Hippos 
செய்திகள்

நீர்யானைகள்... கொலம்பியா அரசு எடுத்த அதிர்ச்சிகர முடிவு!

மிகவும் ஆபத்தான விலங்கான நீர்யானைகளை பிடித்து கருத்தடை செய்வது சவால் நிறைந்தாகவும் அதிக பொருட்செலவு பிடிக்கும் விஷயமாகவும் உள்ளது.

எம். குமரேசன்

ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பிறகு, அதிக நீர்யானைகளைக் கொண்ட ஒரே நாடு கொலம்பியா ஆகும். இந்த நீர்யானைகளும் ஆப்பிரிக்காவில் இருந்து கொலம்பியாவுக்கு வந்தவைதான். 1980ம் ஆண்டுவாக்கில் போதைப்பொருள் கடத்தல் மன்னனான எஸ்கோபார் என்பவர் கொலம்பியாவின் மக்டலினா நதிப் பள்ளத்தாக்கில் ஒரு மிருகக்காட்சி சாலையை அமைத்தார். அப்போது ஆப்ரிக்காவிலிருந்து நான்கு நீர்யானைகளை கொலம்பியாவுக்கு கொண்டு வந்தார். இப்படித்தான் கொலம்பியாவுக்குள் நீர்யானைகள் நுழைந்தன. பின்னர், அவை பல்கிப் பெருகின.

வெளிநாட்டில் இருந்து வந்ததால், நீர்யானைகள் மீது கொலம்பிய மக்களுக்கு எப்போதும் ஒரு வெறுப்புணர்வு உண்டு. அதோடு, கிராம மக்களின் உயிருக்கும் அச்சுறுத்தலாக உள்ளன. நதி கடற்பசுக்கள் போன்ற உள்ளூர் உயிரினங்களுடன் உணவு மற்றும் வசிப்பிடத்திற்காக போட்டி போடுகின்றன என்பதும் நீர்யானைகள் மீது கொலம்பிய அரசு வைக்கும் குற்றச்சாட்டு.

மேலும் மிகவும் ஆபத்தான விலங்கான அவற்றைப் பிடித்து கருத்தடை செய்வது சவால் நிறைந்தாகவும் அதிக பொருட் செலவு பிடிக்கும் விஷயமாகவும் உள்ளது. தற்போது, கொலம்பியாவிலுள்ள நீர் யானைகள் மரபணுரீதியாக மாற்றமடைந்துள்ளன. எனவே, அவற்றை மீண்டும் ஆப்ரிக்கா கண்டத்துக்குக் கொண்டு செல்லவும் சாத்தியமில்லாத சூழல் உள்ளது. இதனால் , கிட்டத்தட்ட 80 நீர்யானைகளை கொல்ல கொலம்பிய அரசு முடிவு செய்துள்ளது.

கொலம்பிய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விலங்கு நல ஆர்வலர்கள், 'மனிதர்களைப் போலவே நீர்யானைகளும் வாழ்வதற்குத் தகுதியானவை. கொலையின் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பது ஒரு மோசமான முன்னுதாரணம். இது ஒரு கொடுமையான முடிவு. அரசு அதிகாரிகள் சுலபமான வழியைத் தேர்ந்தெடுக்கின்றனர். கொலைகளும் படுகொலைகளும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.'' என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

ananth ambani in vanthara

இந்த நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் அம்பானி கொல்லப்படவுள்ள 80 நீர்யானைகளை தங்களின் 'வந்தாரா வன உயிரின சரணாலய'த்திடம் ஒப்படைக்கும்படி கொலம்பிய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார் அதில் நீர்யானைகளைத் தாங்களே பராமரிப்பதாகவும், அதற்கான கால்நடை மருத்துவ நிபுணர்கள், தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.'நீர் யானைகள் எங்கு பிறந்தால் என்ன? இந்தப் பிரச்னையை மனிதாபிமானத்துடன் அணுகுவதே ஒரு தீர்வு' என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் 4.5 டன் எடையுள்ள ஒவ்வொரு நீர்யானையையும் பிடித்து இந்தியா கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அந்தக் கடிதத்தில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுவரை, இந்தியாவில் வனத்துக்குள் எந்த நீர்யானையும் வசிப்பதாகத் தெரியவில்லை. சென்னை வண்டலூர் போன்ற மிருககாட்சி சாலைகளில் மட்டுமே நீர் யானைகள் உள்ளன.

கொலம்பியாவுக்கு நீர் யானைகள் வந்தது எப்படி?

போதை கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபார், 1980 ம் ஆண்டு வாக்கில் மக்டலினா நதிப் பள்ளத்தாக்கில் ஒரு மிருகக்காட்சிசாலையை அமைத்தார். இங்கு, நான்கு நீர்யானைகளையும், ஒட்டகச்சிவிங்கிகள் மற்றும் வரிக்குதிரைகள் உள்ளிட்ட பிற விலங்குகளையும் ஆப்ரிக்காவில் இருந்து இறக்குமதி செய்தார். இதனால், இவற்றுக்கு 'கொகைன் நீர் யானைகள்' என்கிற பெயரும் உண்டு. 1993ம் ஆண்டு எஸ்கோபரை கொலம்பிய போலீஸ் சுட்டுக் கொன்றது.

எஸ்கோபர் மறைவுக்கு பிறகு, இந்த நீர்யானைகள் காட்டுக்குள் விடப்பட்டன. இனப்பெருக்கமும் விரைவாக நடந்தது. இதனால் நான்கு நீர் யானைகள் பெருகி, கிட்டத்தட்ட 200 வரை ஆகி விட்டன. ஆப்ரிக்க நாடுகளுக்குப் பிறகு, அதிக நீர்யானைகளை கொண்ட நாடாக கொலம்பியா மாறியது. நீர்யானைகள் எல்லையை வரையறுத்து வாழ்பவை. அவற்றின் எல்லைக்குள் பிற விலங்குகள் செல்ல முடியாது. மனிதர்கள் சென்றாலும் உயிருக்கு ஆபத்துதான். ஒரு நீர்யானை ஒவ்வொரு நாளும் சுமார் 40 கிலோ புல் மற்றும் தாவரங்களை உட்கொள்கிறது. இது, கொலம்பியாவின் மிக முக்கியமான நதியின் சூழலியலைப் பாதிப்பதோடு, உள்ளூர் விலங்கினங்களையும் அங்கிருந்து இடம் பெயரச் செய்துள்ளது.