நடப்பு உலகக் கோப்பை தொடரில் கேப் வெர்டே (Cape Verde) என்ற குட்டி அணி ஸ்பெயின் அணியை கடித்து வைத்துள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு கேப் வெர்டே முதன்முதலாக தகுதி பெற்றுள்ளது. இதனால், முன்னாள் உலகச் சாம்பியனும் நான்கு முறை யூரோ சாம்பியனுமான ஸ்பெயின் அணி, கேப் வெர்டே அணியை ஊதித் தள்ளிவிடுமென்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஸ்பெயின் ரசிகர்கள் கோல் மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால், அட்லாண்டா மைதானத்தில் கேப் வெர்டே வீரர்கள் மாயாஜாலமே நிகழ்த்திக் காட்டி விட்டனர். முக்கியமாக, இத்தாலியின் 1990ம் ஆண்டு கால அணி போன்றதொரு மிகச்சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி ஸ்பெயின் அணி வீரர்களை கேப் வெர்டே வீரர்கள் திணறடித்து விட்டனர். இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் 27 முறை கோலடிக்க முயற்சித்தது. ஆனால், அத்தனை வாய்ப்புகளையும் கேப்வெர்டே அசாத்தியமாக முறியடித்தது. இதற்கு காரணம் இருவர். ஒருவர் கேப்வெர்டே அணியின் கோல்கீப்பர் 40 வயதான வோஷின்ஹா (Vozinha) மற்றொருவர் அந்த அணியின் தடுப்பாட்ட வீரர் ராபர்ட்டோ லோபஸ் (Roberto Lopes). அனுபவம் வாய்ந்த இந்த இரு வீரர்களால் இந்த ஆட்டம் முழுவதுமே ஸ்பெயின் அணிக்குத் தலைவலியாகவே மாறிப் போனது.
இதில் ராபர்ட்டோ லோபஸ் கேப்வெர்டே அணிக்குள் நுழைந்ததே ஒரு சுவாரஸ்யமான நிகழ்வுதான். இவர், அயர்லாந்தின் டப்ளின் நகரில் வசிக்கிறார். தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அயர்லாந்தின் உள்ளூர் லீக்கில் அசத்திக் கொண்டிருந்தார். அதே நேரத்தில், 5 லட்சமே மக்கள் தொகைக் கொண்ட கேப் வெர்டே நாடு தனது கால்பந்து அணியை கட்டமைத்துக் கொண்டிருந்தது. உலகம் முழுக்கவுள்ள தனது வம்சாவளி வீரர்களைத் தேடியது. அப்போது, ராபர்ட்டோ லோபஸின் தந்தை கார்லோஸ் லோபஸ் (Carlos Lopes) கேப் வெர்டே நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, கடந்த 2017ம் ஆண்டு கேப் வெர்டே கால்பந்து சங்கம், நாட்டுக்காக விளையாட வரும்படி ராபர்ட்டோ லோபஸின் LinkedIn புராஃபைலில் சென்று மெஸ்ஸேஜ் கொடுத்தது. இந்த மெசேஜ் போர்த்துகீசிய மொழியில் அனுப்பப்பட்டிருந்தது. இதைப் பார்த்த ராபர்ட்டோ லோபஸ்...'ஏதோ ஸ்பேம்' என்று நினைத்து அசால்ட்டாக இருந்துவிட்டார்.
பின்னர், 9 மாதங்களுக்குப் பிறகு, அதே LinkedIn-ல் மீண்டும் ஒரு மெசேஜ். இந்த முறை ஆங்கிலந்தில் வந்து கிடந்தது. இதைப் படித்ததும், வியப்படைந்த ராபர்ட்டோ லோபஸ் உடனடியாக, கேப் வெர்டே நாட்டுக்கு ஓடினார். அங்கு, அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, தேவையான நடைமுறைகள் முடிவடைந்ததும், கடந்த 2019ம் ஆண்டு முதல் கேப் வெர்டே அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது, கேப் வெர்டே அணியின் பின்கள ஆட்டமே இவரைத்தான் நம்பியுள்ளது.
33 வயதான ராபர்ட்டோ லோபஸ் , கேப் வெர்டே உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற போதுதான், முதல் குழந்தைக்கு தந்தையானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவும், அவருக்கு ஒரு கூடுதல் நினைவாக அமைந்து விட்டது.
உலகக் கோப்பையில் கால்பதித்தது குறித்து ராபர்ட்டோ லோபஸ் கூறுகையில், ''அயர்லாந்தில் shamrock rovers கால்பந்து அணியில் விளையாடிக் கொண்டிருந்தேன். கேப் வெர்டே மூலம் உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கால்பந்தில் சாதித்தேன் என்பதைவிட எனது குடும்பப் பெயர் லோபஸ், இப்போது உலகக் கோப்பையில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதே பெருமை'' என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
கேப் வெர்டே ரசிகர்களுக்கு கூடுதல் சுமை
கேப் வெர்டே நாடு ஆப்ரிக்காவின் மேற்கு பகுதியில் செனகல் நாட்டில் இருந்து 400 கி.மீ தொலைவில் அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள அழகிய தீவுக்கூட்டம். சுற்றுலாத்தளங்களுக்கும் அழகிய கடற்கரைகளுக்கும் பெயர் போனது. 5.5 லட்சம் மக்களே இங்கு வசிக்கின்றனர். தாய் மொழி போர்த்துகீஸ்.
கேப் வெர்டே மக்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுவதாக கூறி, டிரம்ப் அரசு இந்த நாட்டு மக்களுக்கு விசா வழங்க பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்த நாட்டு மக்கள் அமெரிக்க விசாவைப் பெற வேண்டுமானால்,15 ஆயிரம் டாலர்கள் கூடுதலாகச் செலுத்த வேண்டும். நாட்டை விட்டு வெளியேறும் போது, இந்தத் தொகை மீண்டும் வழங்கப்பட்டு விடும். இதே தடை கேப் வெர்டே நாட்டு கால்பந்து ரசிகர்களுக்கும் உள்ளது.
ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டம் முடிந்ததும், கேப் வெர்டே கோல்கீப்பர் வோஷின்ஹா, ''15,000 டாலர்கள் கட்ட முடியாததால், எனது தயாரால் நான் விளையாடும் ஆட்டத்தை நேரில் காண வர முடியவில்லை'' என்று கண்ணீர்மல்கத் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
எனினும், தடைகளைத் தாண்டி10 ஆயிரம் கேப்வெர்டே கால்பந்து ரசிகர்கள் அமெரிக்காவில் முகாமிட்டுள்ளதாக தெரிகிறது. இது தவிர அமெரிக்காவில் 1 லட்சம் கேப்வெர்டே மக்கள் வசிக்கின்றனர். எனவே, அமெரிக்கா மற்றும் கேப் வெர்டே நாடுகளில் வெற்றி கொண்டாட்டம் சூடுபிடித்துள்ளது.