shakira in maracana stadium
விளையாட்டு

மீண்டும் 'பாப் குயின்' ஷகீரா; FIFA உலகக் கோப்பை பாடல் டீசர்!

'வகா வகா' பாடலின் பல்லவியும் இசையும் கோல்டன் சவுண்ட்ஸ் குழு1986 ம் ஆண்டு இயற்றிய கேமரூனியப் பாடலான "ஸமினா மினா'' வில் இருந்து காப்பியடிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர்.

எம். குமரேசன்

உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 11ம் தேதி அமெரிக்காவில் தொடங்குகிறது. இந்த முறை மெக்சிகோ, கனடா நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து போட்டியை நடத்துகின்றன. 48 அணிகள் பங்கேற்கின்றன. டிக்கெட் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், பிரபல கொலம்பிய பாப் பாடகி ஷகீரா, மீண்டும் ஃபிஃபாவுடன் கைகோத்துள்ளார். இந்த முறை, ஷகீரா 'Dai Dai' என்ற உலகக் கோப்பையின் அதிகாரப்பூர்வ பாடலை இயற்றி பாடியுள்ளார். இதற்கான, டீசர் நேற்று வெளியியிடப்பட்டது. பிரேசிலின் ரியோடி ஜெனிரோ நகரிலுள்ள கால்பந்து விளையாட்டின் அடையாளமாக கருதப்படும் மரக்கானா மைதானத்தில் இந்த டீசர் எடுக்கப்பட்டுள்ளது. முழுப் பாடலை நைஜீரியப் பாடகர் பர்னா பாயுடன் (Burna Boy) இணைந்து ஷகீரா பாடியுள்ளார். முழுப் பாடல் மே 14ம் தேதி வெளியாகிறது.

கடந்த 2010ம் ஆண்டு தென்னாப்ரிக்காவில் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. ஆப்ரிக்க கண்டத்தில் நடந்த முதல் உலகக் கோப்பை தொடர் இதுவாகும். அப்போதும் ஷகீரா உலகக் கோப்பைக்கான அதிகாரப்பூர்வ பாடலை இயற்றி பாடியிருந்தார். அந்த பாடல்தான் 'Waka Waka'... This time for Africa. இந்த பாடல் உலகம் முழுக்க பாப்புலரானது. இதை ஷகீராவும் ஜான் ஹில்லும் சேர்ந்து உருவாக்கியிருந்தனர்.

தென்னாப்பிரிக்காவில் முதல்முறையாக உலகக் கோப்பை நடக்கும் நேரத்தில் அதிகாரப்பூர்வப் பாடலை பாட ஷகீராவை ஃபிஃபா தேர்ந்தெடுத்ததால், பல தென்னாப்பிரிக் கலைஞர்கள் ஏமாற்றமடைந்தனர். ஒரு தென்னாப்பிரிக்கக் கலைஞர் இந்த பாடலை பாடியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்றும் அவர்கள் வாதிட்டனர். மேலும், இதன் பல்லவியும் இசையும் கோல்டன் சவுண்ட்ஸ் குழு 1986 ம் ஆண்டு இயற்றிய கேமரூனியப் பாடலான "ஸமினா மினா' வில் இருந்து காப்பியடிக்கப்பட்டுள்தாகவும் குற்றம் சாட்டினர். ஆனாலும், ' Waka Waka' பாடல் அந்த வருடத்தில் பல நாடுகளில் அதிகமாக விற்பனையாகி சாதனை படைத்தது.

ricky martin

யார் இந்த ஷகீரா ?

ஷகீரா இசபெல் மெபாரக் ரிபோல் (Shakira Isabel Mebarak Ripoll) கொலம்பியாவிலுள்ள பாரன்குயில்லாவில், 1977-ம் ஆண்டு பிறந்தார். 1990-ம் ஆண்டு ஷகீராவின் முதல் இசை ஆல்பம் வெளிவந்தபோது அவருக்கு 13 வயது. இவரது ஆல்பங்கள் உலகம் முழுக்க 80 மில்லியனுக்கு மேல் விற்றுத் தீர்ந்துள்ளன. பாப் உலகின் குயினாக பார்க்கப்படும் ஷகீரா பெறாத விருதுகள் இல்லை. அமெரிக்க அதிபராக ஓபாமா பதவியேற்ற போது, அந்த நிகழ்ச்சியில் பாடும் வாய்ப்பும் ஷகீராவுக்கு வழங்கப்பட்டது. சமூகத்துக்காக பல்வேறு நலப்பணிகளையும் ஷகீரா மேற்கொண்டு வருகிறார். `பேர்ஃபுட் ஃபவுண்டேஷன் (Barefoot Foundation) என்ற அறக்கட்டளை வழியாக கொலம்பியாவில் 5 பள்ளிகளை ஷகீரா நடத்தி வருகிறார். இதில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். கல்வி, உணவு , உடை அனைத்தும் இங்கு மாணவர்களுக்கு இலவசம். ஷகீரா, தனது முதல் கணவரை விவாகரத்து செய்த பிறகு, பார்சிலோனா அணியின் கால்பந்து வீரர் ஜெரார்ட் பிக்கேவுடன் (Gerard pique) இணைந்து வாழ்ந்தார். தற்போது, இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். ஷகீராவுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர்.

ரிக்கி மார்ட்டினின் 'The cup of life' பாடல்

'வகா வகா' பாடலுக்கு முனனதாக, கடந்த 1998ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் பிரான்சில் நடந்த போது, பிரபல பாடகர் ரிக்கி மார்ட்டின் 'The cup of life' என்ற FIFA அதிகாரப்பூர்வ பாடலை இயற்றி பாடியிருந்தார். இந்தப் பாடலும் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானது. 1998 ம் ஆண்டு ஆஸ்திரேலியா உள்ளிட்ட 30 நாடுகளில் அதிகம் விற்பனையான தனிப்பாடல் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. 60 நாடுகளில் அதிகம் விற்பனையான பாடல்களின் பட்டியல்களில் இடம் பிடித்தது. உலகின் பல முன்னணி பத்திரிகைகள் இந்த பாடலை 'எல்லாக் காலத்துக்கும் பொருத்தமான பாடல்' என்று குறிப்பிட்டிருந்தன. உலகக் கோப்பைக்கு இயற்றப்பட்ட தீம் பாடல்களிலேயே சிறந்ததாக 'The cup of life' பாடல் இப்போது வரை, கருதப்படுகிறது.