L’Espresso magazine's cover image Pietro Masturzo
செய்திகள்

ஒற்றைப் புகைப்படம்: அதிர்ந்த நெட்டிசன்கள்! #gaza

இத்தாலி பத்திரிகை வெளியிட்ட புகைப்படத்தால், இஸ்ரேல் அதிர்ச்சியடைந்துள்ளது. ஆனால், இதற்காக அந்தப் பத்திரிகை மன்னிப்புக் கேட்க மறுத்து விட்டது.

எம். குமரேசன்

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் போர் மூண்டுள்ள நிலையில், இத்தாலிய பத்திரிகை வெளியிட்ட அட்டைப் புகைப்படத்தால், இஸ்ரேல் கடும் கோபம் அடைந்துள்ளது.

இத்தாலியில் L'Espresso என்ற வாரப்பத்திரிகை வெளியாகிறது . அந்த நாட்டின் முன்னணிப் பத்திரிகை இதுவாகும். 1955ம் ஆண்டு முதல் ரோமில் இருந்து வெளியிடப்படுகிறது. கிட்டத்தட்ட 2 லட்சம் பிரதிகள் விற்பனையாகும் இந்த பத்திரிகையில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி இடம் பெற்றிருந்த அட்டைப்படம்தான் இஸ்ரேல் நாட்டை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது.

'L'ABUSO' அதாவது துஷ்பிரயோகம் என்று தலைப்பிடப்பட்ட அந்தப் புகைப்படத்தில், ஆயுதம் ஏந்திய இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) வீரர் ஒருவர், சிரித்தபடி நிற்கிறார். அவரின் முன், பயந்த முகபாவத்துடன் நடந்து செல்லும் ஒரு பாலஸ்தீனியப் பெண்ணை செல்போனில் படம் பிடிக்கிறார். அந்த இஸ்ரேலிய வீரரின் சிரிப்பு, மிகுந்த ஆணவத்துடன் இருக்கிறது. இந்தப் புகைப்படத்தின் தலைப்புக்கு கீழ் ''பாழாக்கப்பட்டது காசா.... லெபனானை தாக்குகின்றனர். சிரியாவின் எல்லை பறி போனது. ஈரானுடனான போர். இன அழிப்பு மற்றும் படுகொலைகள். இப்படித்தான் சியோனிச வலதுசாரிகள் இஸ்ரேலை மாற்றி வைத்துள்ளனர்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அட்டைப் படம் வெளியானதும் இணையத்தில் வைரலானது. இத்தாலிக்கான இஸ்ரேல் தூதர் ஜோனதன் பெலெட்( Jonathan Peled) ''இந்தப் படம் வெறுப்புணர்வை விதைக்கிறது. யூதர்களை மனிதாபிமானமற்றவர்கள் போலக் காட்டுகிறது. ஏஐ தொழில்நுட்பத்தில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. பத்திரிகைகள் பொறுப்புணர்வுடன் சமநிலையுடனும் நேர்மையுடனும் நடந்துகொள்ள வேண்டும்'' என்று தனது எக்ஸ் பதிவில் விமர்சித்திருந்தார்.

எனினும், இந்தப் படம் உண்மையானது என்று L'Espresso பத்திரிகை தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள மக்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் பணியை மேற்கொண்ட இத்தாலிய போட்டோ ஜர்னலிஸ்ட் பியட்ரோ மஸ்துர்சோ (Pietro Masturzo) இந்தப் புகைப்படத்தை எடுத்துள்ளார். அட்டைப்படத்தில் உள்ள இந்தப் படம், ஆலிவ் அறுவடையின் முதல் நாளான கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ம் தேதி ஹெப்ரோனுக்கு மேற்கேயுள்ள இத்னா என்ற பாலஸ்தீனிய கிராமத்தில் எடுக்கப்பட்டது'' என்று உறுதிபடக் கூறியுள்ளது.

original image

இந்தப் புகைப்படத்தை எடுத்த Pietro Masturzo, இந்த விவகாரம் தொடர்பாக மற்றொரு காணோலியை பகிர்ந்து கூறியதாவது, ''ஆலிவ் அறுவடையின் முதல் நாளில், ஆயுதம் ஏந்திய இஸ்ரேலிய வீரர்கள் அங்கு வந்தனர். பின்னர், அவர்கள் பாலஸ்தீனிய மக்கள் ஆலிவ் இலைகளைப் பறிப்பதைத் தடுத்த போதுதான், நான் இந்தப் புகைப்படத்தை எடுத்தேன். ஒரு ஆடு மேய்ப்பவர் மந்தையைப் பார்ப்பது போலவும், பாலஸ்தீன மக்களை ஒரு வகை விலங்குகளைப் போல இஸ்ரேல் வீரர்கள் நடத்தியதையும் நான் நேரில் கண்டேன்'' என்றும் தெரிவித்துள்ளார்.

மேற்குக் கரையில் தொடரும் இஸ்ரேலின் வன்முறையைக் கண்டிக்கும் வகையில், ஏப்ரல் 10ம் தேதி L'Espresso இதழ் பாலஸ்தீன மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ''இந்தப் புகைப்படத்தை வெளியிட்டதற்காக, மன்னிப்புக் கேட்கமாட்டோம். அட்டைப்படத்தைத் திரும்பப் பெறவும் மாட்டோம்'' என்றும் அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

சமீபத்தில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி (Giorgia Meloni) இஸ்ரேல் நாட்டுடன் இத்தாலி மேற்கொண்டிருந்த ராணுவம் தொடர்பான அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்தார். கடந்த 2005ம் ஆண்டு முதல் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒரு முறை, இந்த ஒப்பந்தம் தானாகவே புதுப்பிக்கப்படும். இந்த ஒப்பந்தத்தைதான் இத்தாலி பிரதமர் ரத்து செய்து, இஸ்ரேலுக்கு அர்ச்சியளித்துள்ளார்.

அதோடு, கடந்த திங்கட்கிழமை லெபனானுக்கு இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தஜானி (Antonio Tajani) சென்றிருந்தார். அப்போது, பொதுமக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று கண்டித்திருந்தார். கடந்த வாரம், தெற்கு லெபனானில் இத்தாலிய அமைதிப்படை வீரர்களின் வாகன அணிவகுப்பின் மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இத்தாலிய அரசு குற்றம் சாட்டியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.