ananthapuri express 
செய்திகள்

திருச்சி- திருவனந்தபுரம் மார்க்கத்தில் 130 கி.மீ வேகத்தில் ரயில்கள்!

தமிழகத்தில் பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் 80 கி.மீ வேகத்தில்தான் இயக்கப்படுகின்றன. தற்போது, தமிழகத்தில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

எம். குமரேசன்

வட இந்தியாவில் பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் சர்வசாதாரணமாக 130 கி.மீ வேகத்தில் இயக்கப்படுகின்றன. காரணம்... டிராக்குகள், சிக்னலிங் சிஸ்டம் அங்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை - அரக்கோணம் , சென்னை - கூடூர், அரக்கோணம்- ஜோலார்பேட்டை மார்கத்தில் மட்டுமே ரயில்கள் 130 கி.மீ வேகத்தில் இயக்கப்படுகின்றன. மற்றபடி, தமிழகத்தில் வந்தேபாரத் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் அதிபட்ச வேகம் 80 கி.மீ மட்டுமே. நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலின் சராசரி வேகம் 57 கி.மீதான். எனவே, தமிழகத்தில் திருச்சி- திருவனந்தபுரம் மற்றும் ஜோலார்பேட்டை - கோவை மார்க்கத்தில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க வேண்டுமென்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்தது. தற்போது, முதல் கட்டமாக திருச்சி - திருவனந்தபுரம் மார்க்கத்தில் ரயில்வே டிராக்குள், சிக்னலிங் சிஸ்டத்தை மேம்படுத்த தெற்கு ரயில்வே 92.31 கோடி ஒதுக்கியுள்ளது.

திருச்சி - திண்டுக்கல் இடையே உள்ள 96 கி.மீ பாதையை மேம்படுத்த 25.75 கோடி ஒதுக்கப்படடுள்ளது . திண்டுக்கல் - நெல்லை இடையே 220 கி.மீ பாதைக்கு 37.41 கோடியும் திருநெல்வேலி - திருவனந்தபுரம் இடையே உள்ள 142 கி.மீ பாதையை மேம்படுத்த 29.42 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, திருவனந்தபுரம்- காயம்குளம் 106 கி.மீ பாதையை மேம்படுத்தவும் 38 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

முதலில் திருச்சி- திருவனந்தபுரம் பாதையை மேம்படுத்தும் பணிகள் முடிந்ததும், திருவனந்தபுரம்- காயங்குளம் பாதையை மேம்படுத்தும் பணிகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதை மேம்படுத்தப்பட்டதும், ஆனந்தபுரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ரயில்கள் 130 கி.மீ வேகத்தில் இயக்கப்படவுள்ளன. படிப்படியாக தமிழகம் முழுவதுமே எக்ஸ்பிரஸ் ரயில்கள் 130 கி.மீ வேகத்தில் செல்ல டிராக்குகளை பலப்படுத்தும் பணிகள் தொடங்கவுள்ளன.

gatimaan express

வந்தேபாரத் ரயிலைத் தவிர , இன்ஜீன் இணைக்கப்பட்ட பல ரயில்கள் அதிவேகத்தில் செல்கின்றன. இந்தியாவில் கடந்த 2002 ம் ஆண்டு கொங்கன் பாதையில் எலக்ட்ரோ-மோட்டிவ் டீசல் WDP-4 வகை இன்ஜீனால் சோதனை ஓட்டத்தில் இயக்கப்பட்ட ரயில் 179 கி.மீ வேகத்தை முதன்முதலாக எட்டியது. கோவாவில் உள்ள மட்காவ்னிலிருந்து மும்பைக்கு அருகிலுள்ள ரோஹா வரையிலான 450 கி.மீ. தூரத்தை வெறும் மூன்றரை மணி நேரத்தில் அந்த ரயில் கடந்தது. இந்த ரயில்தான் இந்தியாவில் முதன் முதலில் அதிகபட்ச வேகத்தில் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் டெல்லி - ஆக்ரா நகரங்களுக்கிடையே ஓடும் கதிமான் எக்ஸ்பிரஸ் ரயில் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்கிறது. கடந்த 2016ம் ஆண்டு இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரயிலில் wap-5 ரக இன்ஜீன் பயன்படுத்தப்படுகிறது. இந்த இன்ஜீன் 5,500 குதிரைத்திறன் கொண்டது. இதனால், டெல்லி ஆக்ரா இடையே 232 கி.மீ தொலைவை ஒரு மணி நேரத்தில் கடந்து விடும். டெல்லிக்கும் - போபாலுக்கும் இடையில் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் சதாப்தி ரயில் இயங்கி வருகிறது. அதேபோல, தலைநகர் டெல்லியை நாட்டின் பல நகரங்களுடன் இணைக்கும் ராஜ்தானி ரயில்களும் மணிக்கு 140 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியவை.

தமிழகத்தைப் பொறுத்தவரை,சென்னை- மதுரை வந்தேபாரத், வைகை எக்ஸ்பிரஸ், சென்னை - மதுரை தேஜாஸ் ரயில்கள் அதிவேகமானவை. இந்த ரயில்கள் மணிக்கு 105 கி.மீ வேகத்தில் இயக்கப்படுகின்றன. சராசரி வேகம் 80 கி.மீ ஆகும்.