இந்தியாவில் கால்பந்து விளையாட்டுக்கு பெரிய அளவில், வரவேற்பு இல்லையென்றாலும், கேரளாவில் கால்பந்து விளையாட்டுக்கு நல்ல வரவேற்பு உண்டு. இந்தியாவின் மிகச்சிறந்த கால்பந்து மைதானங்களில் கொச்சியின் காலூர் பகுதியிலுள்ள ஜவஹர்லால் நேரு மைதானமும் ஒன்று. இங்கு, சர்வதேச கால்பந்து மற்றும் கிரிக்கெட் ஆட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 41 ஆயிரம் பேர் இந்த மைதானத்தில் அமர்ந்து போட்டியை ரசிக்க முடியும்.
இந்த மைதானத்தில் வரும் 31ம் தேதி ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் மோதவுள்ளன. Greater Kochi Development Authority இந்த மைதானத்தை நிர்வகித்து வருகிறது. இங்கு, ஒரு சர்வதேச போட்டியை நடத்த வேண்டுமென்றால், 25 லட்சம் செக்யூரிட்டி டெபாசிட்டாகவும் போட்டிக் கட்டணமாக 3 லட்சமும் கட்ட வேண்டும். இந்தத் தொகை கட்டப்படாத நிலையில், கடந்த 26ம் தேதி ஹாங்காங் அணியுடனான இந்திய அணியின் ஆட்டம் குறித்த செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிரஸ்மீட்டில் கலந்து கொள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் காலீத் ஜமீல் மைதானத்துக்கு வந்தார். ஆனால், பணம் செலுத்தாதை காரணம் காட்டி பயிற்சியாளர் ,உதவி பயிற்சியாளர்கள்,வீரர்களை மைதானத்துக்குள் அனுமதிக்க Greater Kochi Development Authority- யின் அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதனால், மைதானத்துக்கு வெளியே சிறிது நேரம் காத்திருந்து விட்டு, காலீத் ஜமீல் ஹோட்டல் அறைக்கு திரும்பி சென்று விட்டார். இந்த சம்பவம் இந்திய கால்பந்து உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தேசிய அணியின் பயிற்சியாளருக்கே இந்த நிலையா என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது தொடர்பாக கேரள கால்பந்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், ''கேரள கால்பந்து சங்கம், இந்தப் போட்டிக்கான முழுத் தொகையையும் கட்டத் தயாராகவே இருந்தது. ஆனால், ஒரே தவணையில் பணத்தைக் கட்ட வேண்டுமென்று மைதானத்தை பராமரிக்கும் அதிகாரிகள் கூறி விட்டனர். இதனால், பணம் செலுத்த தாமதமாகி விட்டது. இந்த மைதானம் மக்கள் வரிப்பணத்தில்தானே கட்டப்பட்டது. மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இந்த மைதானத்தில், இந்திய கோச்சுக்கு கதவு அடைக்கப்பட்டால் எப்படி? புகழ்பெற்ற இந்த மைதானத்தை, விளையாட்டு போட்டிகளுக்குக் கொடுப்பதை விட, நடன நிகழ்ச்சி, திருமண நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு கொடுக்கவே நிர்வாகிகள் விரும்புகின்றனர்.
சமீபத்தில், இந்த மைதானத்தில் நடந்த நடன சிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எம்.எல்.ஏ ஒருவர் கீழே விழுந்து காயமடைந்து மருத்துவமனையில் சிசிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்திய தேசிய கால்பந்து அணியின் பயிற்சியாளரை மட்டுமல்ல... ஐ.எஸ்.எல் தொடரில் ஆடி வரும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியையும் அதிகாரிகள் மோசமாகவே நடத்தி வருகின்றனர்.
இந்த நாட்டில் விளையாட்டு வீரர்கள் எவ்வளவு கஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டியதுள்ளது தெரியுமா? ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல்களில் தரமான உணவு வீரர்களுக்கு வழங்கப்படுவதில்லை. சர்வதேச ஆட்டங்களில் பங்கேற்க வீரர்களுக்கு பயணப்படி வழங்குவதில்லை. நல்ல ஷூ உள்ளிட்ட உபகரணங்கள் இருக்காது. இப்படி, பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டு விளையாட்டு வீரர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டச் சூழலில் இது போனறு அதிகாரிகளின் நடந்து கொள்வது மிகுந்த மனவேதனையை தருகிறது'' என்கின்றனர்.
கடந்த 1994ம் ஆண்டு கேரள முதல்வராக இருந்த கருணாகரன், கால்பந்துக்கு பெயர் போன கொச்சியில் கால்பந்து மைதானத்தை கட்டும் முயற்சியில் ஈடுபட்டார். அப்படி, காலூர் பகுதியில் உருவாக்கப்பட்டதுதான் ஜவஹர்லால் நேரு மைதானம். பல சர்வதேச கால்பந்து ஆட்டங்கள் , கிரிக்கெட் போட்டிகள் இங்கு நடத்தப்பட்டுள்ளன. தற்போது, ஐ.பி.எல், ஐ.எஸ்.எல் தொடருக்கான ஆட்டங்களும் இந்த மைதானத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.