இந்தியாவின் முதல் புல்லட் ரயில், மும்பை மற்றும் அகமதாபாத் இடையே 508 கி.மீ தூரத்திற்கு இயக்கப்பட உள்ளது. இந்த அதிவேக ரயில் பாதையில் 2027ம் ஆண்டு முதல் கட்டமாக சூரத் மற்றும் வாபி இடையே ரயில்சேவை தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜப்பானின் ஷிங்காஷென் ரயில் இந்த சேவையில் களமிறக்கப்படுகிறது.
கடந்த 2011-ம் ஆண்டு இந்த ரக ரயில்களை ஜப்பான் ரயில்வே அறிமுகப்படுத்தியது. ஷிங்காஷென் ரயில்கள் மணிக்கு 320 கி.மீ வேகத்தில் பாய்ந்து செல்லக் கூடியவை. இதுபோன்ற 280 புல்லட் ரயில்கள் ஜப்பானிடம் உள்ளன. ஹிட்டாச்சி, கவாஸகி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்கள் ஷிங்காஷென் ரயில்களைத் தயாரிக்கின்றன. ஷிங்காஷென் ரயிலில், 10 கோச்சுகள்தான் இருக்கும். ஒரு ரயிலில் 731 பேர் பயணிக்க முடியும். சாதாரணப் பெட்டியில், 658 பேர் பயணிக்கலாம். முதல் வகுப்பில் 55 பேரும், கிரீன் க்ளாஸ் வகையில் 18 பேர் பயணிக்கலாம்.
இந்த புல்லட் ரயிலில் தாய்மார்கள் பால் கொடுக்கும் அறை, குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தனிக் கழிவறை வசதி அமைக்கப்பட்டிருக்கும். மும்பை - அகமதாபாத் நகரங்களுக்கிடையே சுமார் 12 ரயில் நிலையங்கள் உருவாக்கப்படுகிறது. அவற்றில், சூரத் மற்றும் வதோரா ஆகிய இரு நகரங்களில் மட்டும் ஷிங்காஷன் நின்று செல்லும். சரியாக 2 மணி 7 நிமிட நேரம்தான் பயண நேரம். தற்போது, மும்பையிலிருந்து அகமதாபாத் செல்ல 6 மணி முதல் 8 மணி நேரம் ஆகிறது. தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (NHSRCL) இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
எனினும், தொழில்நுட்பப் பிரச்னைகள் காரணமாக 2030 ம் ஆண்டு வரை, ஷிங்காஷென் ரயில் இந்த பாதையில் இயக்கப்படாது. அதற்கு பதிலாக, வந்தேபாரத் ரயில்களின் வேகத்தை 250 கி.மீக்கு உயர்த்தி இந்தப் பாதையில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, இரண்டுவந்தேபாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பாதையில் முழு வேகத்தில் வந்தேபாரத் ரயில்கள் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் சில ஆண்டுகளில், இந்தியாவில் பல நகரங்களுக்கும் இடையே புல்லட் ரயில்கள் ஓடவுள்ளன. சமீபத்தில், தமிழக அரசும் தமிழகத்தில் இருந்து புல்லட் ரயில்களை இயக்க சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. தென்னிந்தியாவின் முக்கியமான நகரங்களை இணைக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தலாம். அந்த வகையில், சென்னை - ஹைதராபாத் நகரங்களுக்கிடையே, தென்னிந்தியாவில் முதன் முதலாக புல்லட் இயக்கப்படலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து 744 கி.மீ தொலைவில் ஹைதராபாத் உள்ளது. சூப்பர் ஃபாஸ்ட் ரயிலில் பயண நேரம் 12 மணி நேரமாக இருக்கிறது. புல்லட் ரயில் இயக்கப்பட்டால், இரண்டரை மணி நேரமாகப் பயண நேரம் குறைந்து விடும்.
அடுத்ததாக, சென்னை முதல் திருவனந்தபுரம் , கொச்சி நகரங்களுக்கிடையே, புல்லட் ரயில் பாதை ஏற்படுத்தும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. சென்னை - திருவனந்தபுரம் பாதை திருச்சி, நெல்லை, நாகர்கோவில் வழியாக அமைக்கப்படும். சென்னை - கொச்சி பாதை சேலம், கோவை வழியாக அமைக்கப்படவுள்ளது. இந்தத் திட்டங்களை அமல்படுத்த தெலங்கானா மற்றும் கேரள மாநிலங்களின் ஒத்துழைப்பையும் தமிழக அரசு எதிர்பார்க்கிறது. தமிழக, தெலங்கனா மற்றும் கேரள எம்.பிக்கள் இந்த விஷயத்தில் ஒற்றுமையாக இருந்து புல்லட் ரயில் திட்டத்தை விரைவில் சாத்தியப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே ரயில் பயணத்தை விரும்புபவர்களின் வேண்டுகோளாக உள்ளது.