Brother and sister Chat GPT AI Image
செய்திகள்

இரண்டு குழந்தைகள் போதாது! சந்திரபாபு நாயுடுவின் அதிரடி அறிவிப்பு... என்ன காரணம்?

காலம் காலமாக ’நாம் இருவர் நமக்கு ஒருவர்’, ’அளவான குடும்பம் வளமான எதிர்காலம்’ என்று மத்திய மாநில அரசுகள் கோடிகளைக் கொட்டி விழிப்புணர்வை ஏற்படுத்துவதைப் பார்த்து வளர்ந்திருக்கிறோம். இந்த நிலையில், ஆந்திராவின் அறிவிப்பு வியப்பை ஏற்படுத்தத்தான் செய்தது.

ஆதி தாமிரா

சில நாட்களுக்கு முன்பாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஆந்திராவில் ஒவ்வொரு குடும்பத்திலும் மூன்றாவதாக பிறக்கும் குழந்தைக்கு 30 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை என்றும், நான்காவதாக பிறக்கும் குழந்தைக்கு 40 ஆயிரம் ரூபாய் என்றும் ஒரு திட்டத்தை அறிவித்திருந்தார். நமக்கெல்லாம் அது சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது. தென் கொரியா, ஜப்பான், ஹங்கேரி போன்ற நாடுகளில்தான் இப்படியான நிலைமை இருக்கிறது என்பதை படித்திருக்கிறோம். அந்நாடுகளில் ஊக்கத் தொகை மட்டுமின்றி, படிப்பு, வீட்டு வசதி, குழந்தை பராமரிப்பு, வரிவிலக்கு என பலதரப்பட்ட சலுகைகளையும் வழங்குகிறார்கள். காரணம் எளிதானது, அவர்களுடைய மக்கள்தொகை ஆபத்தான வகையில் குறைவாக இருக்கிறது. ஆனால், இந்தியாவுக்கென்ன? இந்தியாவின் மக்கள் தொகைதான் உலகிலேயே முதலிடத்தில் உள்ளது. இப்போது 144 கோடியைக் கடந்து இன்னும் ஜரூராக வளர்ந்து கொண்டே போகிறோம். அதோடு காலம் காலமாக ’நாம் இருவர் நமக்கு ஒருவர்’, ’அளவான குடும்பம் வளமான எதிர்காலம்’ என்று மத்திய மாநில அரசுகள் கோடிகளைக் கொட்டி விழிப்புணர்வை ஏற்படுத்துவதைப் பார்த்து வளர்ந்திருக்கிறோம். இந்த நிலையில், ஆந்திராவின் அறிவிப்பு, இது என்ன வித்தியாசமான திட்டமாக இருக்கிறது என்று ஒரு வியப்பை ஏற்படுத்தத்தான் செய்தது.

எந்த ஒரு நாட்டிலும் அந்த நாட்டின் மக்கள் தொகை, கூடாமலும் குறையாமலும் அதே விகிதத்தில் தொடர வேண்டுமானால் அந்நாட்டின் பெண் ஒருவர் சராசரியாக 2.1 (TFR- Total Fertility Rate) குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். அதாவது 10 பெண்களுக்கு 21 குழந்தைகள் இருக்க வேண்டும். இது இந்தியாவில் 1950 இல் சுமார் 5.8 என்ற அளவில் இருந்திருக்கிறது. அதாவது 10 பெண்களுக்கு 58 குழந்தைகள். அதனால்தான் 1950ல் சுமார் 36 கோடி என இருந்த மக்கள் தொகை இப்போது 144 கோடியாக உயர்ந்திருக்கிறது.

இந்த அபரிமிதமான வளர்ச்சியை தடுக்கத்தான் இந்திய அரசு சென்ற நூற்றாண்டின் இறுதியில் மிகப்பெரிய அளவில் குடும்ப கட்டுப்பாடு மற்றும் மக்கள் தொகை விழிப்புணர்வில் ஈடுபட்டது. அதனால் 5.8 என்ற அந்த விகிதம் ஒவ்வொரு தசாப்தத்திலும் குறைந்து கொண்டே வந்து, 2000-ல் 3.4 என்ற நிலையை அடைந்து, இப்போது 2024-ல் 1.9 என்ற அளவாக குறைந்துவிட்டது. இது தேவைப்படுகிற 2.1 என்ற அளவை விடவும் குறைவாக இருப்பதே இந்தப் புதிய சிக்கலை உருவாக்குகிறது. இதனால், இப்போதே இந்தியாவின் எதிர்கால மனிதவளம் குறித்த அச்சம் நிலவுகிறது. குறிப்பாக 1.9 எனும் இந்திய தேசியச் சராசரி, தென்னிந்தியாவில் குறிப்பாக ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மிகவும் குறைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே டிலிமிடேஷன் போன்ற மக்கள் தொகை சார்ந்த பிரதிநிதித்துவ சிக்கலில் தென் மாநிலங்கள் சிக்கிக் கொண்டிருக்கின்றன என்பதும் நமக்குத் தெரியும். அதனால்தான் ஆந்திர முதல்வர் இப்படி ஒரு திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார். 

Family

நாட்டு நலன், மக்கள்தொகை, மனித வளம் எல்லாவற்றையும் ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டுப் பார்த்தால், ஒரு தம்பதியினர் எத்தனை குழந்தைகள்தான் பெற்றுக் கொள்ளலாம்? 50, 60 வருடங்களுக்கு முன்பு இருந்ததைப் போல ஐந்து ஆறு குழந்தைகளை பெற்றுக் கொள்வது நாட்டுக்கும், வீட்டுக்கும் நிச்சயமாக சரியான முடிவாக இருக்காது. அதற்காக ஒரே குழந்தையுடன் நிறுத்தி விடலாமா?

இங்கே சொத்துக்காக அடித்துக்கொள்ளும் சகோதரர்கள் இருக்கிறார்கள். சின்ன விசயங்களுக்காக நிரந்தரமாக உறவுகளை அற்றுக்கொண்ட உடன்பிறப்புகள் இருக்கிறார்கள். சொந்த சகோதரியரிடையே அன்பும், மரியாதையும் குறைந்து, பழக்கத்தையும், தொடர்பையும் குறைத்துக்கொண்டவர்கள் இருக்கிறார்கள். இப்படியானவர்களை நாம் அடிக்கடி கடந்து வருவதாலும், உடன்பிறப்புகளற்ற சமூகத்தின் சிக்கல்களை நாம் எப்போதும் அனுபவித்து அறியததாலுமே ஒற்றைப் பிள்ளைகளை பெற்று வைத்துக்கொண்டு, அதற்கான நியாயக் கணக்காக பொருளாதாரச் சிக்கல்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். 

இன்றைய சமூக வாழ்வில், குழந்தைகளுக்கு அவசியமான  நல்ல பள்ளி, நல்ல உடைகள்,  நல்ல உணவு, உபயோகப் பொருட்கள், குறைந்தபட்ச விடுமுறைச் சுற்றுலா என எல்லாமே, நமது பொருளாதாரத்தைச் சார்ந்துதான் உள்ளன என்பதை மறுக்க இயலாது. ஆனால், அவை மட்டுமே ஒரு குழந்தைக்குப் போதுமா?

ஒரு சகோதரன் அல்லது சகோதரியின் உறவு எப்படி இருக்கும்? சகோதர உறவுகள் சிறுவயதில் பெரும்பாலும் சண்டையாகத்தான் ஆரம்பிக்கின்றன. என் பொம்மையை அவன் எடுத்துக்கொண்டான், என் புத்தகத்தை அவள் கிழித்துவிட்டாள், என் சாக்லெட்டை அவன் பிடுங்கிக்கொண்டான், அம்மா அவனுக்கு மட்டும் செல்லம் கொடுக்கிறார் என்று தினமும் ஒரு பிரச்சினை, தினமும் ஒரு போராட்டம் என்பதாகத்தான் இருக்கும். இரண்டு குழந்தைகள் கொண்ட பெற்றோர்களுக்கே சில நேரங்களில், ’ஒரு குழந்தையோடு நிறுத்தியிருக்கலாமோ’ என்று தோன்ற வைத்துவிடும் நிலைதான் நிலவும். ஆனால், வாழ்க்கை என்பது அது மட்டுமேயல்ல. அவர்கள் யாரென்பது அவர்களுக்குத்தான் தெரியும். வீட்டின் அத்தனைக் கதைகளும் அவர்களுக்குப் பொதுவானவை. அவர்களின் வெற்றிகளை, தோல்விகளைத் தெரியும். அவர்களின் பலத்தையும், பலவீனத்தையும் அவர்கள் அறிவார்கள். ஆனால், அதற்காக அவர்கள் ஒருவரை ஒருவர் எடைப் போடப்போவதில்லை. ஏனென்றால், அவர்கள் இருவருமே ஒரே கதையின் வெவ்வேறு பகுதிகள்தான். அந்தக்கதையில் பகிர்ந்துகொள்வது, விட்டுக்கொடுப்பது, சண்டையிடுவது, சமாதானமாவது, பொறாமைப் படுவது, அன்பை வெளிப்படுத்துவது என எல்லாமே இருக்கிறது. அவற்றையெல்லாம் அவர்களுக்கு எந்தப் பள்ளியும் தனியாகக் கற்றுக்கொடுத்துவிட முடியாது.

Family

ஒரு மனிதனுக்கு உண்மையில் உறவுகளின் தேவை ஏற்படுவது அவன் வளரும் போதுதான். பெற்றோர்கள் முதுமையை அடைகிறார்கள். ஒரு கட்டத்தில் இல்லாமலும் போகிறார்கள். உதவுகிறதோ, உபத்திரவம் தருகிறதோ, உங்கள் உதிரத்தில் பிறக்கும் பிள்ளைகளைப் போன்றவர்கள்தான் உங்கள் உடன்பிறப்புகளும். அவர்களைப் போல இன்னொன்று இந்தவுலகில் உங்களுக்கானது என்று வேறில்லை. 

வீடு வாசல், நிலபுலன்கள் என எல்லாவற்றையும் விட பெற்றோர், ஒரு பிள்ளைக்கு விட்டுச் செல்லக்கூடிய பெரிய சொத்து என்னவென்றால், ’நீ தனியாக இல்லை’ எனும் உணர்வுதான். 2.1 என்ற அறிவியல் குறியீட்டைக்கூட ஒரு வழிகாட்டியாக வைத்துக்கொள்ளுங்கள். 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள். நம்மை விடவும் அவர்கள் ஒருவருக்கொருவர் அவசியம். செஸ் விளையாட பக்கத்து வீட்டுக் குழந்தையைத் தேட வேண்டிய அவசியம் அவர்களுக்கு வராது. அதற்காக வடிவேலுவைப்போல கேரம் போர்டு விளையாட அவசியப்படும் அளவுக்கு உங்கள் திட்டத்தை விரிவுபடுத்திக் கொண்டுவிடாதீர்கள். அதன் பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பாக முடியாது.