எரிபொருள் தட்டுப்பாடு, இந்திய ரூபாயின் வீழ்ச்சி, ஏஐயின் அபரிமிதமான வளர்ச்சி, எல்நினோ காரணமாக தண்ணீர், உணவு தட்டுப்பாடு என நாம் நாம் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி நிலைமைக்குள் போய்க்கொண்டிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
வாழ்க்கை எப்போதுமே சரியான திசையில் பயணிப்பதில்லை. எத்தனை முயன்றாலும் சில சமயங்களில் திசை தப்பிவிடுகிறது. ஒரு பைக்கின் வலப்புறம் நின்றுகொண்டு அதன் ஆக்சிலேட்டரை முறுக்கிச் சோதித்துக் கொண்டிருக்கும்போது, இடப்புறம் நின்றுகொண்டிருந்த ஒரு குழந்தை கியரைப் போட்டுவிட்டதைப் போல நம் நிலைமை பரிதாபமாகிவிடுகிறது. அந்தக் குழந்தையை நோவதில் என்ன பயன்? அதைப் போலவே நமது கட்டுப்பாட்டுக்குள் இல்லாத பிரச்சினைகளுக்கான காரணங்களைப் பற்றிப் பேசி சோர்வடைந்து கொண்டிருப்பதற்குப் பதிலாக, அதற்கான தீர்வை நோக்கி நகர்வதுதான் சரியானது.
இன்று காலை ஒரு புத்தகத்தின் பின்னட்டையில் இருந்த ஒரு வாக்கியம் கண்ணில்பட்டது. நமது இன்றைய நிலைமை நம்பிக்கையே இல்லாததாக (Hopeless) தோன்றினாலும், எல்லாமே பாரமாகத் (Heavy) தோன்றினாலும், களைப்பாக இருந்தாலும் (Exhausting), இதற்கு எந்தப் பயனும் இல்லை (Pointless) என்று தோன்றினாலும், முன்னேற்றம் மிகவும் மெதுவாக (Slow) இருந்தாலும், என்ன நடக்கப்போகிறது என்றே தெரியாவிட்டாலும் (Uncertain) தொடர்ந்து செல்லுங்கள். தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருங்கள்.
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இதில் ஒரு முக்கியமான உண்மை இருப்பதை உணர முடியும். நாம் வாழ்க்கையில் பெரும்பாலும் தோல்வியடைவது நமது இயலாமையால் அல்ல; எதையாவதைப் பற்றிய அச்சம், ஒரு சிக்கலைக் கடப்பதற்கு முன்பான பொறுமையின்மை. மற்றவர்கள் நம்மைவிட வேகமாக முன்னேறுவதையும், இக்கட்டான சூழ்நிலைகளில் கூட தொடர்ந்து வெற்றிகரமாகப் பயணிப்பதையும் ஒப்பிடுவதால் வரும் சலிப்பு. அதனால் நமக்கு மட்டுமே ஏன் இப்படி நடக்கிறது என்றுதான் தோன்றுகிறது. ஆனால், அதற்கு நமக்கு உடனடியாகப் பதில் கிடைப்பதில்லை.
நீங்கள் தனிமையாக (Lonely) இருந்தாலும், பணி கடினமாக (Hard) இருந்தாலும், இது நடக்கவே நடக்காது (Impossible) என்று தோன்றினாலும், வாழ்க்கை நமக்கு நியாயமாக இல்லை (Unfair) என்று தோன்றினாலும், மீண்டும் மீண்டும் ஏமாற்றம் (Frustrating) ஏற்பட்டாலும், யாருக்கும் தெரியாத (Invisible) வகையில் உங்கள் உழைப்பு இருந்தாலும் தொடர்ந்து வேலையைச் செய்யுங்கள். தொடர் இயக்கமும், விடா முயற்சியும் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும். பெரும்பாலான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது அவை நமக்குத் தெரிவதில்லை. பூக்கள் மலர்வதை நாம் கண்களால் பார்க்க முடியாது. நமது முயற்சிகளும் அப்படித்தான்.
ஆகவே நம்பிக்கையோடு தொடர்ந்து பயணியுங்கள். ஆனால், இங்கே ஒரு முக்கியமான விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். Keep going என்பது Keep doing the same thing அல்ல. நம் திறன், நம் குணம், நம் உழைப்பு, நம் அணுகுமுறை ஆகியவற்றைச் சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள். அதில் தேவையான மாற்றங்களைச் செய்யுங்கள். சரியாகத் திட்டமிடுங்கள். சில நேரங்களில் நாம் செய்துகொண்டிருந்த விசயம் உண்மையிலேயே பயனற்றதாக இருக்கலாம். அந்த உண்மையை ஏற்றுக்கொண்டு அதை விட்டுவிட்டு வேறு ஒன்றை நோக்கி நகர வேண்டியிருக்கும். தோல்வி வந்தாலும் மீண்டும் முயற்சி செய்வது என்பது, மீண்டும் அதே தவறைச் செய்வது என்பதல்ல.
2008 பொருளாதார நெருக்கடி, 2020 கொரோனா கால வீழ்ச்சி போன்றவற்றைக் கடந்து வந்ததைப்போலவே, சரியான திட்டமிடல், பொருளாதாரச் சிக்கனம், விழிப்புணர்வு, நம்பிக்கை இவற்றோடு இந்த நெருக்கடியையும் நாம் கடந்து பயணிப்போம். Keep moving.