nihshan Velupillay 
விளையாட்டு

FIFA உலகக் கோப்பையில் விளையாடவுள்ள முதல் தமிழர்! #NishanVelupillay

உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு சில இந்திய வம்சாவளி வீரர்களுக்கு கிடைத்துள்ளது. முதன்முதலாக இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவரும் விளையாடவுள்ளார்.

எம். குமரேசன்

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் முதன்முதலாக தமிழர் ஒருவர் விளையாடவுள்ளார்.

2026ம் ஆண்டு ஃபிபா உலகக் கோப்பை தொடர் ஜூன் 11ம் தேதி அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் கனடா நாடுகளில் தொடங்கி நடைபெறுகிறது. இந்த முறை 48 அணிகள் பங்கேற்கவுள்ளன. பல குட்டி நாடுகளும் முதன்முறையாக உலகக் கோப்பை தொடரில் களம் இறங்கக் காத்துக் கொண்டிருக்கின்றன.

இந்திய அணி இந்த முறையும் உலகக் கோப்பையில் விளையாடத் தகுதி பெறவில்லை. கடைசியாக, 1950ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெற்றிருந்தது. ஆனால், இந்திய அணியை விளையாட அனுப்பவில்லை. ஒலிம்பிக் போட்டியில் கவனம் செலுத்த வேண்டுமென்பதற்காக அகில இந்திய கால்பந்து சம்மேளனம் இத்தகைய முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு, இந்திய அணிக்கு உலகக் கோப்பையில் விளையாடுவது கனவாகவே மாறிப் போனது.

2026ம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணி விளையாடவில்லை என்றாலும், இந்தியர்கள் சிலர் களம் இறங்க வாய்ப்பு கிடைத்துள்ளது. கத்தார் அணி வழியாக அந்த வாய்ப்பை இந்திய வீரர் ஒருவர் பெற்றுள்ளார். இந்த உலகக் கோப்பைக்கான 26 பேர் கொண்ட அணியை கத்தார் அணி அறிவித்துள்ளது. கேரள மாநிலம் தலச்சேரியைச் சேர்ந்த தாக் ஷின் முகமது (Tahsin Mohammed) என்ற 19 வயது இளம் வீரர் கத்தார் அணியில் இடம் பிடித்துள்ளார்.

கத்தார் ஸ்டார்ஸ் லீக் தொடரில் Al-Duhail SC அணிக்காக தாக் ஷின் விளையாடி வருகிறார். 17 வயது முதல் இந்த அணிக்காக விளையாடுகிறார். இந்தத் தொடரில் விளையாடிய முதல் இந்தியர் என்ற பெருமையும் தாக் ஷினுக்கு உண்டு. கத்தார் அணியின் உலகக் கோப்பை தகுதி சுற்றுக்கான அணியிலும் இவர் இடம் பிடித்திருந்தார். தாக் ஷின் முகமதுவின் தந்தை ஜாம்ஷித் கண்ணூர் மாவட்டம் தலச்சேரியை பூர்வீகமாக கொண்டவர். கால்பந்து வீரரான ஜாம்ஷித் கோழிக்கோடு பல்கலைக்கழக அணிக்காக ஆடி வந்தவர். ஆனால், தாக் ஷின் முகமது கத்தாரில் பிறந்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கத்தார் அணியில் நியால் ஆத்யா மேன்சன் (Niall Aadya Mason ) என்ற மற்றொரு இந்திய வம்சாவளி வீரரும் இடம் பிடித்துள்ளார். இவரது, தாயார் இந்தியாவைச் சேர்ந்தவர். தடுப்பாட்ட வீரரான நியால் ஆத்யா மேன்சன் ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற ரியல்மாட்ரிட் அகாடமியில் பயிற்சி பெற்றவர்.

Tahsin Mohammed

உலகக் கோப்பை தொடரில் விளையாடவுள்ள மற்றொரு இந்திய வீரர் நியூசிலாந்து அணியைச் சேர்ந்த சர்ப்ரீத் சிங் (Sarpreet Singh) ஆவார். 2018ம் ஆண்டு முதல் சர்ப்ரீத் சிங் நியூசிலாந்து அணியில் இடம் பிடித்துள்ளார். இவரது பெற்றோர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மிட்ஃபீல்டரான இவர், நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரராகக் கருதப்படுகிறார். நியூசிலாந்து அணிக்காக 26 சர்வதேசப் போடிகளில் விளையாடியுள்ள சர்ப்ரீத் சிங், 3 கோல்களையும் அடித்துள்ளார். தற்போது, இவருக்கு 27 வயது ஆகிறது. ஆக்லாந்தில் வசித்து வருகிறார். ஜெர்மனியின் புகழ்பெற்ற பேயர்ன்மியூனிக் (Bayern munich) அணிக்காக விளையாடிய அனுபவமும் சர்ப்ரீத் சிங்குக்கு உண்டு. தற்போது, வெலிங்டன் போனிக்ஸ்  (wellington phoenix) அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கிறார்.

Sarpreet Singh

வரும் உலகக் கோப்பை தொடரில் முதன்முதலாக தமிழர் ஒருவர் விளையாடவுள்ளார். நிஷான் வேலுப்பிள்ளை (Nishan Velupillay) என்ற பெயர் கொண்ட அந்த வீரர் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஆஸ்திரேலியாவில் பெற்றோருடன் வசிக்கிறார். நிஷானின் தந்தையின் பெயர் சசிநாத். தாயார் கில்லியன் (Gillian).நிஷாந்தின் தாயார் ஆங்கிலோ- இந்தியன். மெல்பர்னில்தான் நிஷான் பிறந்தார்.

நிஷான் சிறந்த முன்கள வீரர் ஆவார். மெல்பர்ன் சிட்டி அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது, உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலியா அறிவித்துள்ள 26 பேர் கொண்ட அணியில் நிஷான் இடம் பெற்றுள்ளார். அந்த வகையில், உலகக் கோப்பை கால்பந்து தொடரில் விளையாடவுள்ள முதல் தமிழர் என்ற பெருமையை நிஷான் பெற்றுள்ளார்.

உலகக் கோப்பை தொடரில், ஜூன் 13ம் தேதி ஆஸ்திரேலியா முதல் ஆட்டத்தில் துருக்கி அணியை சந்திக்கிறது.