நடிகர் பார்த்திபன், சமீபத்தில் கலந்துகொண்ட ஒரு திரைப்பட விழாவில், தான் இந்த சாதியைச் சேர்ந்தவன் என்பதை பெருமையோடு குறிப்பிட்டார். அதை முன்னிட்டு தமிழ்வெளியில், பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பிய பின்னர், தன் தவறை உணர்ந்து அதற்கு வருத்தம் தெரிவித்து ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில், ’தான் எப்போதும் சாதி மனநிலை கொண்டவன் அல்ல என்றும் அப்படி அந்த விழாவில் யோசிக்காமல் பேசியது மிகப்பெரிய தவறு’ என்றும் சொல்லி வருத்தம் தெரிவித்தார். பொதுவெளியில் இருப்போர் எல்லோருமே, எப்போதுமே தாம் பேசுவதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஆனால், அதை மீறி ஒரு வேகத்தில் தனக்கு விருப்பமில்லாத, தம் சிந்தனை ஏற்றுக் கொள்ளாத சில விஷயங்களையும், நாம் எப்போதாவது உளறி விடுவதற்கான வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. அப்படி நடந்துவிட்டால், அதற்கான எதிர்வினையை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். பார்த்திபன் எதிர்கொண்ட விதமும் சரியானதுதான். ஆனால், அதன் பிறகுதான் அவர் ஒரு காரியத்தைச் செய்கிறார். தான் ஒரு சாதியற்றவன் என்பதை நிரூபிப்பதற்காக ’சாதியற்றவன்’ என்ற சான்றிதழ் தனக்கு வேண்டும் என்று அரசாங்கத்தைக் கேட்கிறார், தொடர்ந்து நீதிமன்றத்தையும் அணுகியிருக்கிறார்.
இது சரியா? சேர்த்துக் கொள்வதற்கும், நீக்கி விடுவதற்கும் சான்றிதழிலா இருக்கிறது சாதி?
முதலில், சாதியை ஒழிப்பதற்காகத் தோன்றிய சாதிச்சான்றிதழ்தான், சாதியை காப்பாற்றுகிறது எனும் நேரெதிரான மனநிலை எப்படி ஏற்படுகிறது? சான்றிதழை ஒழித்துவிட்டால் அல்லது ‘நான் சாதியற்றவன்’ எனும் சான்றிதழைப் பெற்றுவிட்டால் சாதி ஒழிந்துவிடும் என்று எப்படி நினைக்கிறார்கள்? இந்த எண்ணம் எங்கிருந்து வருகிறது?
பொருளாதாரத் தன்னிறைவு! பணமும், அங்கீகாரமும் தமக்குக் கிடைத்துவிட்டபிறகு தம்மையுமறியாமல் அந்த ‘எலைட்’ மனநிலையிலிருந்து உருவாகிறது இந்த எண்ணம்!
அதற்கும் முன்னதான முதல் கேள்வி, சாதி ஏன் உருவானது? பெரும்பான்மை மக்களுக்குரிய அங்கீகாரத்தையோ, பொருளாதாரத்தையோ, மரியாதையையோ வழங்காமல், அவர்களிடமிருந்து உழைப்பை மட்டும் சுரண்டி, ஒரு சிறுபான்மையினர் மட்டும் பயனடைய ஏற்பாடு செய்யப்பட்டதே இந்த சாதி அமைப்பு! சாதியின் வரலாறு மிக நீண்டது, 2000 வருடங்களுக்கும் அதிகமானது, கிட்டத்தட்ட உயிரியல் ரீதியான மாற்றத்தையே ஏற்படுத்தக்கூடிய அளவிலான மிக நீண்ட காலமிது. இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு இங்கே சாதி குறித்த விழிப்புணர்வு ஏற்படாமல் போயிருந்தாலோ, அறிவியல் வளர்ச்சியும் சற்று தாமதமாகியிருந்தாலோ, சில சாதியினருக்கு தலையில் கொம்புகள் முளைத்து, சில சாதியினருக்கு முதுகுத் தண்டுவட வளைவுப்பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், நாம் அதில் வியக்க ஒன்றுமிருந்திருக்காது.
இப்படியொரு அழுத்தமான, ஆழமான சிக்கல் இருக்கும் சமூகத்தில், பெரும்பாலான மக்கள் இழந்த உரிமைகளையும், பொருளாதார உயர்வையும் மீண்டும் அடைந்திட உருவாக்கப்பட்ட வழிமுறைகளில் ஒன்றுதான் சாதிச்சான்றிதழ். அதை முன்னிறுத்தியே அவர்களுக்கான தகுந்த இட ஒதுக்கீட்டையும், வாய்ப்புகளையும் நாம் மீண்டும் உருவாக்கித் தரமுடியும். அதைத்தான் அம்பேத்கரும், பெரியாரும் வலியுறுத்தினார்கள். இந்தியாவில், முதன்முறையாக, அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கான (SC/ST) அதிகாரப்பூர்வ சாதிச் சான்றிதழ்கள் 1950-ஆம் ஆண்டுதான் வழங்கப்பட்டன. 2000 ஆண்டுகால சாதிக் கொடுமைக்கு எதிரான போரில், சாதிச் சான்றிதழ் கொண்டுவரப்பட்டு வெறும் 75 ஆண்டுகளே ஆகின்றன. அதன் பிறகும், முன்னேற்றம் என்பதும், மாற்றம் என்பதும் மெல்ல மெல்லத்தான் நடந்துகொண்டிருக்கிறது, மெல்ல மெல்லத்தான் நடக்கும்!
இந்தச் சிறிய மாற்றத்தைக் கூட நடக்க விடாமல், ஆதிக்க சக்திகள் எத்தனையோ வழிகளில், வாழைப்பழத்தில் ஊசியை இறக்குவது போன்ற எதிர்ப்புக் காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். போதாத குறைக்கு, மேலோட்டமான அரசியல் லாபங்களுக்காக சாதியைச் சாகவிடாமல், காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள் சில அரசியல்வாதிகள். படிப்பு, வேலை, ஒழுக்கம், சிந்தனை போன்ற உழைக்க வேண்டிய, கடினமான வழிமுறையை விட, படிப்பின்மை, சாதிப்பெருமை, ஒழுக்கமின்மை, மது, ஆதிக்க சிந்தனை போன்ற உழைப்பு அவசியமற்ற எளிய வழிமுறையையே மனித மனம் மிக விரும்பும். அதைப் பேசித்தான் நம் இளைஞரிடையே மிக எளிதாக சாதிய மனநிலையை வளர்க்கிறார்கள் சில கோடரிக்காம்புகள்.
அப்படியானால், பார்த்திபனைப் போல பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள், சாதி உரிமைகளைப் ஏற்கனவே பெற்று வளர்ந்தவர்கள்- இவர்களெல்லாம் சாதிச் சான்றிதழை மறுக்கக்கூடாதா? அதில் என்ன தவறு?
சாதி என்பது தனிமனிதனின் 'சான்றிதழ்'களில் மட்டுமே இருக்கும் ஒன்றல்ல, அது சமூகத்தின் அடியாழம் வரை ஊடுருவியிருக்கும் ஒரு கட்டமைப்பு (Structural Hierarchy). நாம் ‘சாதியற்றவர்கள்’ என்று ஒரு பிரபலம் சான்றிதழ் பெறுவதால், சமூகத்தில் சாதியக் கட்டமைப்பு உடைந்துவிடாது. மாறாக அது, சாதியக் கொடுமைகளை, பாகுபாடுகளை, பொருளாதாரக் கீழ்நிலைகளை அனுபவிப்பவர்களின் வலியை உணராத ஒருவன், பொதிகையின் மழைநீரில் நனைந்தபடியே, ’எனக்குத் தாகம் இல்லை’ என்று சொல்வதைப் போன்றதாகும். நூறு பேர் அமர்ந்திருக்கும் பந்தியில், அஜீரணக்கோளாறிலிருக்கும் ஓரிருவர், சாப்பிடுவதைப் போல பாவனை செய்துவிட்டு, முன்னதாகவே எழுந்து போவதைப் போன்ற ஓர் அநாகரீகச்செயல்!
பார்த்திபன், எனக்கு சாதியில்லை என்று சொல்வது, ‘சாதியே இப்போது இல்லை’ எனும் பொய்ப் பிரச்சாரத்துக்குதான் வலுசேர்ப்பதாக அமையும். தவிரவும் அந்த சான்றிதழ் கேட்டு போடப்பட்ட வழக்கின் தீர்ப்பின்போது பத்திரிகையாளர்களை சந்தித்த பார்த்திபன் ஒரு நிருபரின் இடஒதுக்கீடு குறித்த கேள்விக்கு பதில் சொல்லும்போது "இன்னும் உழைப்பால உயர முடியும்னு நம்பிக்கையோட இருக்கேன். வெறும் சலுகைகளால மட்டும் வெற்றிபெறணும்னு நெனைக்கல. எனக்கு அது தேவையில்ல" என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். அந்த 'வெறும் சலுகை' என்ற சொல்லாடல் இட ஒதுக்கீட்டைப் பற்றி பார்த்திபனுக்கு அரைகுறைப் புரிதலே இருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாகப் பறைசாற்றுகிறது. இதைப் பார்க்கும், மேட்டிமை மனம் கொண்ட மாணவர்கள் இடஒதுக்கீடால் பயன்பெறுபவர்களை எள்ளிநகையாடும் செயல் நடக்கக்கூடும். பார்த்திபன் இதைச் செய்திருக்க வேண்டியதே இல்லை. செய்திருக்கக்கூடாது.
சாதியப் பாகுபாடுகளைக் களையப் போராடும் களப்பணியாளர்களை விட, இது போன்ற 'குறியீட்டுச் செயல்களில்' (Symbolic Gestures) ஈடுபடுபவர்கள் அதிக கவனத்தைப் பெறுவார்கள். ஒரு பிரபலம் இப்படிச் செய்யும்போது, அதைப் பின்பற்றும் இளைஞர்கள், சாதி ஒழிப்பு என்பது காகிதத்தில் பெயர் நீக்குவதுதான் எனத் தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. இது சாதியத்தை ஒழிக்கும் உண்மையான சமூகச் செயல்பாடுகளைத் திசைதிருப்பும். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தன் சாதியைச் சொல்லித் தன் உரிமையைக் கேட்கும்போது, இத்தகைய செயல்கள், ’ஏன் இன்னும் சாதியைச் சார்ந்தே சலுகைகள் பெறப் பார்க்கிறாய்?’ என்ற மேட்டுக்குடியினரின் நையாண்டிக்குத் துணை போகும்.
மாறாக பார்த்திபன் போன்றோர் என்ன செய்ய வேண்டும்?
சாதி என்பது காகிதத்தில் இல்லை, அது அதிகார மட்டத்தில், திருமணங்களில், உணவு மேசைகளில், வழிபாட்டுத் தலங்களில் என சமூகத்தின் அத்தனைத் தளங்களிலும் ஊடுருவி இருக்கிறது. பார்த்திபன் ஒரு திரைக்கலைஞராக அத்தகைய சிக்கல்களைச் சொல்லும் கதைகளை படமாக்க முன்வரலாம். தன் தயாரிப்பு நிறுவனத்திலோ, தன் குழுவிலோ ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தகுதியான வாய்ப்புகளைத் தந்து, அவர்களுக்கு அதிகாரத்தை வழங்கலாம். தன் குடும்பத்தில் அல்லது தனக்கு நெருக்கமானவர்கள், அல்லது ரசிகர் வட்டத்தில் சாதி மறுப்புத் திருமணங்களை நடந்தால் நேரில் சென்று அதை ஊக்குவித்து, அதைச் சமூக இயல்பாக மாற்ற உதவலாம். சாதியக் கொலைகள், வன்கொடுமைகள் நடக்கும்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கலாம். தன் சாதிச் சான்றிதழைக் காண்பித்து இந்தச் சாதியினர், எத்தகைய சாதிய பாதிப்புக்கு ஆளாயிருந்தனர் அல்லது பிறருக்கு எத்தகைய சாதிய பாதிப்பை ஏற்படுத்தினர் என்று விமர்சிக்கலாம்! கட்சி வேறுபாடின்றி, யாராவது சாதிக்கு எதிரான ஒரு திட்டம் அல்லது செயல்பாட்டை முன்னெடுக்கும்போது, அதன் தூதுவராகத் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளலாம்.
சாதி என்பது சமூகத்தின் அழுக்கு. அந்த அழுக்கைச் சுத்தம் செய்யக் களப்போராளிகளோடு கரம்கோர்த்து களமிறங்க வேண்டுமே தவிர, என் சட்டையில் அந்த அழுக்கு இல்லை என்று நிரூபிக்க முயல்வது அபத்தமானது!