நடப்பு ஐ.பி.எல் தொடரில் சென்னை அணி வரும் 30ம் தேதி கவுகாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது. முன்னதாக, சென்னை அணி தனது ரசிகர்களை உற்சாகப்படுத்த, நேற்று (மார்ச்22) சேப்பாக்கத்தில் ரசிகர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது.
கடந்த 2008ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை, சென்னை அணிக்காக விளையாடிய முத்தையா முரளிதரன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் முக்கியமானவர். 2010ம் ஆண்டுதான் முதன்முறையாக சென்னை அணி ஐ.பி.எல் கோப்பையை வென்றது. இந்த அணியில் முரளிதரன் இடம் பெற்றிருந்தார் . முரளீதரன் வென்ற ஒரே ஐ.பி.எல். கோப்பையும் இதுதான்.
சென்னை அணியின் மஞ்சள் நிற ஜெர்சி அணிந்து முரளிதரன் நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் களம் இறங்கினார். அணியின் புதுவரவான , சஞ்சு சாம்சனுக்கு முரளிதரன் பந்து வீச, தோனி கீப்பிங் செய்தார். இப்படி, நேற்று மாலை கலகலப்பாக சேப்பாக்கத்தில் பொழுது கழிந்தது.
கடந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் 14 ஆட்டங்கள் விளையாடிய சென்னை அணியால் 4 புள்ளிகள் மட்டுமே எடுக்க முடிந்தது. புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தையும் பிடித்தது. இந்த சீசனில் சஞ்சு சாம்சனின் வருகை சென்னை அணியை மீண்டும் ஸ்ட்ராங்காக மாற்றியுள்ளது.
ஐ.பி.எல் சீசன் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் , சிறந்த ஐ.பி.எல் அணி எது? என்ற கேள்விக்கு 'சந்தேகமே இல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணிதான்' என்று பதில் அளித்துள்ளார். இதற்கு அவர் சொல்லும் காரணங்களை பார்ப்போம்.
''சென்னை அணி 2010ம் ஆண்டு முதல் முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்றது. 2011ம் ஆண்டும் கோப்பையை வென்று தக்க வைத்துக் கொண்டது. ஐ.பி.எல் தொடரில், அடுத்தடுத்து சாம்பியன் ஆன முதல் அணி சென்னைதான். மும்பை அணி 2013ம் ஆண்டு முதல் முறையாக கோப்பையை வென்றது. அடுத்து ஒவ்வொரு ஆண்டுகள் விட்டு விட்டு (2015, 2017, 2019) கோப்பையை வென்றுள்ளது. தொடர்ந்து, 2020ம் ஆண்டு மீண்டும் கோப்பையை வென்று தக்க வைத்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியிடம் எனக்குப் பிடித்த விஷயம் என்னவென்றால், இந்திய கிரிக்கெட்டுக்கு அந்த அணி அளித்த பங்களிப்புதான். இந்திய அணிக்காக அவர்கள் உருவாக்கியுள்ள வீரர்களின் எண்ணிக்கை மிக அதிகம். கடந்த வருடங்களில் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, இஷான் கிஷன் போன்ற வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்காக பல நல்ல இன்னிங்ஸ்களை ஆடியுள்ளனர். மும்பை அணிக்கு 5 ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த ரோகித் சர்மாவும் இந்திய அணிக்கு அற்புதமான பங்களிப்பை அளித்துள்ளார். சென்னை அணியில் 3 இந்திய அணியின் கேப்டன்கள் உள்ளனரா? . ஆனால், மும்பை அணியில் உள்ளனர்.
ஒரு பிராஞ்சசியை உருவாக்குவதைவிட, தேசிய அணிக்கு அளிக்கப்படும் பங்களிப்பையே நான் முக்கியமானதாக பார்க்கிறேன். அந்த வகையில், சிறந்த ஐ.பி.எல் அணி மும்பை இந்தியன்ஸ்தான். ஐந்து கோப்பைகளை வென்றிருப்பதால், சிஎஸ்கே அணியும் நாங்கள்தான் மிகச்சிறந்த அணி என்று கூறுவார்கள் என்பது எனக்குத் தெரியும். அதில், எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், மும்பை அணி, இந்திய கிரிக்கெட்டிற்கு பல அற்புதமான வீரர்களையும் திறமையான இளம் வீரர்களையும் வழங்கியுள்ளது. எனவே, சந்தேகமில்லாமல் மும்பை இந்தியன்ஸ் சிறந்த ஐ.பி.எல் அணி'' என்கிறார்.
இர்பான் பதான் ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப், டெல்லி, ஹைதராபாத் அணிகளுக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.