உலகளவில் சந்தன மரங்கள் ஏற்றுமதியில் இந்தியாவும் முன்னணியில் உள்ள ஒரு நாடு. சந்தன மரம் ஒருமுறை மட்டுமே வாழும் ஆயுள் கொண்டது. முதிர்ச்சியடைந்த மரங்கள் வெட்டப்படும்போது, வேருடன் சேர்த்து வெட்டப்பட்டு விடும். ஒரு சந்தனமரம் முதிர்ச்சியடைய 15 முதல் 20 ஆண்டுகள் ஆகலாம். இந்தியாவில் கர்நாடகத்தில்தான் சந்தனமரங்கள் அதிகமாக வளர்கின்றன.
இந்தியாவில் காடுகள் மற்றும் தனியார் நிலங்களிலுள்ள சந்தன மரங்களை வெட்டி, உள்நாட்டிலும் சர்வதேச சந்தையிலும் விற்பனை செய்வது கடுமையான குற்றமாகும். சந்தன மரத்திலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் (Sandalwood Oil) சர்வதேசச் சந்தையில் மிக அதிக விலை கொண்டது.
பல விதமான அழகுசாதனப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் மருத்துவப் பொருட்கள், கலைநயமிக்கப் பொருட்களைத் தயாரிக்க சந்தனமரம் பயன்படுகிறது. இந்தியாவில் தனியார் நிலங்களில் சந்தன மரங்களை வளர்க்க அனுமதி உண்டு. ஆனால், அவற்றை உரிமையாளர்களே நேரடியாக வெட்டவோ அல்லது விற்கவோ அரசு அனுமதிக்கவில்லை. விற்கும்போது வனத்துறைக்குத் தகவல் அறிவித்து, அவர்கள்தான் விற்பனை செய்யவேண்டிய நடைமுறைகளைச் செய்வார்கள்.
முதிர்ந்த சந்தன மரங்களை வனத்துறை அதிகாரிகளின் முன்னிலையில் வெட்டி, அரசின் கிடங்குகளுக்கு அனுப்பி, ஏலத்தின் மூலமே விற்க வேண்டுமென்பதே விதி. எனினும், சந்தனமரக் கடத்தல்காரர்கள் தனியார் நிலங்கள் மற்றும் காடுகளில் இந்த மரங்களை வெட்டிக் கடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். சேலம், தருமபுரி, வேலூர் மாவட்டங்கள் கர்நாடகா மற்றும் கேரளா எல்லைப் பகுதிகளில் சந்தனமரக் கடத்தல் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.
இந்த நிலையில், சந்தனமரம் ஒன்றை வீட்டில் எவருக்கும் தெரியாமல் வளர்த்து வந்த முதியவருக்குத் திடீரென 28 லட்சத்தை அந்த மரம் சம்பாதித்துக் கொடுத்துள்ளதுதான் கர்நாடகத்தில் இப்போது, பேசுபொருளாக மாறியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே மல்லேசுவரத்தைச் சேர்ந்தவர் என்.ஜி கேசரி. தற்போது, இவருக்கு 85 வயதாகிறது. இவரது, வீட்டு வளாகத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, அவருக்கே என்னவென்று தெரியாத வகையில், மரம் ஒன்று வளர்ந்து கொண்டிருந்துள்ளது. கேசரியும், அதைப்பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. நாளடைவில், அந்த மரம் சற்று வளர்ந்த போதுதான், சந்தனமரம் என்று அடையாளம் தெரிந்து கொண்டார். இதையடுத்து, அந்த மரத்தின் மீது கூடுதல் அக்கறை கொண்டார். இத்தனை ஆண்டுகளாக சந்தனமரக் கொள்ளையர்கள் கண்ணில் இந்த மரம் படாமல் இருந்ததும் கேசரிக்கு சாதகமாக இருந்தது.
இதற்கிடையே, கடந்த ஜூன் மாதத்தில் கர்நாடகத்தில் பெய்த மழையில் அருகில் இருந்த பிரமாண்ட மரம் ஒன்று, சந்தனமரத்தின் மீது சரிந்ததில் இரண்டாக உடைந்து போனது. உடைந்து போன மரத்தைப் பார்த்து கேசரி சோகத்தில் மூழ்கினார். எனினும், தனது வீட்டில் இருந்த சந்தன மரம் உடைந்தது குறித்து வனத்துறையினருக்குத் தகவல் அளித்தார். உடனடியாக , வனத்துறையினர் கேசரியின் வீட்டுக்கு வந்து மரத்தின் தன்மை, முதிர்ச்சி, எடை, விலை ஆகியவற்றை ஆய்வு செய்து, பிரபல மைசூர் சாண்டல் சோப்பை தயாரிக்கும் நிறுவனமான Karnataka Soaps and Detergents நிறுவனத்துக்கு அறிக்கை அளித்தனர். இதையடுத்து, அந்த நிறுவன அதிகாரிகள் கேசரியின் வீட்டுக்கு வந்து ஒரு டன் எடை கொண்ட அந்த மரத்தை முற்றிலும் வெட்டி எடுத்து, தங்கள் கிடங்குக்கு அனுப்பி வைத்தனர். இந்த மரத்துக்கு விலையாக அந்த நிறுவனத்தினர் கேசரிக்குக் கொடுத்த தொகை மட்டும் ரூ. 28 லட்சம் ஆகும். இதனால், கேசரி மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயுள்ளார். அதுபோக, இத்தனை வருடம் சந்தன மரத்தைப் பாதுகாத்து வந்ததற்காக கர்நாடக அரசு, கேசரிக்கு Sandalwood Shiromani என்ற பட்டத்தையும் வழங்கி கௌரவித்துள்ளது!
85 வயதில் இப்படி இரட்டை ஜாக்பாட் அடித்த கேசரியை ஊரே பாராட்டி வருகிறது!