iran last king his wife Farah and childrens  wikipedia
செய்திகள்

வெளியே தென்பட்ட ஈரானின் கடைசி அரசி! #FarahPahlavi

ஈரான் மற்றும் அமெரிக்கா , இஸ்ரேலிய நாடுகளுக்கிடையேயான போர் நடந்து கொண்டிருக்கையில், ஈரான் நாட்டின் கடைசி அரசியான ஃபாரா பகலவி செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார்.

எம். குமரேசன்

ஈரான் நாட்டின் கடைசி அரசியான ஃபாரா பகலவி செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்து, மீண்டும் செய்திகளில் அடிபடத் தொடங்கியுள்ளார்.

ஈரான் நாட்டில் தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் 1979ம் ஆண்டில் அதிகாரத்துக்கு வந்தவர்கள். ஈரான் நாட்டில் 1925ம் ஆண்டு முதல் பகலவி வம்சத்தின் மன்னராட்சி நடந்தது. ஈரான் நாட்டை ஆண்ட கடைசி மன்னர் வம்சம் பகலவி ஆகும். முகமது ரேசா ஷா பகலவி அந்த நாட்டின் கடைசி மன்னர் ஆவார். 1979 ம் ஆண்டில் நடைபெற்ற ஈரானியப் புரட்சியின் போது, ஈரானில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. இதனால், மன்னர் முகமது ரேசா ஷா வெளிநாடுகளில் குடும்பத்துடன் தஞ்சமடைந்தார். ஈரானில் ஆட்சியை கைப்பற்றிய புரட்சிப்படையினர் , எப்போது வேண்டுமானாலும் தங்களைக் கொல்லலாம் என்று அவர் கருதியதால், ஒரே நாட்டில் நிலையாக அரசியல் தஞ்சமடையவில்லை. எகிப்து, மொராக்கோ, மெக்ஸிகோ, பஹாமாஸ், அமெரிக்கா என்று பல நாடுகளுக்கு அவர் இடம் பெயர்ந்து கொண்டிருந்தார். இவரது, மூன்று மனைவிகளில் கடைசி மனைவிதான் ஃபாரா பகலவி. இவர்தான் ஈரான் நாட்டின் கடைசி அரசி ஆவார்.

Farah with Egyptian actress Soad Hosny

டெஹ்ரான் நகரில் பணக்கார குடும்பத்தில் பிறந்த ஃபாரா, பாரீசில் கட்டடக்கலை பயின்ற போது, ஈரான் மன்னருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. 1959ம் ஆண்டு தனது 21 வயதில் முகமது ரேஷா ஷாவை திருமணமும் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உண்டு . ஈரான் நாட்டில் பல்வேறு மக்கள் நலப்பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கெண்டார். ஈரானிய பாரம்பரியக் கலைகள் மீதும் அதீத ஆர்வம் கொண்டிருந்தார். எனினும், ஈரானியப் புரட்சியின் போது, கணவருடன் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது.

ஈரானில் புரட்சி வெடித்த போது, முதலில் ஈரான் மன்னர் தனது மனைவி ஃபாரா மற்றும் குழந்தைகளுடன் எகிப்தில் தஞ்சமடைந்தார். பதவியை இழந்த ஒரே ஆண்டில் மன்னரின் உடல்நிலை மோசமடைந்ததால், அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க அனுமதிக்கப்பட்டார். பின்னர், மீண்டும் எகிப்து திரும்பிய நிலையில், 1980ம் ஆண்டு ஈரான் மன்னர் மரணித்தார். 1981ம் ஆண்டு ரொனால்ட் ரீகன் அமெரிக்க அதிபராக இருந்த போது, 'ஃபாரா அமெரிக்காவுக்கு வரத் தடையில்லை... நாங்கள் அவரை மனதார வரவேற்கிறாம்' என்று அறிவித்தார். தொடர்ந்து, குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறினார். தனக்கு அரசியல் தஞ்சம் அளித்த ரொனால்ட் ரீகன் மீது அவருக்கு தனிப் பற்று இருந்தது. 2004ம் ஆண்டு ரொனால்ட் ரீகன் மறைந்தபோது, அவரின் இறுதிச்சடங்கிலும் ஃபாரா பங்கேற்றார்.

தற்போது, 87 வயதாகும் அவர் பாரீஸ் மற்றும் அமெரிக்காவில் மாறி மாறி வசிக்கிறார். அமெரிக்காவில் மேரிலேண்ட் பகுதியில் அவருக்குச் சொந்த வீடும் உள்ளது.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதலில் உச்சபட்சத்தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, ஏஎஃப்‌பி செய்தி நிறுவனம் ஃபாரா பகலவியிடத்தில் பேட்டி கண்டது. அப்போது அவர் கூறுகையில், “அதிகாரக் கட்டமைப்பில் ஒரு மனிதர் எவ்வளவு முக்கியமானவராக இருந்தாலும், அவர் மறைந்து விட்டால், அந்த அமைப்பு அழிந்து விட்டதாக கருதிவிட முடியாது. உலகநாடுகள் ஈரானின் இறையாண்மையை மதிக்க வேண்டும். ஈரான் மக்களிடத்தில் முடிவெடுக்கும் உரிமையை சர்வதேச நாடுகள் விட்டு விட வேண்டும். அமைதியான, ஒழுங்கான மற்றும் இறையாண்மையுடன் கூடிய ஒரு மாற்றத்தை நோக்கி ஈரானிய மக்கள் பயணிக்க வேண்டும். எனது மகன் ரேஷா பகலவி, ஈரானுக்கு தகுதியான ஒரு மாற்றுத் தலைவராக இருப்பார் , இதற்காக, அவர் தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளார் '' என்றார்.