்பந்து உலகின் ஜாம்பவானான பிரான்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் சினடேன் சிடேனை (Zinedine Zidane) எதிர்த்து மட்டுமே மெஸ்ஸி பல ஆண்டு காலம் விளையாடியுள்ளார். மெஸ்ஸி தனது ஆரம்பக்காலத்தில் சினடேன் சிடேனை எதிர்த்து விளையாடியிருக்கிறார். பின்னர் , சிடேன் ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளராக மாறிய போது, அவருக்கு எதிராக பார்சிலோனாவுக்காக மெஸ்ஸி விளையாடிக் கொண்டிருந்தார். சில ஆட்டங்களில் ரியல் மாட்ரிட்டை துவம்சமும் செய்துள்ளார். இப்போது, தனது 6ஆவது உலகக் கோப்பைத் தொடரில் விளையாடும் மெஸ்ஸி, இதே சிடேனின் மகனான அல்ஜீரிய கோல்கீப்பர் லூகா சிடேனை (Luca Zidane) எதிர்த்து ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தியுள்ளார்.
'எங்கிட்ட சரசம் பண்ணணும்னே உங்க அப்பா அம்மா பெத்து போட்டுருக்காங்களா? ' என்று நடிகர் வடிவேல் ஒரு காமடியில் கூறுவாரே, அதே போலத்தான் மெஸ்ஸி, சிடேனை மட்டுமல்லாமல் அவரது மகனையும் டீல் செய்துள்ளார்.
இந்த உலகக் கோப்பை தொடரில் அர்ஜெண்டினா அணி தனது முதல் ஆட்டத்தில் அல்ஜீரியா அணியை எதிர்கொண்டது. இந்த அணிக்கு சிடேனின் மகன் லூகா சிடேன்தான் கோல்கீப்பர். சிடேன் பிறப்பால் அல்ஜீரியாவைச் சேர்ந்தவர். எனினும், சிடேன் தனது மகன் தனது சொந்த நாடான அல்ஜீரியாவுக்காக விளையாட விரும்பிய போது, மறுப்பு தெரிவிக்கவில்லை. மகனின் விருப்பத்துக்கு தடையும் போடவில்லை. அதோடு, அர்ஜெண்டினாவுடனான ஆட்டத்தில் மகனின் திறமையை நேரில் காணவும் சிடேன் அட்லாண்டா மைதானத்துக்கு சென்றிருந்தார்.
ஆனால், அர்ஜெண்டினாவின் தரமான ஆட்டத்துக்கு முன்னால், அல்ஜீரிய அணியால் தக்குப்பிடிக்க முடியவில்லை. அர்ஜெண்டினா அணிக்காக 200வது சர்வதேச ஆட்டத்தில் விளையாடிய மெஸ்ஸி 17வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். தொடர்ந்து, 60 மற்றும் 76வது நிமிடத்தில் மேலும் இரண்டு கோல்களை அடித்து ஹாட்ரிக் சாதனையை படைத்தார். உலகக் கோப்பையில் மெஸ்ஸி அடித்த முதல் ஹாட்ரிக் கோல் இதுவாகும். கடந்த 2018ம் ஆண்டு ரஷ்ய உலகக் கோப்பை தொடரில் ஸ்பெயின் அணிக்கு எதிராக கிறிஸ்டியானோ ரொனால்டோ( Cristiano Ronaldo) 33 வது வயதில் ஹாட்ரிக் கோல் அடித்த சாதனையையும் மெஸ்ஸி முறியடித்தார். அதாவது, உலகக் கோப்பையில் அதிக வயதில் அதாவது 38 வது வயதில் ஹாட்ரிக் கோல் அடித்த வீரர் என்ற அசைக்க முடியாத புதிய சாதனையையும் மெஸ்ஸி படைத்துள்ளார்.
இதுமட்டுமல்ல, உலகக் கோப்பை தொடர்களில் ஜெர்மனியின் மிராஸ்லாவ் குளோஸ் (Miroslav Klose) 16 கோல்கள் அடித்து, அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். தற்போது, இந்த சாதனையை மெஸ்ஸி சமன் செய்துள்ளார். அடுத்து, வரும் ஆட்டங்களில் குளோசின் சாதனையை மெஸ்ஸி முறியடிக்கும் வாய்ப்புள்ளது. கடந்த 2006ம் ஆண்டு முதன்முறையாக மெஸ்ஸி உலகக் கோப்பையில் களம் இறங்கினார். இந்த தொடரில், செர்பிய அணியை அர்ஜெண்டினா 6 கோல்கள் அடித்து வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி உலகக் கோப்பையில் முதல் கோலை அடித்திருந்தார். தற்போது, 20 ஆண்டுகளுக்குப் பிறகும், மெஸ்ஸி அதே திறனுடன் விளையாடிக் கொண்டிருப்பதுதான் கால்பந்து வல்லுநர்களுக்கு ஆச்சரியத்தைத் தருகிறது.
'கடினமான நாட்கள்'- மெஸ்ஸி
போட்டி முடிந்ததும் மெஸ்ஸி கூறுகையில், ''சில ஆண்டு காலமாக குழப்பமான மனநிலை, கடினமான நாள்களை நான் சந்தித்தேன். இந்தக் கடினமான தருணத்திலும் திறமையாக விளையாட காரணமாக இருந்த எனது சக வீரர்கள், பயிற்சியாளர்கள், சப்போர்ட்டிங் ஸ்டாஃப் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அற்புதமான அணியில் நான் இடம் பிடித்துள்ளேன். அர்ஜெண்டினா அணியின் என்ஜாய் செய்து விளையாடுகிறேன். அனைவருக்கும் நன்றி'' என உருக்கமாக தெரிவித்துள்ளார்.