Thulasimathi Murugesan 
செய்திகள்

துளசிமதி முருகேசன் : நம்பிக்கை நட்சத்திரம்!

அந்த விருது, அன்று பகலில் ஒரு முக்கியத் தேர்வை எழுதிவிட்டு மதுரையிலிருந்து கிளம்பி காரில் வந்துகொண்டிருந்த விருதாளர், நிகழ்வு நடக்கும் அரங்கிற்கு வருவதற்காகக் காத்திருந்தது. எத்தனை அழகான காத்திருப்பு இல்லையா?

ஆதி தாமிரா

ஆகஸ்ட் 14 அன்று நடைபெற்ற புதிய தலைமுறை ‘தமிழன் விருதுகள் 2026’ விழாவில், விளையாட்டுத் துறைக்கான ‘நம்பிக்கை நட்சத்திரம்’ விருது வழக்கமாக வழங்கப்படும் காலவரிசையில் வழங்கப்படாமல், இறுதி நிகழ்வாக தள்ளிவைக்கப்பட்டது. பின்னர்தான் அதன் காரணம் பார்வையாளர்களுக்குத் தெரிந்தது. அந்த விருது, அன்று பகலில் ஒரு முக்கியத் தேர்வை எழுதிவிட்டு மதுரையிலிருந்து கிளம்பி காரில் வந்துகொண்டிருந்த விருதாளர், நிகழ்வு நடக்கும் அரங்கிற்கு வருவதற்காகக் காத்திருந்தது. எத்தனை அழகான காத்திருப்பு இல்லையா? யாரந்த விருதாளர்?

பிறவியிலேயே இடது கையில் ஏற்பட்ட குறைபாட்டைத் தன்னுடைய வாழ்க்கையின் தடையாக நினைக்காமல், சிறுமியாக இருந்தபோதே பேட்மிண்டன் ராக்கெட்டைக் கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்ட துளசிமதி முருகேசன்தான் அந்த விருதாளர். தமிழகத்திலிருந்து கிளம்பிச் சென்று உலகின் முன்னணி பாரா பேட்மிண்டன் வீராங்கனைகளுடன் போட்டியிட்டு, சர்வதேசப் பதக்கங்களை வென்று, பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த சாதனையாளர்.

2002 -ல் காஞ்சிபுரத்தில் பிறந்தவர் துளசிமதி. விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டிருந்த அவரது தந்தை முருகேசன், மகளின் கையில் இருந்த குறைபாட்டை அவளுக்கான தடையாகக் கருதவில்லை. அவருக்கிருந்த ஏழ்மையான குடும்பச் சூழலையும் தடையாக நினைக்கவில்லை. சிறு வயதிலேயே துளசியைக் காஞ்சிபுரம் அரசு மைதானத்துக்கு அழைத்துச் சென்று பேட்மிண்டன் விளையாட ஊக்குவித்தார். மற்றவர்கள் அவளுடைய குறைபாட்டைப் பார்த்த இடத்தில், அவரது தந்தை அவளுடைய திறமையைப் பார்த்தார். அந்த நம்பிக்கையே பின்னர் துளசிமதியின் விளையாட்டு வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைந்தது.

பாரா பேட்மிண்டனில் SU5 பிரிவில் விளையாடும் துளசிமதி, 2022-ம் ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மூன்று பதக்கங்களை வென்று சர்வதேச அளவில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார். ஒற்றையர் பிரிவில் தங்கம், இரட்டையர் பிரிவில் வெள்ளி, கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலம் என ஒரே போட்டியில் மூன்று பதக்கங்களை வென்றார். ஒரு வீராங்கனையின் திறமை ஒரு பிரிவில் மட்டுமல்ல, பல்வேறு ஆட்ட வடிவங்களிலும் வெளிப்பட முடியும் என்பதை அந்தச் சாதனை காட்டியது.

ஆனால், அவரது விளையாட்டு வாழ்க்கையின் மிகப்பெரிய தருணம் 2024-ம் ஆண்டு பாரிஸ் பாராலிம்பிக்ஸில் வந்தது. SU5 ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியை எட்டிய துளசிமதி, வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் பாராலிம்பிக் பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார். ஒரு சிறுமியாக காஞ்சிபுரம் அரசு மைதானத்தில் தொடங்கிய பயணம், உலகின் மிகப்பெரிய விளையாட்டு அரங்குகளில் ஒன்றான பாராலிம்பிக் மேடையில் இந்தியக் கொடியை உயர்த்தும் நிலைக்கு அவரை அழைத்துச் சென்றது.

அதன்பிறகும் அவரது வேகம் குறையவில்லை. 2026-ல் கெய்ரோவில் நடைபெற்ற எகிப்து சர்வதேச பாரா பேட்மிண்டன் தொடரில் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என மூன்று பிரிவுகளிலும் தங்கம் வென்று Triple Crown சாதனையைப் படைத்தார். அதாவது, ஒரே சர்வதேச தொடரில் தான் பங்கேற்ற மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பிடித்தார். பின்னர் பிரிட்டிஷ்–ஐரிஷ் சர்வதேச தொடர்களிலும் சிறப்பாக விளையாடி, அடுத்தடுத்து நடைபெற்ற இரு சர்வதேசப் போட்டிகளில் மொத்தம் ஆறு பதக்கங்களை—மூன்று தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம்—வென்றார்.

விளையாட்டுடன் கல்வியையும் துளசிமதி கைவிடவில்லை. தற்போது நாமக்கல்லில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவக் கல்லூரியில் கால்நடை மருத்துவ அறிவியல் படித்து வருகிறார். ஒரு பக்கம் சர்வதேசப் போட்டிகளுக்கான கடுமையான பயிற்சி; இன்னொரு பக்கம் தொழில்முறை கல்வி. உடல் குறைபாடு வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கலாம்; ஆனால் அது நம் இலக்குகளை நோக்கிச் செல்லும் பயணத்துக்கான தடையாகிவிடக்கூடாது என்பதற்கு துளசிமதியின் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம்.

அவரது சாதனைகளுக்கு அரசின் அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவர் பெற்ற வெற்றியைப் பாராட்டி தமிழ்நாடு அரசு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியது. மத்திய அரசின் அர்ஜுனா விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் உயர்தரப் பயிற்சிக்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் சிறப்பு நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

இறுதியாக துளசிமதி பரபரப்பாக வந்து ’தமிழன் விருது’ விழா மேடையை அடைந்து விருதைப் பெற்றுக்கொண்டபோது பார்வையாளர்கள் நெகிழ்ச்சியடைந்திருந்தனர். அதோடு, படபடவென்ற வேகத்தில் அவர் பேசிய பேச்சும் அனைவரையும் கவர்ந்தது. சிறு தடுமாற்றம்கூட இல்லாமல், அத்தனை வேகமாகத் தனது பயணத்தையும், விளையாட்டுத் துறையையும், தனது நம்பிக்கையையும் பற்றிப் பேசி அனைவரது பாராட்டையும் பெற்றார். துளசிமதியின் கதையில் நம்மை அதிகம் கவர்வது அவர் வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை மட்டுமல்ல. ஒரு தந்தை தனது மகளின் குறைபாட்டைப் பார்க்காமல், அவளுடைய திறமையைப் பார்த்தார். அந்தத் திறமை ஒரு விளையாட்டாக வளர்ந்தது. விளையாட்டு சர்வதேசப் பதக்கங்களாக மாறியது. அந்தப் பதக்கங்கள் இன்று ஒரு தலைமுறைக்கான நம்பிக்கையாக மாறியிருக்கின்றன.