AI Representation of INS Khukri  AI GENERATED
செய்திகள்

இந்தியா இழந்த ஒரே போர்க்கப்பல்... எப்போது? #INSKhukri #IRIS Dena

இந்திய பல போர்களை நடத்தினாலும், ஒரே ஒரு கப்பலைதான் போரில் இழந்தது. அதுதான் ஐ.என்.எஸ். குக்ரி .

எம். குமரேசன்

ஈரான் கடற்படைக்குச் சொந்தமான 'IRIS Dena' என்ற போர்க்கப்பல், நேற்று இலங்கையின் தெற்குப் பகுதியில் சர்வதேச கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அமெரிக்காவின் தாக்குதலுக்குள்ளானது. இந்தத் தாக்குதலில் கப்பல் மூழ்கியதாக தெரிகிறது. கப்பலில் 180பேர் இருந்துள்ளனர். இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு இலங்கை மீட்புப்படையினர் சென்ற போது, கடலின் மேல் பகுதியில் எண்ணெய் மட்டுமே கொட்டிக் கிடந்ததை மட்டுமே கண்டுள்ளனர். 87 சடலங்களை மீட்டுள்ளனர். கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 32 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இலங்கையிலுள்ள காலி நகர அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஈரான் கப்பல் தாக்கப்பட்டது போன்றே , இந்திய கப்பல் ஒன்றும் 1971ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் மூழ்கடிக்கப்பட்டது. போரில் இந்தியா இழந்த ஒரே கப்பல் இதுதான். அந்த கப்பலை இந்தியா இழந்தது எப்படி ?

captain Mahendra Nath Mulla

பாகிஸ்தானுக்கு எதிரான அந்தப் போரின் போது, இந்திய கடற்படை கராச்சியை சுற்றி வளைத்துத் தாக்கின. இந்த சமயத்தில் குஜராத்தின் டியோ துறைமுகத்தில் இருந்து 56 கி.மீ தொலைவில் பாகிஸ்தானின் நீர்மூழ்கிக் கப்பல் நடமாடுவதாக தகவல் கிடைத்தது. அதை கண்டுபிடித்து அழிக்கும் பணியில் இந்தியப் போர்க்கப்பல்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. 1971ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி ஐ.என்.எஸ். குக்ரி உள்ளிட்ட 3 இந்திய போர்க்கப்பல்கள் அரபிக்கடலில் பாகிஸ்தான் நீர்மூழ்கிக் கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. அப்போது, சுமார் 64 கி.மீ தொலைவில் இருந்து பாகிஸ்தானின் நீர் மூழ்கிக்கப்பலான பி.என்.எஸ் ஹாங்கர், டர்பிடோ ஒன்றை ஏவியது. இது, ஐ.என்.எஸ் குக்ரியை தாக்க, பெரும் தீ பற்றியது. அடுத்தடுத்து ஹாங்கர் மேலும் இரண்டு டர்பிடோக்களை ஏவியது.

இதனால், ஐ.என்.எஸ் குக்ரி கடலில் மூழ்கத் தொடங்கியது. இந்த தாக்குதலில் 18 கடற்படை அதிகாரிகளும் 178 இந்திய மாலுமிகளும் பலியாகினர். இந்தக் கப்பலின் கேப்டன் மகேந்திர நாத் முல்லா, கப்பலில் இருந்து வெளியேற மறுத்து தனது சக அதிகாரிகளுடனும் மாலுமிகளுடன் உயிரைத் துறந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது போர்க்கப்பலுடன் கடலில் மூழ்கிய ஒரே இந்திய போர்க்கப்பல் கேப்டன் முல்லா என்பது குறிப்பிடத்தக்கது. உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அவரது வீரத்தையும், தலைமைப்பண்பையும் பாராட்டி இந்திய ராணுவத்தின் இரண்டாவது உயரிய விருதான மகாவீர் சக்ரா வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகும், இந்தியா சுதந்திரமடைந்த பிறகும் உலகிலேயே நீர்மூழ்கிக் கப்பலின் ஏவுகணை தாக்குதலில் சிக்கி மூழ்கிய முதல் கப்பல் ஐ.என்.எஸ். குக்ரிதான். போரில் இந்திய கடற்படை இழந்த முதலும் கடைசியுமான போர்க்கப்பலும் இதுதான். இந்தியக் கடற்படை வரலாற்றில் பதிந்த ஆழமான வடுவாக இந்த சம்பவத்தை கூறலாம். வங்கதேசத்துக்கு ஆதரவாக இந்தியா நடத்திய இந்த போரில், பின்னர் பாகிஸ்தான் தனது 93 ஆயிரம் படை வீரர்களுடன் சரணடைந்தது என்பது வரலாறு.

attackon IRIS Dena

கேப்டன் மகேந்திரநாத் முல்லா மற்றும் இந்திய கடற்படை வீரர்களின் வீரத்தை போற்றும் வகையில் , கடந்த 1999ம் ஆண்டு டியோவிலுள்ள சக்ரடிர்த் பீச்சில் குக்ரி கப்பலின் மாடல் அரேபியக்கடலை பார்த்தபடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எஸ் குக்ரிக்கு பிறகு நீர்மூழ்கிக்கப்பலின் டர்பிடோ தாக்குதலில் சிக்கிய இரண்டாவது கப்பல் ஈரானிய கப்பல்தான். இந்தியாவின் அழைப்பின் பேரில், விசாகப்பட்டினத்தில் கடற்படை பயிற்சியில் இது, பங்கேற்று விட்டு தாய் நாடு நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது, இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்தப் பயிற்சியில் அமெரிக்கா உள்ளிட்ட 74 நாடுகள் பங்கேற்றிருந்தன என்பதும் கூடுதல் தகவல். இராண்டாம் உலகப் போருக்கு பிறகு, இந்தியப் பெருங்கடலில் போர்க்கப்பல் ஒன்று டர்பிடோவால் மூழ்கடிக்கப்பட்டதும் இதுதான் முதன்முறை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தக் கப்பலுடன் சேர்த்து அமெரிக்காவுக்கு எதிரான இந்த போரில் ஈரான் 17 கப்பல்களை இழந்துள்ளது.