Gabriel Ganley 
விளையாட்டு

பாடி பில்டிங் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய 22 வயது பாடி பில்டரின் மரணம்!

பாடி பில்டிங்கில் ஈடுபடும் சிலர் இளம் வயதிலேயே இறப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தற்போது, 22 வயதில் பிரபல பாடி பில்டர் ஒருவர் இறந்து போயுள்ளார்.

எம். குமரேசன்

பிரேசில் நாட்டைச் சேர்ந்த பிரபல பாடி பில்டர் கேப்ரியல் கேன்லி (Gabriel Ganley) தனது வீட்டு சமையல் அறையில் சந்தேகமான முறையில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு 22 வயதே ஆகிறது.

பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் கேப்ரியல் கேன்லி. சாபாலோ(sao paulo) நகரில் வசித்து வந்தார். 22 வயதே நிரம்பிய இவர், பாடி பில்டிங்கில் பல்வேறு சாதனைகளைப் படைத்திருந்தார். ஒருமுறை, தனது காலில் 500 கிலோ எடையை வைத்து, பெஞ்ச் ப்ரஸ் எடுத்து வியக்க வைத்தார். இவரை, இன்ஸ்டாகிராமில் 23 லட்சம் பேர் பின் தொடர்ந்தனர். பாடி பில்டிங், ஃபிட்னெஸ் குறித்து பல்வேறு விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில், கடந்த 23ம் தேதி சாபாலோ நகரில் தனது வீட்டு சமையல் அறையில் திடீரென்று இறந்து கிடந்தார். கேப்ரியல் கேன்லியின் திடீர் மறைவு, உலகம் முழுக்கவுள்ள பாடிபில்டர்களை அதிர வைத்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து சாபாலோ நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட போலீஸ் விசாரணையில், எந்த வன்முறை சம்பவங்களும் வீட்டில் நடக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. சந்தேகத்துக்கிடமான மரணமாகவே வழக்கு பதியப்பட்டுள்ளது.

அதீ தீவிரமான உடற்பயிற்சி, ஸ்டீராய்டு போன்ற ஊக்கமருந்துகளை பயன்படுத்தியது கேன்லியின் மரணத்துக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. Hypoglycaemia பாதிப்பால் இறந்து போனதாகவும் சொல்கிறார்கள். அதாவது, திடீரென ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததால் கேன்லி இறந்து விட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், அதிகாரபூர்வமான காரணம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க தீவிரப் பயிற்சி செய்வது, உடல் எடையைக் குறைக்க மேற்கொள்ளும் முயற்சிகள், நீரிழப்பு, சப்ளிமென்ட் உணவுகள், ஸ்டீராய்டு பயன்பாடு ஆகியவை குறித்துப் பரவலாக இப்போது விவாதங்கள் எழுந்துள்ளன. எனினும் இவற்றுக்கும் கேன்லியின் இறப்புக்கும் தொடர்பு இருப்பதாக தற்போது வரை எந்த ஆதாரமும் இல்லை. இதனால், இணையத்தில் பரவும் எந்தத் தகவலையும் நம்ப வேண்டாமென்று அவரது ரசிகர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Gabriel Ganley

ரியோ டி ஜெனிரோவில் பிறந்த கேன்லி, பாடிபில்டிங் ஜாம்பவான்களால் ஈர்க்கப்பட்டு, தனது 15 வயதில் பளு தூக்கத் தொடங்கினார். ரியோ டி ஜெனிரோவின் ஃபெடரல் பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் உடற்கல்வியியல் படிப்பு பயின்றார். புரஃபஷனல் ரீதியாக பாடிபில்டிங்கில் முழுமையாகக் கவனம் செலுத்துவதற்காக 2023ம் ஆண்டு சாபாலோ நகருக்கு குடி பெயர்ந்தார்.

சமீபத்திய ஆண்டுகளில் கேன்லி ஸ்டீராய்டு அதிகமாக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, கடந்த ஆண்டு, நிமோனியாவால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் போட்டிகளிலிருந்து தற்காலிகமாக விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இறப்பதற்கு முன்பு, குரிடிபாவில் (Curitiba) நடைபெறவிருந்த மஸில்கான்டெஸ்ட் பிரேசில் (Musclecontest Brasil) போட்டிக்காகத் தயார்படுத்திக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. கேன்லியின் மறைவுக்கு நெட்டிசன்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.