Up: P. Jayaraj and J. Bennix Down: Convicted Accuses  
செய்திகள்

மரண தண்டனை: சில சிந்தனைகள்

செசரே பெக்காரியா (Cesare Beccaria) 1764-ல் தொடங்கியது கண்ணியமான மரணம் வேண்டும் என்ற விவாதத்தை அல்ல, அவர் தொடங்கி வைத்தது மரணதண்டனைக்கே எதிரான விவாதத்தை!

ஆதி தாமிரா

சாத்தான்குளம் ஜெயராஜ், பெனிக்ஸ் கொடூரக் கொலை வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகள் 9 பேருக்கும் இரட்டைத் தூக்குத்தண்டனை வழங்கப்பட்டு, தீர்ப்பாகியிருக்கிறது. அந்தச் சம்பவம் நடந்த நாட்களில் நாம் எப்படி துணுக்குற்றுப் போய்க் கிடந்தோம் என்பது இன்னும் நினைவிலிருக்கிறது.

வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், மனிதனே இப்புவியின் ஆகக்கொடூரமான விலங்கு என்பதை நிரூபிப்பதாக இருக்கிறது நமது தொடக்க காலமும், இடைக்காலமும்! குற்றவாளிகளுக்கும், குற்றமே நிரூபிக்கப்படாத சிறைவாசிகளுக்கும், போர்க்கைதிகளுக்கும் நமது இடைக்கால ஆட்சியமைப்புகள், அதிகார அமைப்புகள் வழங்கிய தண்டனைகள் அப்பேர்ப்பட்டவை! கைதிகளை உயிரோடு கட்டிவைத்து மெல்ல மெல்ல எரித்துக்கொல்வது, கழுவிலேற்றி நாட்கணக்கில் துடிக்கவிட்டுக் கொல்வது, சிலுவைக்கொலைகள், சக்கரங்களில் கட்டி உருட்டி எலும்புகளை உடைத்துச் சிறுகச்சிறுகக் கொல்வது, கல்லால் அடித்துக்கொல்வது என இன்னும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத வகைகளிலெல்லாம் மரண தண்டனையை நிறைவேற்றியிருக்கிறார்கள். முக்கியமாக இதையெல்லாம் பொது இடங்களில் திருவிழா கூட்டத்தைப் போல மக்களின் முன்பாக செய்திருக்கிறார்கள். குற்றவாளியின் வலியை ரசிப்பதும், அதிகாரத்தின் கொடூரத்தைப் பறைசாற்றுவதும், அதன் மூலமாக மக்களிடம் பயத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதும் இந்தச் செயல்களின் நோக்கமாக இருந்தன! இதனால் எல்லாம் குற்றங்கள் குறைந்ததாக எந்தப் புள்ளி விபரங்களுமில்லை. மாறாக, மக்களும் மனதளவில் கொடூரமானவர்களாக வேண்டுமானால் மாறியிருக்கக்கூடும். 

ஜனநாயகமும், அறிவியல் வளர்ச்சியும் வளரத் தொடங்கிய பின்னர்தான், இந்தக் கொடூரங்களுகெல்லாம் எதிராக சிந்தனைகள் மெல்ல எழத் தொடங்கின. 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பியச் சிந்தனையாளர்கள் இத்தகைய கொடூர தண்டனை முறைகளுக்கு எதிரான கருத்துகளை முன் வைத்தனர். இத்தாலியச் சிந்தனையாளர் செசரே பெக்காரியா (Cesare Beccaria) 1764-ல் எழுதிய 'On Crimes and Punishments' என்ற நூல்தான் முதலில், இவ்விசயத்தைப் பற்றிப் பேசி உலகின் மனசாட்சியைக் உலுக்கியது. 

அதன் பின்னர்தான், கொடூர மரணதண்டனைக்குப் பின்னாலிருக்கும் சித்திரவதையை மக்கள் உணர ஆரம்பித்தார்கள். சித்திரவதைகள் மூளையில் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் மனித உடல் அனுபவிக்கும் தாங்கொணா வலி குறித்த அறிவியல் புரிதல் வளர்ந்தபோது, அவை 'மனிதாபிமானமற்றவை' என்று நாகரீக சமூகத்தால் ஒதுக்கப்பட்டன.

அதன் பிறகு, மரணதண்டனைகளை நிறைவேற்ற வேறு நவீன வழிகள் சிந்திக்கப்பட்டன. 1780களில் கில்லட்டின் (Guillotine) எனும் சமத்துவ மரண தண்டனை கொண்டு வரப்பட்டது. வலியின்றி, விரைவாக, நாகரிகமாக கொல்லும் முறையாகக் கருதப்பட்ட கில்லட்டின், அதுவரை குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு, தண்டனை விதிக்கப்படும் 'அதிகார வர்க்க' கைதிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. மரணத்தில் கூட சமத்துவமின்மை நிலவிய காலமது. அதற்குப் பின்னர் கில்லட்டின் மரண தண்டனை அனைவருக்குமானதாக மாற்றப்பட்டது.

Willam Marwood The Long Drop

அடுத்து தூக்குத் தண்டனை முறை கொண்டுவரப்பட்டது. ஆரம்பத்தில் தூக்கிலிடப்படும்போது மூச்சுத்திணறி மெதுவாகவே உயிர் பிரியும் வண்ணமே அதன் செயல்முறை இருந்தது. இதுவும் மிகுந்த வலியைத் தரக்கூடியதுதான். 1870-களில் வில்லியம் மார்வுட் (William Marwood) போன்றவர்கள் 'The Long Drop' என்ற தூக்கு முறையைக் கொண்டு வந்தனர். இதில் கழுத்து எலும்பு உடனடியாக முறிக்கப்பட்டு, மூளைக்குச் செல்லும் உணர்வுகள் துண்டிக்கப்படும். இது 'விரைவான மரணம்' நடப்பதை ஓரளவுக்கு உறுதி செய்தது.

அடுத்து, 1890 களில் அமெரிக்காவில், தூக்குத் தண்டனை மற்றும் கில்லட்டினை விடவும் நவீனமான மற்றும் வலியற்ற ஒன்றாகக் கருதப்பட்ட மின்சார நாற்காலி முறை அறிமுகமானது. உடலில் அதிகப்படியான மின்சாரத்தைப் பாய்ச்சி இதயத்தையும், மூளையையும் ஒருங்கே உடனடியாகச் செயலிழக்கச் செய்வதே இதன் அடிப்படை. அதன் பின்னர் வந்தது நச்சு ஊசி! (Lethal Injection) 1970-82 இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், மரண தண்டனை என்பது ஒரு 'மருத்துவ நடைமுறை' போல மிக அமைதியாக இருக்க வேண்டும் என்று நச்சு ஊசி முறை கொண்டு வரப்பட்டது. முதலில் மயக்க மருந்து, பிறகு தசைகளைச் செயலிழக்கச் செய்யும் மருந்து, இறுதியில் இதயத்தை நிறுத்தும் மருந்து என ஒரு அறுவை சிகிச்சை நடப்பது போன்ற சூழலில் மரணத்தை வழங்கினார்கள். இதுதான் 'கண்ணியமான மரணம்' என்ற வாதத்தின் உச்சகட்டமாக இப்போதும் இருக்கிறது.

Cesare Beccaria

ஆனால், செசரே பெக்காரியா (Cesare Beccaria) 1764-ல் தொடங்கியது கண்ணியமான மரணம் வேண்டும் என்ற விவாதத்தை அல்ல, அவர் தொடங்கி வைத்தது மரணதண்டனைக்கே எதிரான விவாதத்தை!

பெக்காரியாவைத் தொடர்ந்து எண்ணற்ற சிந்தனையாளர்கள் மரண தண்டனைக்கு எதிரான கருத்துகளை வரலாறெங்கும் பகிர்ந்து வந்திருக்கிறார்கள். ரஷ்ய எழுத்தாளரான லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy :1828–1910), கிறிஸ்தவ அறநெறிகள் மற்றும் அகிம்சையின் அடிப்படையில் மரண தண்டனையை எதிர்த்தார். ‘மரண தண்டனை என்பது கடவுளின் அதிகாரத்தைப் பறிக்கும் செயல். ஒரு மனிதனைக் கொல்லும் அதிகாரம் மற்றொரு மனிதனுக்கோ அல்லது அரசுக்கோ கிடையாது’ என்று வாதிட்டார். வன்முறை மூலம் நீதியை நிலைநாட்ட முடியாது என்பது இவரது ஆணித்தரமான நம்பிக்கையாக இருந்தது.

நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு சிந்தனையாளரான ஆல்பர்ட் காம்யு (Albert Camus :1913–1960), 1957-ல் எழுதிய 'Reflections on the Guillotine' கட்டுரை நவீன காலத்தின் முக்கியமான தத்துவ ஆவணமாகக் கருதப்படுகிறது. ‘மரண தண்டனை என்பது குற்றவாளியை விட மோசமான ஒரு குற்றத்தை அரசு செய்வதாகும். ஒரு தனிமனிதன் ஆத்திரத்தில் ஒரு கொலை செய்கிறான் என்றால், அரசு பல மாதங்கள் திட்டமிட்டு, ஒரு தேதியைச் குறித்து ஒருவரைக் கொல்வது அதைவிடக் கொடூரமான வன்முறை’ என்று வாதிட்டார்.

நம் தேசப்பிதா மகாத்மா காந்தி (Mahatma Gandhi :1869–1948), நம் தண்டனைகள் 'சீர்திருத்தம்' சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ‘மரண தண்டனை என்பது ஒரு மனிதனைச் சீர்திருத்தும் வாய்ப்பை நிரந்தரமாகப் பறித்துவிடுகிறது. பாவம் செய்பவர்களை வெறுக்காமல், அந்தப் பாவத்தை ஒழிக்கும் வழிகாண வேண்டும்’ என்று அவர் போதித்தார். ’கண்ணுக்குக் கண் என்ற கொள்கை ஒட்டுமொத்த உலகத்தையும் குருடாக்கிவிடும்’ என்ற அவரது வாசகம் மரண தண்டனைக்கு எதிரான உலகளாவிய முழக்கமாக இன்றும் இருக்கிறது.

’மனிதன் தவறு செய்யக்கூடியவன், எனவே மனிதன் வழங்கும் நீதி ஒருபோதும் 'முழுமையானதாக' இருக்க முடியாது. முழுமையற்ற ஒரு நீதி அமைப்பு, ஒருவரின் உயிரைப் பறிக்கும் உரிமையைப் பெறக்கூடாது’
விக்டர் ஹியூகோ

பெக்காரியாவின் சிந்தனை பெறப்பட்ட நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, 1863-ல் வெனிசுலா உலகிலேயே முதல் நாடாக மரண தண்டனையை முழுமையாக ரத்து செய்தது. அதனைத் தொடர்ந்து போர்ச்சுகல், நெதர்லாந்து போன்ற நாடுகள் இந்த நாகரீகப் பாதையில் இணைந்தன. அதிலிருந்து சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், ஐக்கிய நாடுகள் சபை (UN), உருவாக்கிய மனித உரிமைகள் பிரகடனத்திற்குப் (1948) பிறகு, மரண தண்டனையை ஒழிப்பது என்பது ஒரு 'நாகரீக சமூகத்தின்' முதன்மை அடையாளமாக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டது. இன்று உலகின் மூன்றில் இரண்டு பங்கு, சுமார் 140 நாடுகள் மரணதண்டனையைச் சட்டபூர்வமாகவோ அல்லது நடைமுறையிலோ முழுமையாக ஒழித்துவிட்டன. இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் இன்னும் இதைத் தக்கவைத்திருந்தாலும், 'அரிதினும் அரிதான' (Rarest of Rare) வழக்குகளில் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்ற மிகக் கடுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்றுகின்றன. இவற்றில் தூக்கு, நச்சு ஊசி, மின்னிருக்கை போன்ற தண்டனை முறைகள் தற்சமயம் பின்பற்றப்படுகின்றன.

மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர், பலரும் 'நிரபராதி' என்று நிரூபிக்கப்பட்ட வரலாற்றுச் சம்பவங்கள் அனேகம் உண்டு. விக்டர் ஹியூகோ (Victor Hugo) போன்ற பிரஞ்சு சிந்தனையாளர்களின் கருத்து இவற்றை முன்னிறுத்தியே முக்கியத்துவம் பெறுகிறது. அவர், ’மனிதன் தவறு செய்யக்கூடியவன், எனவே மனிதன் வழங்கும் நீதி ஒருபோதும் 'முழுமையானதாக' இருக்க முடியாது. முழுமையற்ற ஒரு நீதி அமைப்பு, ஒருவரின் உயிரைப் பறிக்கும் உரிமையைப் பெறக்கூடாது’ என்பது ஹியூகோவின் கூற்று.

மரண தண்டனைக்கு எதிரான விவாதம் என்பது குற்றவாளிகளைப் பாதுகாக்கும் முயற்சி அல்ல, மாறாக, மனித சமூகம் எந்த அளவுக்கு தனது நவீன, நாகரீக மதிப்புகளை (Values) காப்பாற்றிக்கொள்ள விரும்புகிறது என்பதற்கான சோதனை. இப்படித் ’தவறுதலாக ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது’ எனும் அக்கறையில் விளையும் வாதம், ’கடவுளின் உரிமையை மனிதன் எடுத்துக்கொள்ளக்கூடாது’ எனும் நம்பிக்கையின் அடிப்படையிலான வாதம் போன்றவை ஒருபுறமிருந்தாலும், ஆல்பர்ட் காம்யு, காந்தி போன்றோரின் கூற்றுப்படி மனிதாபிமான அடிப்படையில், முதிர்ந்த நாகரீகமான மனிதன் செய்யக்கூடிய செயலா இது, சக மனிதனைக் கொல்வது காட்டுமிராண்டித்தனமான செயலல்லவா என்று சிந்திப்பதுதான் அவசியம் என்று தோன்றுகிறது. ஆனாலும், நிர்பயா வழக்கு, சாத்தான்குளம் வழக்கு போன்ற கொடூர நிகழ்வுகள் நடக்கும் போது, இத்தகைய காட்டுமிராண்டிகளிடம்கூட நாம் நமது மனிதாபிமானத்தையும், நாகரீகத்தையும் காட்டித்தான் ஆகவேண்டுமா என்ற சிந்தனை எழுவதையும் தவிர்க்க முடியவில்லை!

நாம் ஒன்றும் காந்தியோ, புத்தனோ இல்லை அல்லவா?!