yuvraj and Stuart Broad 
விளையாட்டு

யுவராஜ் சிங் கையொப்பமிட்டு கொடுத்த ஜெர்சியை ஸ்டூவர்ட் பிராட் குப்பையில் வீசினாரா?

'ஸ்டூவர்ட் பிராடை வாழ்த்தி அவரது ஜெர்சியில் கையொப்பமிட்டு தரும்படி போட்டி நடுவராக இருந்த அவரின் தந்தை கிறிஸ் பிராட் என்னிடத்தில் கேட்டார். உடனே... நானும்'

எம். குமரேசன்

இந்திய கிரிக்கெட் அணி 2007ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை மற்றும் 2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பைகளை தோனி தலைமையில் வென்றது. இந்த இரு தொடரிலுமே இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த யுவராஜ் சிங் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 2007ம் ஆண்டு டி 20 தொடரில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 19வது ஓவரை வீசிய அந்த அணியின் பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடின் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசி வரலாற்று சாதனை படைத்தார். யுவராஜின் சிக்ஸர்களை கண்டு உலகமே அரண்டு போனது.

லலித் மோடியிடம் இருந்து கார் பரிசு

தற்போது, ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்தது , அப்போதைய ஐ.பி.எல் சேர்மன் லலித் மோடியிடம் இருந்து விலையுயர்ந்த காரை பரிசாகப் பெற்றது குறித்து யுவராஜ் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, ''அந்தத் தொடரின் போது, ஒரே ஓவரில் யாராவது 6 சிக்ஸர்களை அடித்தால் ஒரு ஃபெராரி கார் பரிசாக வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்து. ஸ்டூவர்ட் பிராடின் ஓவரில் 6 சிக்ஸர்களை நான் அடித்த பிறகு, லலித் மோடியிடம் சென்று, எனது ஃபெராரி கார் எங்கே? என்று கேட்டேன். அவரோ... ஒரு போர்ஷே காரை வாங்கிக் கொடுத்தார். அடுத்த போட்டியில் நாங்கள் வென்றால், ஃபெராரி கார் கிடைக்குமா? என்றேன். அவரோ, இல்லை என்று கூறி விட்டார். ஆனால், இறுதியில் எனக்கு பி.எம்.டபிள்யு எம்.5 கார் பரிசாக கிடைத்தது.''

ஸ்டூவர்ட் பிராடுக்கு வாழ்த்து செய்தி

''அந்த உலகக் கோப்பை தொடரில் ஸ்டூவார்ட் பிராடின் தந்தை, கிறிஸ் பிராட் போட்டி நடுவராக இருந்தார். நான் 6 சிக்ஸர்களை அடித்ததும் என்னிடம் வந்த அவர்,'எனது மகனின் கரியரை கிட்டத்தட்ட முடித்துவிட்டாய் ' என்று வருத்தத்துடன் கூறினார். பின்னர், என்னிடத்தில் ஸ்டூவர்ட் பிராடின் ஜெர்சி ஒன்றைக் கொடுத்து அவரை வாழ்த்தும்படி கேட்டுக் கொண்டார். உடனடியாக, 'இந்த உலகத்தில் சிறந்த பந்து வீச்சாளராக வளர வாழ்த்துகள்' என்று எழுதி கொடுத்தேன். ஆனால், நான் கையொப்பமிட்டு கொடுத்த அந்த ஜெர்சி குப்பையில் வீசப்பட்டதாக நான் கேள்விப்பட்டேன். பிராடின் இந்த நடவடிக்கை என்னை பாதிக்கவில்லை. அதை, நான் ஏற்றுக் கொண்டேன். எனினும், அந்தக் கடினமான தருணத்தைத் தாண்டி அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பந்து வீச்சாளராக உருவானார். சோ...என்னால் அவரின் கரியர் முடியவில்லை. அவரை, மிகச்சிறந்த ஸ்ட்ராங்கான பந்துவீச்சாளராகவே மாற்றினேன். டெஸ்டில் 600 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த இடத்தில் வேறு யாராக இருந்தாலும் கரியர் அத்துடன் முடிந்திருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.

yuvraj at american hospital for cancer treatment

கேன்சரை வென்றது எப்படி?

அதேபோல, தனக்கு கேன்ஸர் பாதித்த சம்பவம் குறித்தும் யுவராஜ் உருக்கமாக சில தகவல்களை கூறியுள்ளார்.

''2011ம் ஆண்டு உலகக் கோப்பையில் நான் விளையாடிக் கொண்டிருக்கும் போதே, எனது உடலுக்குள் பிரச்னை இருந்து கொண்டிருந்தது. .தொடர் முழுவதும் கடும் சோர்வு, வாந்தி மற்றும் உடல் நலக்குறைவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டேன். எனக்குள் ஒரு அரிய வகை புற்றுநோய் கட்டி வளர்ந்து கொண்டிருந்ததை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. ஒரு விளையாட்டு வீரராக எப்போதுமே நோய்வாய்ப்படக் கூடாது என்ற எண்ணத்திலேயே வளர்ந்தவன் . புற்றுநோய் பாதிப்பைத் தொடக்கத்தில் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை . நிலைமை கைமீறிச் சென்றபோதுதான்,2012ம் ஆண்டு அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றேன். அப்போதே, ஆரம்பக்கால புற்றுநோய் விழிப்புணர்வு அறக்கட்டளையை நான் நடத்தி கொண்டிருந்தேன். ஆனால், எனக்கே அந்தப் பாதிப்பு வந்ததை உணராமல் இருந்தது ஒரு பெரிய பாடமாக அமைந்தது. மீண்டும் கிரிக்கெட் விளையாட முடியாது என்றே பலரும் கருதினர். ஆனால், எனது மன வலிமையால் மீண்டும் களத்துக்கு வந்து விட்டேன். அது, எனது வாழ்க்கையின் மிகக் கடினமான காலக்கட்டம். ''

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.