செய்திகள்

ஐபோனுக்காக குடும்பமே பலி: தாயார் வெளியிட்ட யூடியூப் வீடியோக்களால் அதிர்ச்சி!

கணவரும், மகனும் மலை உச்சியில் இருந்த விழுந்த காட்சியைக் கண்ட, சங்கீதாவும் அடுத்த விநாடியே மலையிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார். இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ந்து போனார்கள்.

எம். குமரேசன்

ஐபோன் கேட்டு, தற்கொலைக்கு முயன்ற டீன்ஏஜ் மகனைத் தடுக்க முயன்றபோது, தந்தையும் மலையிலிருந்து விழுந்து இறந்தார். இதைக் கண்டு, தாயும் மலையில் இருந்து குதித்து உயிரை மாய்த்த சம்பவம் மகாராஸ்டிராவில் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

சத்ரபதி சம்பாஜி மாவட்டத்தில் வாலுஜ் எம்.ஐ.டி.சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜால்டா பாட்டா (Zalta Phata) பகுதியைச் சேர்ந்தவர் முரளிதர் சந்த்குடே (48) இவரது மனைவி சங்கீதா. இந்தத் தம்பதிக்கு குணால் என்ற 18 வயது மகன் உண்டு.

முரளிதர் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். குடும்பத்தின் ஒரே வருவாய் ஆதாரம் இவர்தான். இந்தநிலையில், மகன் குணால் ஐபோன் கேட்டு தந்தையிடம் அடம் பிடித்துள்ளார். வாங்கிக் கொடுக்க தந்தை மறுத்துள்ளார். இதனால், தந்தைக்கும் மகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 21ம் தேதி தகராறு முற்றியுள்ளது. இதனால், மனமுடைந்த குணால் தற்கொலை செய்யப் போவதாக கூறி விட்டு, அந்த பகுதியிலுள்ள மலைப் பகுதிக்கு சென்றுள்ளார். மகனைத் தொடர்ந்து, பெற்றோரும் அங்கு சென்றுள்ளனர்.

மலைக்குன்றின் மீது ஏறிய குணால் குதித்துவிடப் போவதாக மிரட்டினார். பெற்றோர் எவ்வளவோ மன்றாடியும் மலைக்குன்றை விட்டு வெளியே வர குணால் மறுத்தார். கிட்டத்தட்ட 3 மணி நேரம் பெற்றோரும் அக்கம் பக்கத்தினரும் குணாலிடம் மன்றாடினர். தீயணைப்புத்துறையினர் போலீசாரும் அங்கிருந்தனர்.

ஆனால், கொஞ்சம் கூட அந்த இளைஞர் மனதை மாற்றிக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் மகனை அருகே நெருங்கிய முரளிதர் பிடிக்க முயன்றார். அப்போது, தந்தையையும் இழுத்துக் கொண்டு குணால் மலையில் இருந்து கீழே விழுந்தார். இதில், சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகினர்.

இந்தக் காட்சியை நேரில் பார்த்த குணாலின் தாயாரும் அடுத்த விநாடி மலையில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார். ஒற்றை ஐபோனாலும், பிடிவாதம் கொண்ட ஒரு இளைஞராலும் ஒரு குடும்பமே அழிந்து போன சம்பவம் மகாராஸ்டிர மாநிலத்தையே அதிர வைத்துள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலானது. பலரும், 'இப்படி ஒரு மகன் பிறக்காமலேயே இருந்திருக்கலாம்' என்று வேதனையுடன் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த குடும்பத்தினர் ஒரு வளர்ப்பு நாயை ஆசையாக வளர்த்து வந்தனர். தற்போது, பூட்டி கிடக்கும் குணாலின் வீட்டு முன்பு , அவர்களை எதிர்பார்த்து வளர்ப்பு நாய் காத்துக் கிடக்கிறது.

இந்த நிலையில், சங்கீதா இறப்பதற்கு முன்பு, கடந்த வியாழக்கிழமை யூடியூப்பில் பதிவு செய்திருந்த காணொளியில் உறவினர்களை குற்றம் சாட்டி பேசியுள்ளார். அந்த வீடியோவில், '' உறவினர்கள் எங்கள் குடும்பத்தினரை மனரீதியாகத் துன்புறுத்தினர். எனது மகனுக்கும் அவனது தந்தைக்கும் இடையே பிளவை ஏற்படுத்தினர். எங்களது சொத்தைக் கைப்பற்ற முயன்றனர். நம்மை மதிப்பவர்களுக்கு மட்டுமே அன்பையும் அர்ப்பணிப்பையும் வழங்க வேண்டும். உன் வாழ்க்கையை ஒருவரிடம் ஒப்படைக்கத் தயாராக இரு; ஆனால், உன்னையும் உன் அன்பையும் மதிக்கிற ஒருவரிடம் மட்டுமே அதைச் செய். ஒருவர் உன்னையோ, உன் அன்பையோ அல்லது அவர்களுக்காக நீ செய்யும் விஷயங்களையோ மதிக்கவில்லை என்றால், அத்தகைய நபருக்காக எதையும் செய்வதில் எந்தப் பயனும் இல்லை," என்று அவர் மராத்தியில் கூறியுள்ளார்.

மற்றொரு காணொளியில், சங்கீதா மிகுந்த மனவேதனையுடன் பேசியுள்ளார். அதில், '' எனது கணவரின் சகோதரி உள்ளிட்ட சில உறவினர்கள் எங்கள் குடும்பத்தை மனரீதியாகத் துன்புறுத்துகின்றனர். எங்கள் வாழ்க்கையைச் சீர்குலைக்க முயல்கின்றனர். சொத்துக்களை அபகரிக்கத் துடிக்கின்றனர். என் குழந்தைகளிடம் அவர்கள் ஒருபோதும் அன்பு காட்டுவதில்லை; தங்கள் சகோதரனின் குடும்பத்தில் தவறான புரிதல்களை உருவாக்கி சண்டைகளை மூட்டிவிடுகிறார்கள். தங்கள் சகோதரனின் குடும்பத்தை உடைக்கத் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். கடினமான காலங்களில் இத்தகைய உறவினர்கள் தங்கள் சகோதரர்களுக்கு ஆதரவாக இருப்பதில்லை. மாறாகத் துயரமான தருணங்களில் சகோதரரையும் அவரது மனைவியையும் துன்புறுத்துகின்றனர்'' என்று தெரிவித்துள்ளார்.

சங்கீதா வெளியிட்ட வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. யூடியூபில் 29,000-க்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்களை சங்கீதா வைத்துள்ளார். தனது மகன் குணாலுடன் இணைந்து சங்கீதா ஊக்கமளிக்கும் காணொளிகளையும் குறும் காணொளிகளையும் (vlogs) தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.இந்த காணொளிகளின் நம்பகத்தன்மை மற்றும் பதிவு செய்யப்பட்ட சூழல் ஆகியவற்றை காவல்துறை ஆய்வு செய்து வருகிறது. குடும்பச் சண்டை , மனரீதியான துன்புறுத்தல் மற்றும் சொத்துத் தகராறு தொடர்பான குற்றச்சாட்டுக்கும் மூன்று உயிரிழப்புகளுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்கிறரீதியிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.