Luggage 
செய்திகள்

இனி சகட்டுமேனிக்கு ரயிலில் லக்கேஜ் எடுத்து செல்ல முடியாது!

இனி சகட்டுமேனிக்கு ரயிலில் லக்கேஜ் எடுத்து செல்ல முடியாது...வந்தாச்சு கடிவாளம்!

எம். குமரேசன்

இதுவரை, இந்தியாவில் ரயில் பயணத்தின் போது, எவ்வளவு லக்கேஜ் வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம் என்கிற நிலை இருந்தது. இதனால், பயணிகள் எதைப்பற்றியும் யோசிக்காமல் சகட்டுமேனிக்கு லக்கேஜ்களை எடுத்து செல்வார்கள். ஆனால், இப்போது,  முதன்முறையாக சகட்டுமேனி லக்கேஜுக்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது. ஆமாம்... இனிமேல் விமான நிலையங்களில் கடைபிடிப்பது போல, பயணிகள் குறிப்பிட்ட எடையளவு கொண்ட லக்கேஜ்களை மட்டுமே எடுத்து செல்ல ரயிலில் அனுமதிக்கப்படுவார்கள். இதனால், பயணிகள் ரயில் புறப்படுவதற்கு சற்று முன்னரே வந்து ரயில் நிலையங்களிலுள்ள எடைமெஷின்களில் கொண்டு வரும் லக்கேஜூகளை எடை போட்டுக் கொள்ள வேண்டும். 

railway luggage

நிர்ணயிக்கப்பட்ட அளவை விட,கூடுதல் லக்கேஜூகள் இருந்தால், கூடுதல் தொகை செலுத்த வேண்டியது இருக்கும். அதன்படி, பொதுப்பெட்டியில் 35 கிலோ ,படுக்கைவசதி கொண்ட பெட்டியில் 40 கிலோ, ஏசி 3 டயர் 40 கிலோ, ஏசி 2 டயர் 50 கிலோ , ஏ.சி முதல் வகுப்பு 70 கிலோ வரை லக்கேஜூகளை கொண்டு செல்ல முடியும். இதற்கு மேல் லக்கேஜூகளை எடுத்து வந்தால், ஒவ்வொரு கிலோவுக்கும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும். கூடுதல் லக்கேஜூகளுக்கான கட்டண விவரங்களை விரைவில் இந்திய ரயில்வே அறிவிக்கவுள்ளது . முதன்முறையாக இந்த விதி பிரயாக்ராஜ், மிர்ஷாபூர், டுன்ட்லா, அலிகார், எடாவா ஆகிய ரயில் நிலையங்களில் அமலாகிறது.

இது குறித்து வடக்கு மத்திய ரயில்வேயின் சீனியர் டிவிஷனல் கமர்ஷியல் மேலாளர் ஹிமான்சு சுக்லா கூறுகையில், பயணிகளின் நீண்ட நேர பயணத்தை சொகுசானதாகவும் இலகுவானதாகவும் மாற்றவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், ரயில் பயணத்தின் போது, பெட்டிகளில் நெருக்கடி குறையும். லக்கேஜுகளால் இட நெருக்கடி ஏற்படுவதும் குறைந்து விடும் என்கிறார்.