nest made of optic fibre cables. 
செய்திகள்

'ஃபைபர் ஆப்டிக் கேபிள் கூடு'! - உக்ரைன் அதிர்ச்சி!

ரஷ்ய- உக்ரைன் போர், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கையின் மீது எத்தகையை எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு உதாரணமாக பறவைகள் கட்டிய கூடுகளே சாட்சியாக அமைந்துள்ளன.

எம். குமரேசன்

ஐரோப்பாவில் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன. போர் இன்னும் முற்றிலும் முடிந்தபாடில்லை. இரு நாடுகளுமே எல்லை தாண்டிய ட்ரோன் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன. ஏராளமான மக்கள் உயிரிழந்தும் உள்ளனர். இந்தப் போரால் மனித உயிர்கள் மட்டும் கொல்லப்படவில்லை. இயற்கைக்கு எதிரான பல விஷயங்கள் போர் முனையில் நடந்து கொண்டிருக்கின்றன.

காலநிலை மாற்றத்திலிருந்து, எல் நினோ வரை பூமியைத் தாக்க மனிதர்களின் இயற்கைக்கு எதிரான செயல்பாடுகளே காரணமென்று நிபுணர்கள் எச்சரித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பலன்தான் இல்லை. மனிதர்கள் நடத்தும் போர் வனவிலங்குகள், பறவைகள் வாழ்க்கையில் பலவிதமான பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணமாக உக்ரைனில் ஓர் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

உக்ரைனில் கீவ் (kyiv) நகரத்திற்கு அருகேயுள்ள போர்முனைக்கு அருகில் இரு பறவைக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பறவைக்கூடுகள், நவீனப் போர்முறை இயற்கையின் மீது எத்தகைய எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது பற்றிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பறவைக்கூடுகள், முழுக்க முழுக்கக் குச்சிகள் மற்றும் புற்களால் உருவாக்கப்படுவதற்குப் பதிலாக, ராணுவ ட்ரோன்களை பயன்படுத்தப்படும் ஃபைபர்-ஆப்டிக் (fibre-optic) கம்பிவடங்களைக் (கேபிள்கள்) கொண்டு பின்னப்பட்டுள்ளது. இதைக் கண்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மிகுந்த கவலையடைந்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக நீடிக்கும் இந்தப் போர், சுற்றுச்சூழலுக்கு எவ்வளவு கேடு விளைவித்துள்ளது என்பதற்கு இந்தச் சம்பவமே ஓர் உதாரணம் என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

கடந்த 2022ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, இரு தரப்பினராலும் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான ஆயுதங்களில் ஒன்றாக ட்ரோன்கள் (ஆளில்லா விமானங்கள்) உள்ளன. மின்னணுத் தடங்கல்களை (Electronic jamming) தடுப்பதற்காக, ட்ரோன்கள் ரேடியோ அலைகளுக்குப் பதிலாக மிக மெல்லிய ஃபைபர்-ஆப்டிக் கம்பிவடங்கள் மூலம் இயக்கப்படுகின்றன. ஒரு ட்ரோனில் 20 கி.மீ தொலைவு அளவுக்கு கேபிள்கள் பயன்படுத்தப்படுகின்றன. ட்ரோன்கள் வெடித்துச் சிதறியதும் கம்பிவடங்கள் மரங்களில் தொங்கிக் கொண்டிருக்கும் வயல்வெளிகள், வீடுகளின் கூரைகள் போன்றவற்றில் விழுந்து கிடக்கும்.

போர் உக்கிரமாக நடந்த Donetsk, Kharkiv, Kyiv போன்ற நகரங்களில் இப்படி ஏராளமான ஃபைபர் கம்பிவடங்கள் கொட்டிக் கிடக்கின்றன. காலப்போக்கில், பறவைகள் தங்கள் கூடுகளைக் கட்டுவதற்காக, காய்ந்த புல் மற்றும் பிற இயற்கைப் பொருட்களுடன் சேர்ந்து இந்தக் கம்பிவடங்களையும் சேகரிக்கத் தொடங்கியுள்ளன. மனிதர்கள் நடத்தும் போர்களால் மாற்றமடைந்த சூழலுக்கு வனவிலங்குகள், பறவைகள் தங்களை மாற்றிக்கொள்கின்றன என்பதை இந்த விசித்திரமான பறவைக் கூடுகள் உணர்த்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்தக் கூட்டினைக் கட்டிய பறவை இனத்தை இன்னும் அடையாளம் காண முடியவில்லை. பறவைக் கூடுகளில் பயன்படுத்தப்படும் செயற்கைப் பொருட்களைப் பற்றி ஆய்வு செய்யும் நெதர்லாந்து உயிரியலாளர் ஆக்-ஃப்ளோரியன் ஹியெம்ஸ்ட்ரா (Auke-Florian Hiemstra) கூடுகளைக் கட்டிய பறவையை அடையாளம் காண டி.என்.ஏ ஆய்வினை நடத்தவுள்ளார். எனினும், ''ஃபைபர்-ஆப்டிக் ட்ரோன் கம்பிவடங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு பறவைக் கூட்டை இதற்கு முன்பு நான் கண்டதில்லை '' என்றும் அவர் கூறியுள்ளார்.

செயற்கை இழைகளால் உருவாக்கப்பட்ட இந்த மெல்லிய கம்பிகள் வலுவான கூடுகளை அமைக்க உதவினாலும், குஞ்சுகளையோ அல்லது பறவைகளையோ சிக்க வைத்து, காயங்களை ஏற்படுத்தும் அபாயம் உண்டு. உலகில் நடக்கும் போர்கள், போர்க்களங்களைத் தாண்டி, இயற்கையின் மீதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நவீனப் போரின் பாதிப்பை அறியாமலேயே அந்த அப்பாவிப் பறவைகள் தங்கள் வாழ்க்கைச் சூழலை மாற்ற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன என்றும் ஆராய்ச்சியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.