drone attack
செய்திகள்

2025: இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, ரணகளமான ஓர் ஆண்டு!

உலகில் அதிக போர்களில் ஈடுபடும் நாடாக இஸ்ரேல் உள்ளது. காஸாவில் ஹமாஸ் அமைப்பு, லெபனானில் ஹிஸ்புல்லா, ஏமனில் ஹவுதிஸ் இயக்கங்களுடன் மோதலில் ஈடுபடும் இஸ்ரேல் நாடு ஈரான் மற்றும் சிரியா நாடுகளுடனும் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

எம். குமரேசன்

கடந்த 1946ம் ஆண்டு இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அதிக போர்கள் நடந்த ஆண்டாக 2025 கருதப்படுகிறது. பல நாட்டு அரசுகள் தொடர்புடைய 65 மோதல்கள் இந்த ஆண்டில் நடந்துள்ளதாக ஓஸ்லோவிலுள்ள உலக அமைதி ஆராய்ச்சி மையம் (Peace Research Institute Oslo - PRIO) தெரிவித்துள்ளது.

கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்தில் ஆசியாவில் மிகவும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்தியா - பாகிஸ்தான் போர் நடந்தது. 1999ம் ஆண்டு கார்கில் போருக்குப் பிறகு , இந்தியா பாகிஸ்தான் மீது மீண்டும் விமானப்படைத் தாக்குதல் நடத்தியது.

பஹால்காமில் 26 சுற்றுலாப்பயணிகளைக் கொன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டன. முஷாபராபாத் நகரில் நடந்த தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் உறவினர்கள் உள்ளிட்ட 100 பேர் கொல்லப்பட்டனர். 3 நாட்களில் இந்த போர் முடிவுக்கு வந்தது.

இது தவிர, ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் நாடுகள் போரில் ஈடுபட்டன. தெக்ரிக் தலிபான் (Tehrik-i-Taliban) என்ற தீவிரவாத அமைப்புக்கு ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு ஆதரவளிப்பதாகக் கூறி, பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. ஆப்கானிஸ்தானும் திருப்பி பதிலடியில் ஈடுபட்டது.

இஸ்ரேல்- ஈரான் நாடுகளுக்கிடையே 12 நாட்கள் போர் நடந்தது. தாய்லாந்தும் கம்போடியாவும் மோதிக் கொண்டன. இரு நாடுகளுக்கிடையேயான எல்லைப்பிரச்னையில் மோதல் ஏற்பட்டது. போரில் கிட்டத்தட்ட 100 பேர் வரை பலியானார்கள். ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்ந்து நடைபெற்றது. இஸ்ரேல் காஸா மற்றும் சிரியா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. உலகில் அதிக போர்களில் ஈடுபடும் நாடாக இஸ்ரேல் உள்ளது. காஸாவில் ஹமாஸ் , லெபனானில் ஹிஸ்புல்லா, ஏமனில் ஹவுதிஸ் இயக்கங்களுடன் மோதலில் ஈடுபடும் இஸ்ரேல், ஈரான் மற்றும் சிரியா நாடுகளுடனும் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

Refugees near El Fasher

2025ம் ஆண்டு மட்டும் போர்கள், அரசியல் மோதல்களில் 2,45,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில், குடிமக்கள் 76 ஆயிரம் பேர். 2024ம் ஆண்டு 14,200 குடிமக்கள் மட்டுமே கொல்லப்பட்டிருந்தனர்.

சூடானில் 60 ஆயிரம் அப்பாவிகள் கொலை

2025ம் ஆண்டு அதிகட்சமாக சூடான் நாட்டில் எல் ஃபாஷர் (El Fasher) நகரத்தில் மட்டும் 60 ஆயிரம் அப்பாவி மக்கள் இனப்படுகொலை கொல்லப்பட்டனர். அல்ஜீரியா மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கு அடுத்தபடியாக, சூடான் ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய நாடாகும். பல ஆண்டு காலமாக சூடான் மக்கள் உள்நாட்டுப் போர், இனப்படுகொலை, வறட்சி மற்றும் சர்வாதிகார அரசுகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்தியாவின் வடக்குப் பகுதி தெற்கைக் கட்டுப்படுத்துவது போல, வடக்கு சூடான் நாட்டின் மற்ற பகுதிகளைக் கட்டுப்படுத்துகிறது. டார்ஃபூர் (DARFUR) என்பது மேற்கு சூடானில் உள்ள மூன்று மாநிலங்களைக் கொண்ட ஒரு பகுதியாகும்.

சூடான் நாட்டு ராணுவத்துக்கும், அந்நாட்டின் துணை ராணுவப் படையான ரேபிட் சப்போர்ட் ஃபோர்ஸ் (Rapid Support Forces) க்கும் இடையேயான ‘அதிகார’ மோதல் முற்றியது. 2025ம் ஆண்டு ஆர்எஸ்எஃப் படைகள் தார்ஃபூர் நகரின் முக்கியப் பகுதியான எல் ஃபாசரைக் கைப்பற்றியது . பின்னர், எல் ஃபாசர் நகரில் ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று அவர்களின் பூர்விகத்தை அலசி ஆராய்ந்து அரபு வழித்தோன்றல்களாக இல்லாதவர்களை இனப் படுகொலை செய்தது . கிட்டத்தட்ட 60 ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

காஸாவில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களைப் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால், சூடானில் உயிரிழந்த அப்பாவிகளுக்காக குரல் கொடுக்கவும் யாரும் இல்லை.