sadio mane with african cup senegal football team
விளையாட்டு

செனகல் அணியிடம் இருந்து ஆப்ரிக்க கோப்பை பறிப்பு ; என்ன காரணம்? #AFCON Final

கால்பந்து உலகில் விதிகளை மீறுவது, கையூட்டு வழங்குவது அல்லது பெறுவது போன்ற விஷயங்களுக்காக கோப்பைகள் , பட்டங்கள் பறிக்கப்படுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்னர், இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன.

எம். குமரேசன்

ஆப்ரிக்கக் கோப்பை கால்பந்துத் தொடரின் இறுதி ஆட்டம் கடந்த ஜனவரி 18ம் தேதி மொராக்கோ தலைநகர் ரபாத்தில் நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் செனகல் அணியுடன் மொராக்கோ மோதியது. இந்த போட்டியில் பல சர்ச்சையான முடிவுகள் வழங்கப்பட்டன. இதனால், ஆடுகளத்தில் இரு அணி வீரர்களும் அடிக்கடி மோதிக் கொண்டனர். இஞ்சுரி டைமில் 91வது நிமிடத்தில் செனகல் அடித்த கோலை நடுவர் நிரகரித்து விட்டார். அதோடு, 94வது நிமிடத்தில் மொராக்கோ அணிக்கு சாதகமாக பெனால்டி வழங்கப்பட்டதால், மோதல் வெடித்தது. நடுவரின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, செனகல் வீரர்கள் களத்தை விட்டு வெளியேறினர். வீரர்களின் முடிவுக்கு அந்த அணியின் பயிற்சியாளரும் ஆதரவளித்தார்.

செனகல் நாட்டு ரசிகர்களும் மைதானத்தில் போலீசாரிடத்தில் மோதத் தொடங்கினர். இதனால், மைதானம் போர்க்களமானது. 14 நிமிடங்கள் செனகல் வீரர்கள் களத்தை விட்டு வெளியேறினர். லிவர்பூல் முன்னாள் சூப்பர் ஸ்டாரும் செனகல் கேப்டனுமான சாடியோ மானே மட்டுமே களத்தில் இருந்தார். பின்னர், சமாதானமாகி செனகல் வீரர்கள் மீண்டும் களம் திரும்பினர்.

நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட ஆட்டம் கோல் இல்லாமல் சமனில் முடிந்தது. தொடர்ந்து, ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றது. கூடுதல் நேரத்தில் 94வது நிமிடத்தில் செனகலின் பெக் குயியே அட்டகாசமாக ஒரு கோல் அடித்தார். கடைசி வரை போராடியும் மொராக்கோ அணியால் பதில் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் , செனகல் அணி ஆப்ரிக்கக் கோப்பையை இரண்டாவது முறையாக வென்று சாதனை படைத்தது.

ஆனால், இந்த சாதனையை இரண்டு மாதம் கூட நிலைக்கவில்லை. போட்டி நடந்த போது ஆடுகளத்தை விட்டு 14 நிமிடங்கள் செனகல் வீரர்கள் வெளியேறியதை, சுட்டிக் காட்டி ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பு செனகல் பெற்ற வெற்றி செல்லாது என்று அறிவித்துள்ளது. மேலும், களத்தில் வீரர்கள் மோதிக் கொண்டதும், செனகல் நாட்டு ரசிகர்கள் நடந்து கொண்ட விதமும் ஆப்ரிக்கக் கால்பந்து போட்டிகளை சர்வதேச அளவில் மோசமாக சித்திரித்து விட்டதாகவும், இதனால் மொராக்கோ 3-0 என்று இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று விட்டதாகவும் தெரிவித்துள்ளது. ஆப்ரிக்க கால்பந்து கூட்டமைப்பின் இந்த அறிவிப்பு செனகல் நாட்டு மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது அந்த நாட்டு மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

senegal players

இது குறித்து செனகல் கால்பந்து சங்கம் தரப்பில் கூறுகையில், ''நாங்கள் எளிதாக கோப்பையை விட்டுக் கொடுத்து விட மாட்டோம். சுவிட்சர்லாந்திலுள்ள சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தை (Court of Arbitration for Sport) அணுகுவோம். அதோடு, ஆப்ரிக்கக் கால்பந்துக் கூட்டமைப்பில் நடக்கும் ஊழல்கள் குறித்து விசாரிக்க சுதந்திரமான விசாரணை அமைப்பை தொடங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளோம் '' என்று தெரிவித்துள்ளது.

கால்பந்து உலகில் விதிகளை மீறுவது, கையூட்டு வழங்குவது அல்லது பெறுவது போன்ற விஷயங்களுக்காக கோப்பைகள் , பட்டங்கள் பறிக்கப்படுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்னர், இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன.

கடந்த 1992-93ம் ஆண்டு பிரெஞ்சு லீக் - 1 தொடரில் மார்செலி அணி பட்டத்தை வென்றது. இந்த கிளப்பின் தலைவர் பெர்னார்ட் தெபி, தனது அணி கோப்பையை எளிதாக வெல்வதற்காக எதிரணியைச் சேர்ந்த சில வீரர்களுக்கு 2,50,000 பிராங்க் லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, மார்செலி அந்த சீசனில் வென்ற பட்டம் பறிக்கப்பட்டது.

அதேபோல 2004-05 மற்றும் 2005-06 இத்தாலி சீரி 'ஏ' தொடரில் யுவென்டஸ் அணியின் நிர்வாகிகள், போட்டிக்கான நடுவர்களை நியமிப்பதில் தலையிட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, இந்த சீசன்களில் யுவென்டஸ் அணி வென்ற பட்டம் பறிக்கப்பட்டது. இது போன்ற பல சம்பவங்கள் நடந்திருந்தாலும், ஆப்ரிக்க கோப்பை போன்ற மிக முக்கியமான தொடரில், சாம்பியன் அணியின் கோப்பையை பறிப்பது இதுவே, முதன்முறை.