செய்திகள்

193 வயது 'ஜோனதானை' வம்புக்கிழுத்த வம்பர்கள்! #tortoise

உலகில் அதிக வயதான உயிரினமான ஜோனதான் இறந்து விட்டதாக, வதந்தி பரப்பப்பட்டுள்ளது. ஆனால், உண்மை நிலவரம் என்ன?

எம். குமரேசன்

உலகின் அதிக வயதில் வாழும் உயிரினம் ஜோனதான் என்ற ராட்சத ஆமை. இது, பிறந்த ஆண்டு 1832. கடந்த 1939ம் ஆண்டுதான் உலகில் முதல் புகைப்படம் எடுக்கப்பட்டது ஆனால், அதற்கு முன்னரே ஜோனதான் பிறந்துவிட்டது. 'சீஷெல்ஸ் ராட்சத ஆமை' (Seychelles giant tortoise) இனத்தை சேர்ந்த இந்த ஆமை 1882-ம் ஆண்டு சீஷெல்ஸ் தீவிலிருந்து தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள 'செயின்ட் ஹெலினா' தீவுக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, அதற்கு 50 வயதே ஆகியிருந்தது.

அங்குள்ள, ஆளுநர் மாளிகை வளாகத்தில் இந்த ஆமை அமைதியாக வாழ்ந்து வருகிறது. தற்போது, அதற்கு 193 வயதாகிவிட்டது. இதனால், ஜோனதானுக்கு இப்போது மோப்ப சக்தி இல்லை; பார்வையும் மங்கிவிட்டது. ஆனாலும், கால்நடை மருத்துவர்களின் அன்பான அரவணைப்பான கண்காணிப்பில் ஜோனதான் நன்றாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.

வெள்ளரிக்காய், கேரட், ஆப்பிள் மற்றும் வாழைப்பழம் போன்றவை ஜோனதானுக்கு பிடித்த உணவுகள். ஆமைகளின் ஆயுளை குறைப்பதில் மன அழுத்தம்தான் முக்கிய காரணியாக இருக்கிறது. இதனால் மக்கள் யாரும் ஜோனதான் அருகே அனுமதிக்கப்படுவதில்லை.

பொதுவாக, ராட்சத ஆமைகள் நீண்ட ஆயுள் கொண்டவை. ஆனால் , ஜோனதான் 193 வயதைத் தொட்டிருப்பது ஒரு விசித்திரமாகவே பார்க்கப்படுகிறது. கடந்த 2022-ம் ஆண்டு ஜோனதான் 190 வயதை அடைந்த போது, கின்னஸ் நிறுவனம், அதை உலகின் மிக வயதான நிலவாழ் உயிரினமாக அங்கீகரித்தது.

Jonathan the Giant Tortoise

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 1 ம் தேதி இந்த ஆமையின் முன்னாள் பராமரிப்பாளர்களில் ஒருவரான ஜோ ஹாலின்ஸ் என்பவரின் எக்ஸ் பக்கத்தில், 'ஜோனதான் ஹெலினா தீவில் அமைதியாக உயிரிழந்தது' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பல லட்சம் இரங்கல் செய்திகள் உலகம் முழுக்கவிருந்து குவிந்தது. ஆனால், உண்மையில் ஜோனதான் இறக்கவில்லை. உயிருடன்தான் இருக்கிறது. இத்தனைக்கும் ஜோ ஹாலின்சுக்கு எக்ஸ் பக்கமே கிடையாது. ஏப்ரல் 1ம் தேதி முட்டாள்கள் தினத்தை முன்னிட்டு, பிரேசிலில் இருந்து யாரோ ஒருவர் இந்தப் புரளியை கிளப்பியுள்ளார். வதந்தியைக் கிளப்பியவர், கிரிப்டோ காயின்களை நன்கொடையாக கேட்டதாக சொல்லப்படுகிறது.

இது குறித்து ஹெலினா தீவின் ஆளுநர், சர் நிகெல் பிலிப்ஸ் கூறுகையில், ''நான் நேற்று உறங்கத் தயாராகிக் கொண்டிருந்த போது, ஜோனதான் இறந்து விட்டதாக தொடர்ந்து, மெசேஜ் வந்துக் கொண்டிருந்தது. உடனடியாக, நான் வெளியே சென்று பார்த்தேன். அங்கே, ஜோனதான் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தான். 'நாளை காலை , நான் இறந்து விட்டதாக சொல்லப்பட்ட தகவல் வதந்தி' என்று உங்களுக்கு அவர் அறிக்கை வெளியிடுவார் ''என்று ககாமெடியாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த 1947ம் ஆண்டு மன்னர் ஆறாம் ஜார்ஜ், வருங்கால பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்துடன் செயின்ட் ஹெலினா தீவுக்கு வந்த போது, ஜோனதானை சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆமைகள் நீண்ட காலம் வாழ காரணம் என்ன?

ஆமைகளின் நீண்ட கால ஆயுளுக்குப் பல உயிரியல் காரணங்கள் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மெதுவான வளர்சிதை மாற்றம் , குறைந்த மன அழுத்தச் சூழல், நல்ல நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை காரணமாக ராட்சத ஆமைகள் 150 முதல் 200 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலும் வாழ்கின்றன. தற்போது , ஜோனதான் 400 பவுண்டுகள் எடையுள்ளது. பற்கள் நன்கு பலமாக இருக்கின்றன. அதனால், உணவை மென்று அழகாக சாப்பிடுகிறது. ஜோனதானுடன் சேர்ந்து மேலும் 3 ராட்சத ஆமைகள் செயின்ட் ஹெலினா தீவில் வசிக்கின்றன.