”பாட்ரியா ஓ ம்யூர்தெ!" (patria o moerte)
’முழு உரிமையுடன் கூடிய தாய் நிலம் அல்லது மரணம்!’- ஐக்கியநாடுகள் சபையில், சே குவேரா 1964ல் இப்படி முழங்கிய இரண்டு வார்த்தைகள்தான் இப்போதும், உலகெங்கும் அடக்குமுறையால் மூச்சுத்திணறும் மக்களின் மனங்களில் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.
கடந்த நூற்றாண்டுகளில் கார்ல் மார்க்ஸ் (Karl Marx: 1818-1883), விளாடிமிர் லெனின் (Vladimir Lenin: 1870-1924), மாவோ சே துங் (Mao Zedong: 1893-1976), மகாத்மா காந்தி (Mahatma Gandhi: 1869-1948), பெரியார் (Periyar: 1879-1973), அம்பேத்கர் (Ambedkar: 1891-1956) என மனித சமூகம் பொதுமைக்குமாக சிந்தித்த பல உன்னதமான தலைவர்களை உலகம் பார்த்திருக்கிறது. அவர்களுள் சே தனித்துவமானவர்.
எர்னஸ்டோ 'சே' குவேரா (Ernesto 'Che' Guevara), இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான புரட்சியாளர்களில் ஒருவர். 1928-ஆம் ஆண்டு அர்ஜென்டினாவில் பிறந்த சே குவேரா, மருத்துவப் படிப்பை முடித்தவர். தனது இளமைப் பருவத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகள் முழுவதும் அவர் மேற்கொண்ட மோட்டார் சைக்கிள் பயணங்கள், அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தன. அந்தப் பயணங்களின் போதுதான், வறுமை, பசி மற்றும் ஏழை மக்களின் துன்பங்களை அவர் பார்த்தார். அமெரிக்க நிறுவனங்கள் எளிய உழைப்பாளிகளிடம் நிகழ்த்திய உழைப்புச் சுரண்டல்களையும் உணர்ந்தார். அப்படியான அநீதியான சமூகக் கட்டமைப்பை உடைத்திட வேண்டும் என்ற வேட்கையும் அப்போது பிறந்ததுதான்.
நூற்றாண்டுகளாக ஸ்பெயினின் காலனியாதிக்கத்தில் கிடந்த கியூபா, பெரும் போராட்டத்துக்குப் பின்னர், 1898ல் ஸ்பெயினிடமிருந்து விடுதலை அடைந்தது. ஆனால், அது நிஜமான விடுதலையாக இருக்கவில்லை, அதன்பின் முழுவதுமாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டது. அமெரிக்கா அமைத்துக் கொடுத்த பொம்மை அரசுகளை வீழ்த்த 1950களில் எழுந்தவர்தான் கம்யூனிசப் புரட்சியாளர் ஃபிடல் கேஸ்ட்ரோ. மெக்சிகோவில் பிடல் காஸ்ட்ரோவும், சே குவேராவும் சந்தித்தத் தருணம் இருவரது வாழ்க்கையிலும் மிக முக்கியமான நிகழ்வாகும். சேவின் சிந்தனையாலும், செயல் திட்டங்களாலும் ஃபிடல் மிகவும் கவரப்பட்டார். இருவரும் இணைந்து கியூபாவின் சர்வாதிகாரி, புல்ஜென்சியோ பாடிஸ்டாவின் ஆட்சிக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினர். 1959-ஆம் ஆண்டு அவர்களின் கியூபப்புரட்சி வெற்றி பெற்று, அங்கு ஃபிடலின் புதிய கம்யூனிஸ அரசு அமைந்தது. அமெரிக்கா கியூப மண்ணிலிருந்து முற்றிலுமாக அகற்றப்பட்டது. அங்கிருந்த அமெரிக்க நிறுவனங்கள் அரசுக்குச் சொந்தமாயின. அதில் சேகுவாராவின் பங்கு அளப்பரியது.
அதன் பின்னர், கியூபாவின் அமைச்சராகவும், அதன் தேசிய வங்கியின் தலைவராகவும் பணியாற்றினார் சே! அந்த சமயத்திலும், அமெரிக்காவின் மறைமுகத் தொல்லைகள், பொருளாதாரக் கட்டுப்பாடுகள், போர்த் தாக்குதல் முயற்சிகள், சே மற்றும் ஃபிடல் மீது நடத்தப்பட்ட சிஐஏவின் கொலை முயற்சிகள் ஆகியன தொடர்ந்து கொண்டுதான் இருந்தன. அப்போது கியூபாவின் அமைச்சராக, ஐநாவில் பேசிய சேகுவேராவின் வார்த்தைகள்தான், மேலே குறிப்பிடப்பட்ட ‘தாய்நாடு அல்லது மரணம்’. அவைதான், கியூப மக்களின் மனதில், அமெரிக்காவுக்கு எதிரான தொடர் போராட்டத்துக்கான உத்வேகத்தை அளித்தன.
பின்னர், 1965ல் கியூபா மெல்ல சீரடைந்து வந்த நிலையில், கியூபாவில் தன் பணி நிறைவுற்றதாக உணர்ந்த சே, இன்னொரு முடிவெடுக்கிறார். எந்த ஒரு போராளியும் தன் தாய்நிலத்துக்காகப் போராடுவான், உயிரை விடுவான். ஒருவேளை வென்றால் அங்கே மகிழ்ச்சியானதொரு வாழ்வைத் தொடருவான். ஆனால், சே பிறந்து அர்ஜெண்டினாவில்! அவர் போராடியதோ கியூப மக்களுக்காக! அதோடு அங்கு தன் வேலை நிறைவுற்றதாய் அவர் உணர்ந்த போது, கியூபாவிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு அதே போன்றதொரு சிக்கலில் தவித்த தென்னமெரிக்க நாடுகளை, அமெரிக்க ஆதிக்கத்திலிருந்து மீட்க, பொலிவியாவுக்கு இடம் பெயர்ந்தார்.
கியூபா எனும் ஒரு சின்ன நாட்டின் மீதான கட்டுப்பாட்டை இழந்த அமெரிக்கா, இம்முறை மொத்த தென்னமெரிக்காவின் மீதான அமெரிக்காவின் பொருளாதாரச் சுரண்டலுக்கும் ஆபத்து வருவதைப் பொறுக்கமுடியாமல், என்ன விலை கொடுத்தாவது சேவை வீழ்த்தத் திட்டமிட்டது. ‘உன்னதமான லட்சியங்களைக் கொண்டுள்ள, இழக்க எதுவுமில்லாத ஒருவனே உலகின் மிக ஆபத்தான மனிதன்’ என்பதை உணர்ந்திருந்தது சிஐஏ! சே எனும் தனிமனிதனைப் பிடிக்க அமெரிக்கா இன்றைய மதிப்பில் சுமார் 400 மில்லியன் டாலர்களை (3800 கோடி ரூபாய்) செலவழித்தது. ஒரு மிகச்சிறிய குழுவுடனிருந்த சே, மக்களைச் சந்தித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஒரு புரட்சிக்கு அவர்களை ஆயப்படுத்தும் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த 2026ல் தென்னமெரிக்க நாடுகள், சுதந்திர நாடுகளாக இருந்தாலும் அமெரிக்காவின், நேரடியான, மறைமுகமான சுரண்டலுக்கு இன்றும் ஆளாகிக்கொண்டுதான் இருக்கின்றன. சேவின் மரணம், ஒரு வரலாற்றையே மாற்றியமைத்துவிட்டது. தன்னைச் சுட, துப்பாக்கியை நீட்டிய சிப்பாயிடம், சே சொன்ன கடைசி வார்த்தைகள்,
’சுடு! உன்னால் மனிதனை மட்டும்தான் கொல்ல முடியும்’
'…அவனது சிந்தனையை அல்ல’ என்ற அதன் முழுப் பொருளையும் உலகம் உணர்ந்துகொண்டது. அதனால்தான் உலகெங்கிலும் எங்கே, எப்போது, எந்த வடிவத்தில் அடக்குமுறை தோன்றினாலும், அதற்கெதிரான குறியீடாக (Symbol of Rebellion) சே குவேராவே இருக்கிறார். சே குவேராவின் முகம் அச்சடிக்கப்பட்ட டிஷர்ட்டை அணிந்திருக்கும் ஓர் இளைஞனுக்கு அவரைத் தெரியாமலிருக்கலாம். ஆனால், அடக்குமுறையைச் செய்யத்துணியும் ஒவ்வொரு சக்திக்கும் அவரை நன்றாகத் தெரியும்!