Sreesanth and Harbhajan 
விளையாட்டு

"ஹர்பஜன் செய்வதெல்லாம் வெறும் நடிப்புதான்!" மனம் திறந்த ஸ்ரீசாந்த்

'ஹர்பஜன் வெளிப்படையாக பேசுவார். ஆனால், அவரின் பேச்சில் ஒரு நடிப்பு இருக்கிறது. அந்த நடிப்பை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை' -

எம். குமரேசன்

கடந்த 2008ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரின் முதல் சீசனில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மொகாலியில் மோதின. இந்த ஆட்டத்தில் மும்பை அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஆட்டம் முடிந்து கைகுலுக்கும் நிகழ்ச்சியின் போது, ஆத்திரத்தில் மும்பை அணி வீரர் ஹர்பஜன், பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்தை முகத்தில் கையால் தாக்கினார். இதனால் ஏற்பட்ட அவமானம் காரணமாக ஸ்ரீசாந்த் முகத்தைப் பொத்திக் கொண்டு அழுதார். இது, ஐ.பி.எல் தொடரின் மிக மோசமான ஒரு சம்பவமாக பார்க்கப்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து, ஹர்பஜனுக்கு அந்தத் தொடரில் விளையாட, தடை விதிக்கப்பட்டது. எனினும், இருவரும் விரைவில் சமாதானமாகிவிட்டனர், ஆனால், தற்போது இருவருக்குமிடையேயான உறவு மீண்டும் மோசமடைந்துள்ளது. அதற்கு காரணம் ஹர்பஜனின் பணத்தாசை என்று ஸ்ரீசாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்ரீசாந்த் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது, ''அந்த சர்ச்சைக்குரிய சம்பவத்தை மையமாக வைத்து விளம்பரம் ஒன்றில் நடித்து ஹர்பஜன் ஒரு கோடி ரூபாய் வரை சம்பாதித்துள்ளார். அவரை மன்னித்துவிட்டேன். ஆனால், அந்தச் சம்பவத்தை வணிகமயமாக்கும் செயல் ஏற்புடையது அல்ல. நகைச்சுவையாக அந்த விளம்பரத்தில் ஹர்பஜன் நடித்துள்ளார். அதோடு, அந்த வீடியோவை எனது இன்ஸ்டாகிராமில் பகிரும்படியும் ஹர்பஜன் கேட்டுக் கொண்டார். நான் எந்தப் பேட்டியிலும் அவரைப் பற்றித் தரக்குறைவாக பேசியதில்லை. இதுவே முதல் முறையாக இருக்கப் போகிறது. சமீப காலம் வரை, எந்தப் பிரச்னையும் இல்லை. அந்த விளம்பரத்தை எனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட ஹர்பஜன் கேட்டுக்கொண்டபோது, நான் கோபமடைந்தேன். அப்போது, நான் அவரிடத்தில் ‘நான் மன்னிப்பேன், ஆனால் ஒருபோதும் மறக்க மாட்டேன்’ என்று சொன்னேன். யாராவது உங்களை அவமதித்தால், நீங்கள் அவர்களை மன்னித்து விடலாம். ஆனால், ஒருபோதும் மறக்கக்கூடாது. நீங்கள் மறந்தால், அவர்கள் மீண்டும் அதே தவறைச் செய்வார்கள். அதற்கு ஹர்பஜன் மிகப்பெரிய உதாரணம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனால், ஹர்பஜனை இன்ஸ்டா பக்கத்தில் 'பிளாக்' செய்து விட்டேன்.

இத்தகைய நபருடன் எனக்கு எந்த உறவும் வேண்டாம். நான் அவரைச் சகோதரராகவே பாவித்து வந்தேன். ஆனால் , இரு மாதங்களுக்கு முன்புதான், என்னை அசிங்கப்படுத்தும் விதத்தில், அந்த விளம்பரத்தில் ஹர்பஜன் நடித்துள்ளார். மன்னிக்க வேண்டும், ஆனால், ஒருபோதும் மறக்கக் கூடாது என்று என் பெற்றோர் எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளனர். ஹர்பஜன் மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை. அதே வேளையில், அவர் எனக்குத் தேவையும் இல்லை. கடவுள் அவரையும் அவர் குடும்பத்தையும் ஆசீர்வதிக்கட்டும். பல நேர்காணல்களில், அவர் என் மகளைப் பற்றிப் பேசியிருக்கிறார். அவரைப் பற்றி எனது மகள் என்ன நினைப்பாள் என்றெல்லாம் பேசியுள்ளார். என்னை தாக்கியது வெட்கக் கேடான செயல் என்று கூறியுள்ளார். அப்படி பேசினால் மக்கள், 'ஓ, இவர் எவ்வளவு சிறந்த மனிதர்' என்று நினைப்பார்கள் என்று அவர் கருதுகிறார். ஹர்பஜன் ஒரு சிறந்த மனிதராக இருக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரை, நான் இந்தியாவுக்காக விளையாடிய காலத்திலிருந்து இப்போது வரை, இது எல்லாமே ஒரு நடிப்புதான். அவரின் நடிப்பை நான் ஏற்றுக்கொள்ளவில்லை'' என்றார்.

முன்னதாக, ஸ்ரீசாந்தை ஹர்பஜன் அடித்த வீடியோவை தொலைக்காட்சி நிறுவனம் வெளியிடவில்லை. சமீபத்தில், ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித் மோடி ஒரு யூடியூப் பேட்டியின் போது, அந்த வீடியோவை வெளியிட்டார். இதை கண்டித்த ஹர்பஜன் "வீடியோ கசிந்த விதம் தவறானது. இது நடந்திருக்கக் கூடாது. லலித் மோடிக்கு சுயநல நோக்கம் இருக்கலாம். 18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விஷயத்தை மக்கள் மறந்துவிட்டனர். இப்போது அதை வெளியிட்டு பேசவைத்திருக்க வேண்டியதில்லை'' என்று கூறியிருந்தார்.