பிரேசிலை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் காகா (Kaka). கடந்த 2002ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற பிரேசில் கால்பந்து அணியில் காகா இடம்பெற்றிருந்தார். 2006ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரிலும் பிரேசில் அணிக்காக விளையாடினார். ரியல்மாட்ரிட், ஏ.சி. மிலன் போன்ற பல புகழ்பெற்ற அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். கடந்த 2007ம் ஆண்டு Ballon d'Or விருதையும் வென்றவர். மிகவும் சாதுவான, சாந்தமான குணம் கொண்டவர். மிக அழகான கால்பந்து வீரராக கருதப்பட்டவர். கால்பந்து உலகில் காகாவை "Good boy of Football" என்று சொல்வார்கள். களத்திலும் சரி களத்துக்கு வெளியும் சரி ... எந்த சர்ச்சையிலும் சிக்காதவர். சொல்லப் போனால், நம்ம ராகுல்டிராவிட் போன்ற கேரக்டரை கொண்டவர். கடந்த 2017ம் ஆண்டு காகா கால்பந்தில் இருந்து முற்றிலும் ஓய்வு பெற்றார்.
காகா தனது சிறுவயது தோழியும், காதலியுமான கரோலின் சிலிகோவை (Caroline Celico) கடந்த 2005ம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் மகளும் உண்டு. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு இருவரும் பிரிந்து விடுவதாக அறிவித்தனர். விவகாரத்துக்குப் பிறகு, இருவருமே இரண்டாவது திருமணம் செய்து கொண்டனர். விவகாரத்து என்றால் , அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டுமல்லவா... 'எனது கணவர் குடிக்கிறார்', 'துன்புறுத்துகிறார்', 'மற்ற பெண்களுடன் தொடர்பில் இருக்கிறார்'... அப்படி ஏதாவது ஒரு காரணம் சொல்லப்பட வேண்டுமே... ஆனால், காகாவை விவகாரத்து செய்ததற்காக கரோலின் சிலிகோ சொன்ன காரணம்தான் பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.
அதாவது, ''காகா மிகவும் சரியான கணவராக இருந்ததால் விவாகரத்து செய்துள்ளேன். காகா எனக்கு ஒருபோதும் துரோகம் செய்யவில்லை. அவர் என்னை அன்பாக கவனித்துக்கொண்டார். எனக்கு நல்ல குடும்பத்தை அளித்தார். எனது குழந்தைகளை வளர்க்க உதவினார். ஆனால், எனக்குள் மகிழ்ச்சியில்லை. ஏதோ ஒரு குறை இருந்தது. பிரச்சினை என்னவென்றால் எனக்கு காகா மிகவும் சரியானவராக இருந்தார். அதனால், விவாகரத்து செய்தேன்' என்று கரோலின் கூறியதாக தகவல் வெளியானது.
என்னடா... நல்ல கணவராக இருந்தாலும் விவாகரத்தா... அதுவும் புகழ்பெற்ற கால்பந்து வீரருக்கு இப்படி ஒரு நிலையா? என்று பலரும் காகாவின் நிலையை கண்டு பரிதாபப்பட்டனர். காகாவின் ரசிகர்கள் கரோலின் சிலிகோவை கடுமையாக சாடினர்.
இந்த நிலையில், விவகாரத்து பெற்ற பிறகு, பல ஆண்டுகள் கழித்து, ''காகாவிடம் இருந்து விவாகரத்து பெற்றதற்கு தான் சொன்ன காரணம் தவறான தகவல். நான் அப்படி ஒரு வார்த்தையை சொல்லவே இல்லை'' என்று கரோலின் சிலிகோ மறுத்துள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, ''நல்ல கணவராக இருந்ததால், விவகாரத்து செய்ததாக எனது முன்னாள் கணவர் பற்றி சொன்னது முற்றிலும் பொய்யான தகவல். நான் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அப்படி சொன்னதாக பிரேசில் மற்றும் உலக நாடுகளில் தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது. அப்போது, பலரும் என்னை கடுமையாக தாக்கிப் பேசினர். அவமானப்படுத்தினர். முரட்டுத்தனமாக என்னை நடத்தினர். எனது இமேஜ் முற்றிலும் டேமேஜ் ஆகிப் போனது. எனது விளக்கத்தை கேட்கக் கூட யாரும் தயாராக இல்லை. இந்தத் தகவல் வெளியான போது, எனது இரண்டாவது மகன் வயிற்றில் இருந்தான். நான் எனது, இரண்டாவது குடும்பத்தைத் தயார்படுத்திக் கொண்டிருந்தேன். இந்த சமயத்தில், எனது இரண்டாவது குடும்பத்தையும் பலரும் விமர்சித்தனர். 10 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்றேன். தற்போது, எனது கணவர் எடுர்டோவுடன் (Eduardo) நான் வாழ்கிறேன். எனது சோசியல்மீடியாவை பாருங்கள். அதில்தான் எனது வாழ்க்கை, தொழில், குடும்பம் பற்றி அன்புடனும் மரியாதையுடனும் பகிர்கிறேன்... நன்றி.''
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.