Andrin Zgraggen 
ஆன்மிகம்

இஸ்லாமிய நாடு, ஆனால் இந்துவை அவமதித்தால்...! #bali

இஸ்லாமிய நாடான, இந்தோனேஷியாவில் இந்துவையோ, இந்து நம்பிக்கையையோ, இந்து கடவுளையோ, இந்துப் பண்டிகையையோ அவமதித்தால் என்ன நடக்கும்?

எம். குமரேசன்

இஸ்லாமிய நாடான இந்தோனேஷியாவின் பாலி தீவில் மட்டும் இந்து மக்கள் அதிகம் வசிக்கின்றனர். சுற்றுலாவுக்குப் பெயர் போன, இந்தப் பாலி தீவில் 42 லட்சம் இந்துக்கள் வாழ்கின்றனர். இது, இந்தத் தீவின் மொத்த மக்கள் தொகையில் 93 சதவிகிதம் ஆகும். பாலி தீவில் ஆண்களுக்கு வேட்டியும் பெண்களுக்கு சேலையும்தான் பாரம்பரிய ஆடை. பாலியிலுள்ள கோயில் பூசாரிகளின் சம்பளத்தையும், இந்தோனேஷிய அரசே வழங்குகிறது.

இந்தோனேஷியா உலகின் மிகப்பெரிய நெல் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாகும். பாலி தீவு முழுவதும் நெல் வயல்கள் நிறைந்து காணப்படும் . பாலி மக்கள் பயிரிடும் நெல், முதலில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகிய தெய்வங்களுக்காக படைக்கப்படுகிறது. வயல்களில் ஆங்காங்கே இந்த தெய்வங்களின் கோயில்கள் உள்ளன. விவசாயிகள் இந்தத் தெய்வங்களை வழிபட்ட பின்னரே பணிகளைத் தொடங்குகின்றனர்.

பாலி தீவில் இந்துப் பெரியவர்கள் விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம் தொடர்பான தொழில்நுட்பங்களையும் மக்களுக்குக் கற்பித்துள்ளனர். இந்த முறையை 'சுபாக்' (Subak) என்று அழைக்கிறார்கள். 'சுபாக்' நீர்பாசன முறையைப் பின்பற்றும்படி, உலக வங்கி பிற நாடுகளுக்குப் பரிந்துரைத்துள்ளது. இந்தியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் தொழில்நுட்பம், இன்று இந்தியாவில் சில பகுதிகளில்தான் நடைமுறையில் உள்ளது.

பாவி தீவில் மார்ச் மாதத்தில் ஒருநாள் 'மௌன விரதம்' கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளை 'நியேபி' (Nyepi) என்று கூறுகிறார்கள். அன்றைய தினத்தில் இந்தோனேஷியா முழுவதும் விடுமுறை விடப்படுகிறது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கும். பாலி தலைநகரான டென்பசார் (Denpasar) சர்வதேச விமான நிலையமும் மூடப்பட்டிருக்கும். மக்கள் யாரும் பேசமாட்டார்கள்; அவரவர் வீடுகளிலேயே தியானத்தில் ஈடுபடுவார்கள். இந்த விதிகள் சுற்றுலாப்பயணிகளுக்கும் பொருந்தும். இந்த ஆண்டு கடந்த மார்ச் 19ம் தேதி நியேபி பண்டிகை அனுஷ்டிக்கப்பட்டது.

hindus in bali

இந்த சமயத்தில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஆண்ட்ரின் ஸ்க்ராகன்  (Andrin Zgraggen) என்ற 26 வயது இளைஞர் பாலி தீவுக்கு வந்து ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். ஊரைச் சுற்றி பார்க்க வந்தவர், நியேபி தினத்தில் வெறிச்சோடிய தெருக்களை வீடியோ எடுத்து கடுமையாக விமர்சனம் செய்தார். ஆளே இல்லாத பாலி கடற்கரையில் தான் மட்டும் நடந்து செல்வதை படம்பிடித்து, "பைத்தியக்காரத்தனம்" என்ற தலைப்பில் இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலாக, இந்து மக்கள் கொந்தளித்தனர். புகாரையடுத்து, உடனடியாக அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

டென்பசார் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. விசாரணையின் போது, ''இந்த நாட்டில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் எனக்கு புரியவில்லை. எனினும், எனது செயலுக்காக வருந்துகிறேன். இந்து மக்களின் மத மரபுகளைக் கேலி செய்ததற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று அந்த இளைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஆனாலும், விசாரணையில் பாலி தீவில் ஹோட்டலில் அறை எடுத்த போதே, ஊழியர்கள் நியேபி பண்டிகை குறித்து அவருக்கு விளக்கமளித்துள்ளனர். நீதிமன்றத்தில் ஹோட்டல் ஊழியர்களின் வாக்குமூலமும் பெறப்பட்டது.

குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து, நீதிமன்றம் இந்து மக்களின் நம்பிக்கையை கேலி செய்ததற்காக, அந்த இளைஞருக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை விதித்தது.

கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட அவர் ஏற்கனவே, 5 மாதங்கள் சிறையில் இருந்துள்ளார். அதனால், எஞ்சியுள்ள 7 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவிப்பார். அவருக்குத் தூதரக ரீதியிலான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக சுவிட்சர்லாந்து அதிகாரிகள் கூறியுள்ளனர்.