ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரை 'பிங்க் சிட்டி' என்று அழைப்பார்கள். ஏனென்றால், இந்த நகரின் பல கட்டடங்கள் இளஞ்சிவப்பு வண்ணத்தில்தான் இருக்கும். இந்த நிலையில், ஜெய்ப்பூரில் யானை ஒன்றுக்கு பிங்க் வண்ணம் பூசி வீடியோ எடுத்த ரஷ்யப் பெண் புகைப்படக் கலைஞரால் சர்ச்சை வெடித்துள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஜூலியா புருலேவா, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெறும் கண்காட்சியில் பங்கேற்க வந்திருந்தார். ஜெய்ப்பூருக்கு 'பிங்க் சிட்டி' என்ற செல்லப் பெயர் உள்ளதால், புருலேவாவுக்கு ஒரு ஐடியா உதித்தது. பிங்க் சிட்டியின் அடையாளங்களில் ஒன்றான யானையை கொண்டு வித்தியாசமான முறையில் ஒரு வீடியோ எடுக்க முடிவு செய்தார். யானை ஒன்றை வாடகைக்குப் பிடித்து பிங்க் வணணம் பூசி , அதன் மேல் அமர்ந்து வீடியோ எடுக்கத் திட்டமிட்டார். பிங்க் நிறம் பூச ஒப்புக் கொள்ளும் யானை உரிமையாளரை தேடிப் பிடித்தார். தொடர்ந்து, அந்த யானையின் உடல் முழுவதும் பிங்க் வண்ணம் பூசப்பட்டது. தன் மீதும் புருலேவா பிங்க் வண்ணம் பூசிக் கொண்டார். பின்னர், யானை மேல் அமர்ந்து புருலேவா பல விதங்களில் போஸ் கொடுத்தார். யானைக்கு சாப்பிட, பழமும் கொடுத்தார்.
பின்னர், அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புருலேவா வெளியிட்டு சில தகவல்களை பகிர்ந்திருந்தார். அதில், ''பல வாரங்களாக நான் ஜெய்ப்பூரில் தங்கி சுற்றி பார்த்தேன். இந்த நகரத்தில் பிங்க் வண்ணம் எனக்குப் பிடித்திருந்தது. இந்த நகரத்தின் கலாசாரத்துடன் யானையும் பின்னிப் பிணைந்துள்து. இதனால், பிங்க் மற்றும் யானை ஆகியவற்றைக் கருவாகக் கொண்டு வீடியோ எடுக்க முடிவு செய்தேன். யானைகள் வளர்க்கும் பலரைச் சந்தித்து பேசினேன். முறையான அனுமதி வாங்கியே அனைத்தையும் செய்தேன். யாருமே இல்லாத கைவிடப்பட்ட ஒரு விநாயகர் கோயிலில் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல்தான், வீடியோவும் எடுக்கப்பட்டது. யானையின் மீது பூசப்பட்ட வண்ணம் கூட ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்பட்டதுதான். உள்ளூர் மக்களின் அறிவுரைப்படித்தான், அந்த வண்ணத்தைக் கூட நான் வாங்கினேன். பாகன்களின் முழு ஒத்துழைப்புடன் இந்த வீடியோவை நான் எடுத்தேன். இதில், எந்த விதிமீறலும் இல்லை'' என்று கூறியிருந்தார்.
எனினும், இந்த வீடியோ வெளியான நிலையில் நாடெங்கும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இது கலை அல்ல, பிராணிகள் வதை என சமூகவலைதளத்தில் கடுமையான விமர்சனம் எழுந்தது. ''உயிருடனுள்ள யானை மீது வண்ணத்தைப் பூசி, ஒரு உயிரினத்தை கண்டெட் கிரியேஷனுக்கு பயன்படுத்தியது முற்றிலும் தவறு. நீங்கள் செய்த இந்த காரியத்தால், அந்த யானைக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டிருக்கும்'' என்றும் விமர்சித்திருந்தனர். தன் மீது கடுமையான விமர்சனம் எழுந்ததால், புருலேவா 'ஹிந்துஸ்தான் டைம்ஸ் ' பத்திரிகைக்கு ஒரு விளக்கமளித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது, ''நான் யானை மீது அடித்த வண்ணத்தில் அதற்கு தீமை விளைவிக்கும் எந்தப் பொருளும் இடம் பெறவில்லை உடனடியாக, அதை தண்ணீரால் கழுவி விடலாம். ஏஐ போன்ற டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்தி நான் விஷுவல் கண்டென்ட் தயாரிக்க விரும்பவில்லை. உயிருள்ள பொருட்களைக் கொண்டு, ரியலான கண்டென்ட்களை மட்டுமே தயாரிக்க விரும்பினேன். அந்த யானைக்கு எங்களால் எந்த விதத்திலும் தீங்கு நடக்கவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.
யானையின் உரிமையாளர் சாதிக் கான் கூறுகையில், ''இந்த யானை ரெய்டுக்கு பயன்படுத்துவதில்லை. 65 வயதான முதிர்ந்த பெண் யானை. 10 நிமிடம் மட்டுமே நாங்கள் வீடியோ எடுக்க அனுமதித்தோம். உடனடியாக, யானை மேல் பூசப்பட்ட வண்ணத்தையும் தண்ணீரால் கழுவி சுத்தம் செய்து விட்டோம்'' என்கிறார்.
யானைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுவது ஏன்?
யானைகள் சுதந்திரமாக இருக்க முடியாத பட்சத்தில் கடும் மன அழுத்தத்தை சந்திக்கும். பட்டாசு சத்தம், தீப் பந்தம் , இரு சக்கர வாகனங்களின் சத்தம் போன்றவை யானைகளுக்கு எரிச்சலை ஏற்படுத்துபவை. உணவு மற்றும் நீர் பற்றாக்குறை, காடுகள் அழிக்கப்படுவது , வழித்தடங்கள் அழிக்கப்படும் போது, யானைகள் மிகுந்த மன அழுத்ததுக்கு உள்ளாகின்றன. கோயில் யானைகளும் இது போன்ற காரணங்களால்தான், மனிதர்களை தாக்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.